2015-05-07
N.031 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2015
--------------
(2 பாடல்கள்)
1) ------ நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா -----
மழுவாளி மலரடியில் வண்டமிழ்கள் பலசாத்தித்
தொழுவாரம் மலிநெஞ்சர் தூநீற்று மேனியராய்
உழவாரப் படையேந்தி ஓயாமற் பணிசெய்து
வழுவாரா வழிகாட்டு வாகீசர் தாள்போற்றி.
மழுவாளி மலரடியில் வண்தமிழ்கள் பல சாத்தித் தொழு வாரம் மலி நெஞ்சர் - மழுவாள் ஏந்திய சிவபெருமான் மலர்ப்பாதத்தில் பல தேவாரப்பாடல்களைச் சூட்டி வணங்கிய அன்பு மிகுந்த நெஞ்சம் உடையவர்; (வாரம் - அன்பு);
தூநீற்று மேனியராய் உழவாரப்படை ஏந்தி ஓயாமற் பணிசெய்து - தூய திருநீற்றை உடலில் பூசிக், கையில் உழவாரத்தை ஏந்தி இடைவிடாமல் திருத்தொண்டு செய்து;
வழு வாரா வழிகாட்டு வாகீசர் தாள் போற்றி - குற்றங்கள் அடையாத நெறியை நமக்குக் காட்டும் திருநாவுக்கரசரது திருவடிக்கு வணக்கம்; (வழு - குற்றம்); (வாகீசர் - திருநாவுக்கரசர்);
2) ------ அறுசீர் விருத்தம் (மா மா காய் - அரையடி வாய்பாடு) -----
பண்ணார் தமிழால் பரமனையே .. பாடிப் பணிந்தார் அரன்பாதம்
நண்ணாச் சமணர் ஒளித்திட்ட .. நம்பன் தளியைக் கண்டுதொழா(து)
உண்ணேன் என்று பழையாறை .. ஊரில் தவம்செய்(து) அதுமீட்டு
மண்ணோர் போற்றத் தந்தருள்செய் .. வாக்கின் மன்னர் பதம்போற்றி.
பண் ஆர் தமிழால் பரமனையே பாடிப் பணிந்தார் - பண் பொருந்திய பாமாலைகளால் ஈசனையே போற்றி வணங்கியவர்;
"அரன்-பாதம் நண்ணாச் சமணர் ஒளித்திட்ட நம்பன்-தளியைக் கண்டுதொழாது உண்ணேன்" என்று பழையாறை ஊரில் தவம்செய்து அது மீட்டு - சிவன் திருவடியை அடையாத சமணர்கள் மறைத்த ஈசன் கோயிலைக் கண்டு வழிபடாமல் உணவு உண்ணமாட்டேன்" என்று பழையாறையில் தவம் செய்து அந்தக் கோயிலை மீட்டு; (நண்ணுதல் - சார்தல்); (நம்பன் - சிவபெருமான்); (தளி - கோயில்); (மீட்டுமண்ணோர் - 1. மீட்டு மண்ணோர்; 2. மீட்டும் மண்ணோர்);
(மீட்டும்) மண்ணோர் போற்றத் தந்து அருள்செய் வாக்கின்-மன்னர் பதம் போற்றி - மீண்டும் உலகோர் அக்கோயிலில் வழிபாடு செய்ய அருளிய திருநாவுக்கரசர் திருவடிக்கு வணக்கம்; (மீட்டும் - திரும்பவும்); ("மீட்டு" என்பது இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளுமாறு நின்றது); (* பழையாறை வடதளிக் கோயிலை மீட்ட வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.58.1 - "தலையெலாம் பறிக்கும் சமண் கையருள் நிலையினால் மறைத்தால் மறைக்கொண்ணுமே");
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment