Wednesday, December 14, 2022

V.028 - இலிங்கபந்தம் - எங்கள் சிவன் என்று இயம்பு

2015-03-30

V.028 - இலிங்கபந்தம் - எங்கள் சிவன் என்று இயம்பு

-------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)



படத்தில் எழுத்துகளைப் படிக்கும் வரிசை:

படத்தின் அடிப்பகுதியில் உள்ள கட்டங்களில் இடப்பக்கத்து மூலையில் தொடங்கி இடம்வலமாகப் படித்துப், பின் அதன்மேலுள்ள அடுத்த வரியில் வலமிடமாகப் படித்துப், பின் அதன்மேலுள்ள அடுத்த வரியில் இடம்வலமாகப் படித்து, இப்படியே உச்சி வரை சென்று, அங்கிருந்து நடுவே மேலிருந்து கீழாக இறங்கிப் படிக்கவும்.


எங்கு முழிபுரங்க ளெரியச் சரம்பிடித்தா

னங்கையதில் மான்மறியன் மன்னனெவ்வ மானநசி

செங்கண்வெள் ளேறுகந்த சேவகன் வானதி

தங்குபிறங் குஞ்சடையா னெங்கள்சிவ னென்றியம்பு.


பதம் பிரித்து:

எங்கும் உழி புரங்கள் எரியச் சரம் பிடித்தான்,

அங்கையதில், மான்மறியன்; மன்னன்; எவ்வமான நசி,

செங்கண்-வெள் ஏறு உகந்த சேவகன்; வானதி

தங்கு பிறங்குஞ் சடையான் எங்கள் சிவன் என்று இயம்பு.


எங்கும் உழி புரங்கள் எரியச் சரம் பிடித்தான் (அங்கையதில்) - எவ்விடமும் அலைந்த முப்புரங்கள் எரியும்படி கையில் ஒரு கணையைப் பற்றியவன்; (உழிதல் - அலைதல்); (சரம் - அம்பு); (அங்கையதில் - இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளுமாறு வந்தது);

அங்கையதில் மான்மறியன் - கையில் மான்கன்றை ஏந்தியவன்; (மறி - கன்று);

மன்னன் - தலைவன்;

எவ்வமான நசி, செங்கண்-வெள்-ஏறு உகந்த சேவகன் - (பக்தர்களது) துன்பத்தை அழிக்கின்ற, சினம் மிகுந்த வெள்ளை இடபத்தை ஊர்தியாக விரும்பிய வீரன்; (எவ்வம் - துன்பம்); (நசித்தல் - அழித்தல்); (சேவகன் - வீரன்);

வானதி தங்கு பிறங்கும் சடையான் எங்கள் சிவன் என்று இயம்பு - கங்கை தங்குகின்ற, ஒளிவீசும் சடையை உடையவன் எங்கள் சிவபெருமான் என்று சொல்; (வானதி - கங்கை); (பிறங்குதல் - விளங்குதல்);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment