இராமநவமி ஸ்பெஷல்!
2014-04-08
S.145 - சிவன் - இராமன் - சிலேடை
-------------
ஏறு மரவுரியுந் தாங்கி இராவணன்தன்
வீறு கெடுத்த விறலுடையான் - நாறு
மலர்க்குழலி கூறுமான் மாய்வில்லான் திங்கள்
தலைக்கணிந்தான் தாசரதி தான்.
சொற்பொருள்:
ஏறு மரவுரியும் - 1. ஏறு, மரவுரியும்; / 2. ஏறும் அரவு உரியும்;
ஏறு - 1. ஆண் சிங்கம் போன்றவன்; / 2. இடபம்;
ஏறுதல் - மேலேறுதல்;
தாங்குதல் - சுமத்தல்; அணிதல்;
மரவுரி - மரப்பட்டையால் ஆன உடை;
உரி - தோல்;
வீறு - 1. வெற்றி; / 2. கருவம்; சிறப்பு;
விறல் - 1. வீரம்; / 2. வலிமை;
கூறு - 1. கூறுதல்; / 2. பாகம்;
மான் - 1. மான் என்ற மிருகம்; / 2. பெரியோன்; தலைவன்;
மாய்வில்லான் - 1. மாய் + வில்லான் / 2. மாய்வு + இல்லான்;
மாய்த்தல் - கொல்லுதல்;
மாய்வு - சாவு;
தாசரதி - [தசரதர் புத்திரன்] இராமன்;
இராமன்:
ஏறு - ஆண் சிங்கம் போன்றவன்;
மரவுரியும் தாங்கி - மரவுரியும் தரித்தவன்; மரவுரியும் அணிந்து;
இராவணன்தன் வீறு கெடுத்த விறல் உடையான் - போரில் இராவணனை வென்றவன்;
நாறு மலர்க்குழலி கூறு மான் மாய் வில்லான் - வாசம் கமழும் கூந்தலை உடைய சீதை சொன்ன மானைப் பிடிக்கச் சென்று முடிவில் அதனைக் கொன்ற வில்லை ஏந்தியவன்;
தாசரதி - தசரதன் மகனான இராமன்.
சிவன்:
ஏறும் அரவு உரியும் தாங்கி - ஏறும் அரவு தாங்கி, உரியும் தாங்கி - ஏறுகின்ற பாம்பைத் தாங்கியவன்; தோலையும் தரித்தவன்; (அரவு - அரவும் - உம்மைத்தொகை);
இராவணன்தன் வீறு கெடுத்த விறல் உடையான் - இராவணனின் கர்வத்தை (மலர்ப்பாதவிரலை ஊன்றி நசுக்கி) அழித்த வலிமை உடையவன்; ("விரல்" என்பது சிலேடை நோக்கி இங்கே "விறல்" என்று திரிந்தது என்றுகொண்டும் பொருள்கொள்ளலாம்);
நாறு மலர்க்குழலி கூறு மான் - வாசம் கமழும் கூந்தலை உடைய உமையை ஒரு கூறாக உடைய தலைவன்;
மாய்வு இல்லான் - இறப்பு இல்லாதவன்;
திங்கள் தலைக்கு அணிந்தான் - சந்திரசேகரன்;
வி. சுப்பிரமணியன்
----------- -----------
மிகவும் அருமையான பதிவு. சிவ சிவ . ராம ராம.
ReplyDelete