Tuesday, December 13, 2022

M.061 - பணியாரம் - பூண்டானஞ்சு - மடக்கு

2014-10-24

M.061 - பணியாரம் - பூண்டானஞ்சு - மடக்கு

-------------

பணியாரம் உண்பதற்கே நாவுடையார் பாடிப்

பணியாரம் பொற்சடையான் பாதம் - பணியாரம்

பூண்டானஞ் சாடும் புனிதன்பேர் நாவேநீ

பூண்டானஞ் சுள்ளவினை போம்.


பதம் பிரித்து:

பணியாரம் உண்பதற்கே நா உடையார், பாடிப்

பணியார் அம்-பொற்சடையான் பாதம்; பணி-ஆரம்

பூண்டு ஆனஞ்சு ஆடும் புனிதன் பேர், நாவே, நீ

பூண்டால் நஞ்சு உள்ள வினை போம்.


சொற்பொருள்:

பணியாரம் - 1. ஒருவகைத் தின்பண்டம்; 2. பணியார் + அம்; 3. பணி+ஆரம் (பாம்பு மாலை);

பூண்டானஞ்சு - 1. பூண்டு ஆனஞ்சு; 2. பூண்டால் நஞ்சு;

ஆனஞ்சு - ஆன்அஞ்சு - பஞ்சகவ்வியம் - பால், தயிர், நெய், முதலியன;


பணியாரம் உண்பதற்கே நாவுடையார் பாடிப் பணியார் அம்-பொற்சடையான் பாதம் - அழகிய பொன் போன்ற சடையுடையவன் திருவடிகளைச் சிலர் (வாயாரப்) பாடிப் வணங்கமாட்டார்; (அவர்கள்) உணவு உண்பதற்கே நாக்கு உடையவர்கள்; (அம் - அழகு);

பணி-ஆரம் பூண்டு ஆனஞ்சு ஆடும் புனிதன் பேர், நாவே, நீ பூண்டால் நஞ்சு உள்ள வினை போம் - பாம்பை மாலையாக அணிந்து, பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் (பஞ்சகவ்வியத்தால்) அபிஷேகம் ஏற்கும் தூயவன் திருநாமத்தை, நாவே, நீ அணிந்தால் உள்ள வினைகள் நைந்து அழியும். (பணி - நாகம்); (ஆரம் - மாலை); (நஞ்சு உள்ள வினை போம் - 1. உள்ள வினை நஞ்சு போம்; 2. "நஞ்சை உள்ளடக்கிய வினை" - "நமக்குக் கெடுதல் செய்யும் தீயவினை" என்றும் கொள்ளலாம்); (நஞ்சு - நைந்து - மெலிந்து; 2. விஷம்);

(சம்பந்தர் தேவரம் - 1.91.4 - "உய்யல் உறுவீர்காள் ஐயன் ஆரூரைக் கையினால் தொழ நையும் வினைதானே"); (அப்பர் தேவாரம் - 5.5.5 - "ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப் போம் நமதுள்ள வினைகளே");


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment