2015-06-09
N.033 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2015
--------------
1) --- நேரிசை வெண்பா ---
பெருந்துறை தன்னிற் குருந்தமர்ந் தானை
அருந்துணை அண்ணலை அன்பால் - இருந்தமிழால்
ஏத்திய வாதவூர் ஏந்தல் இணையடியை
வாழ்த்தல் மயல்தீர் மருந்து.
பெருந்துறை-தன்னில் குருந்து அமர்ந்தானை - திருப்பெருந்துறையில் குருந்தமரத்தடியில் வீற்றிருந்தவனை; (குருந்து - குருந்தமரம்);
அருந்-துணை அண்ணலை - அரிய துணை ஆகிய பெருமானை;
அன்பால் இருந்-தமிழால் ஏத்திய - அன்போடு சிறந்த தமிழால் துதித்து வழிபட்ட; (இருமை - பெருமை);
வாதவூர் ஏந்தல் இணையடியை வாழ்த்தல் மயல் தீர் மருந்து - திருவாதவூரில் அவதரித்த மாணிக்கவாசகரது இருதிருவடிகளை வாழ்த்துதல் நம் அறியாமையைத் தீர்க்கின்ற மருந்து; (ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்); (மயல் - அறியாமை; மயக்கம்);
2)
அரியன் பெரியன் அடியார்க் கெளியன்
நரியைப் பரிசெய்த நம்பன் - கரியமணி
கண்டன் கழற்கே கசிந்தமணி வாசகர்சொல்
மண்டுவினை நோய்க்கு மருந்து.
அரியன், பெரியன், அடியார்க்கு எளியன் - அரியவன், பெரியவன், அன்பர்க்கு எளியவன்;
நரியைப் பரி செய்த நம்பன் - நரியைக் குதிரை ஆக்கிய நம்பன்; (நம்பன் - சிவன் திருநாமம்; விரும்பத்தக்கவன்);
கரிய மணிகண்டன் கழற்கே கசிந்த - நீலமணியைக் கண்டத்தில் உடைய பெருமான் திருவடிக்கே கசிந்து உருகிய;
மணிவாசகர்-சொல் மண்டு வினைநோய்க்கு மருந்து - மாணிக்கவாசகரது பாடல்கள் நமது பெருவினை என்ற நோய்க்கு மருந்து; (மண்டுதல் - திரளுதல்; மிகுதல்; நெருக்கித் தாக்குதல்);
3)
திருவா சகமென்ற தேறலைத் தந்த
அருளாளர் வாதவூர் அண்ணல் - இருதாள்
பெருவாதை நல்கநமைப் பின்னே தொடர்ந்து
வருதீ வினைதீர் மருந்து.
திருவாசகம் என்ற தேறலைத் தந்த அருளாளர் வாதவூர் அண்ணல் இருதாள் - திருவாசகம் என்ற தேனை நமக்கு அருளிய மாணிக்கவாசகரது இருதிருவடிகள்; (தேறல் - தேன்);
பெருவாதை நல்க நமைப் பின்னே தொடர்ந்து வரு தீவினை தீர் மருந்து - பெருந்துன்பம் தர நம்மைப் பின்தொடர்கின்ற தீவினையைத் தீர்க்கின்ற மருந்து; (வாதை - துன்பம்); (நமை - நம்மை);
4) --- இன்னிசை வெண்பா ---
கொல்விடமுண் டானைக் குருவெனப் பெற்றவர்
செல்வழி காட்டும் திருவா சகமுரைத்த
செல்வரணி வாதவூர்ச் செம்மல் திருவடிகள்
வல்வினைக்கு நல்ல மருந்து.
கொல்-விடம் உண்டானைக் குரு எனப் பெற்றவர் - கொல்லும் கொடிய ஆலகாலத்தை உண்டருளிய பெருமானைக் குருவாகப் பெற்றவர்;
செல்வழி காட்டும் திருவாசகம் உரைத்த செல்வர் - செல்லும் நெறியைக் காட்டுகின்ற திருவாசகத்தைப் பாடியருளிய செல்வர்;
அணி வாதவூர்ச் செம்மல் திருவடிகள் - அழகிய திருவாதவூரில் அவதரித்த செம்மலான மாணிக்கவாசகரது பாதங்கள்; (செம்மல் - பெருமையிற் சிறந்தோன்);
வல்வினைக்கு நல்ல மருந்து - நம் வலிய வினைக்கு நல்ல மருந்து;
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment