2015-05-06
T.182 - அம்பர் (அம்பல்) - பந்தித்தருவினை
--------------
(வண்ணவிருத்தம்;
தந்தத் தனதன தந்தத் தனதன
தந்தத் தனதன .. தனதான)
(வஞ்சத் துடனொரு - திருப்புகழ் - திருச்செந்தூர்)
பந்தித் தருவினை இங்குற் றிடவுயர்
.. .. பண்பற் றனுதின(ம்) .. மயலாலே
.. பண்டிக் குணவிட எண்டிக் குழல்வுறு
.. .. பந்தொத் தலமரும் .. அடியேனும்
சந்தப் புதுமலர் நின்பொற் கழலிடு
.. .. சம்பத் தினையுற .. அருளாயே
.. சண்பைக் கவுணியர் இம்பர்க் குதவிய
.. .. சந்தத் தமிழ்மகிழ் .. செவியானே
வந்தித் தடைசுரர் இன்புற் றமுதுண
.. .. வங்கக் கடல்விட(ம்) .. நுகர்வோனே
.. வஞ்சிக் கொடியிடை வெண்பற் கயல்விழி
.. .. மஞ்சுற் றிடுமலை .. மகள்நாதா
அந்திப் பிறையணி செம்பொற் சடையின
.. .. அங்கைத் தலமதில் .. மழுவாளா
.. அஞ்சொற் கிளிபயில் அம்பர்ப் பதியினில்
.. .. அன்பர்க் கருளிடு .. பெருமானே.
பதம் பிரித்து:
பந்தித்து அருவினை இங்கு உற்றிட, உயர்
.. .. பண்பு அற்று, அனுதின(ம்) மயலாலே
.. பண்டிக்கு உணவு இட எண்-திக்கு உழல்வுறு
.. .. பந்து ஒத்து அலமரும் அடியேனும்,
சந்தப் புதுமலர் நின் பொற்கழல் இடு
.. .. சம்பத்தினை உற அருளாயே;
.. சண்பைக் கவுணியர் இம்பர்க்கு உதவிய
.. .. சந்தத்தமிழ் மகிழ் செவியானே;
வந்தித்து அடை சுரர் இன்புற்று அமுது உண,
.. .. வங்கக் கடல்-விட(ம்) நுகர்வோனே;
.. வஞ்சிக் கொடி-இடை வெண்பற் கயல்விழி
.. .. மஞ்சு உற்றிடு மலைமகள்-நாதா;
அந்திப் பிறை அணி செம்பொற்சடையின;
.. .. அங்கைத்-தலமதில் மழுவாளா;
.. அஞ்சொற் கிளி பயில் அம்பர்ப் பதியினில்
.. .. அன்பர்க்கு அருளிடு பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
பந்தித்தருவினை இங்கு உற்றிட, உயர் பண்பு அற்று, அனுதினம் மயலாலே - பிணித்துள்ள (பொறுத்தற்கு / தீர்த்தற்கு) அரிய வினைகளால் இங்குப் பிறவி அடைய, நற்குணம் இன்றித், தினமும் அறியாமையால்; (பந்தித்தருவினை - பந்தித்த அருவினை; "பந்தித்த" என்பதன் ஈற்றுஅகரம் தொகுத்தல் விகாரம்); (பந்தித்தல் - பிணித்தல்; கட்டுதல்); (உறுதல் - அடைதல்; இருத்தல்); (மயல் - அறியாமை);
பண்டிக்கு உணவு இட எண்-திக்கு உழல்வுறு பந்து ஒத்து அலமரும் அடியேனும் - வயிற்றுக்கு உணவு இடுவதற்காக எட்டுத்திசையிலும் சுழலும் பந்து போல அலைந்து வருந்தும் நானும்; (பண்டி - வயிறு; உடல்); (உழல்தல் - சுழல்தல்; அலைதல்); (அலமருதல் - சுழலுதல்; அஞ்சுதல்; வருந்துதல்);
சந்தப் புதுமலர் நின் பொற்கழல் இடு சம்பத்தினை உற அருளாயே - அழகிய புதிய மலர்களை உன் பொன்னடியில் இட்டு வழிபடுகின்ற செல்வத்தை அடைய அருள்வாயாக; ( சந்தம் - அழகு); (சம்பத்து - செல்வம்); (சம்பந்தர் தேவாரம் - 1.88.11 - "சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை"); (சம்பந்தர் தேவாரம் - 1.80.5 - "சிற்றம்பல(ம்) மேய செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே");
சண்பைக்-கவுணியர் இம்பர்க்கு உதவிய சந்தத்தமிழ் மகிழ் செவியானே - சீகாழியில் கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தர் இவ்வுலகோருக்கு நற்கதி அடைய உதவியாக அருளிய சந்தம் மிகுந்த தமிழ்ப்பதிகங்களை மகிழும் திருக்காது உடையவனே; (சண்பை - சீகாழி); (கவுணியர் - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்தவர் - திருஞான சம்பந்தர்); (இம்பர் - இவ்வுலகு); (சந்தம் - செய்யுளின் வண்ணம்); (சம்பந்தர் தேவாரம் - 1.88.11 - "ஞானசம்பந்தன் சந்தமிவை வல்லார் தடுமாற் றறுப்பாரே");
வந்தித்து அடை சுரர் இன்புற்று அமுது உண, வங்கக் கடல்-விடம் நுகர்வோனே - உன்னைத் துதித்துச் சரண்புகுந்த தேவர்கள் அமுது உண்டு மகிழப், பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்டவனே; (வந்தித்தல் - வணங்குதல்); (சுரர் - தேவர்); (வங்கம் - அலை; भङ्गः bhaṅgaḥ - A wave); (நுகர்தல் - அருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.29.6. - "வங்கமலியுங் கடல்விடத்தினை நுகர்ந்த அங்கணன்");
வஞ்சிக் கொடி-இடை வெண்பற் கயல்விழி மஞ்சு உற்றிடு மலைமகள்-நாதா - வஞ்சிக்கொடி போன்ற இடையையும், வெண்மையான பல்லும், கயல்மீன் போன்ற கண்ணும் உடைய, மேகம் தீண்டும் மலைக்கு மகளான உமைக்குக் கணவனே; (மஞ்சு - மேகம்); (அப்பர் தேவாரம் - 4.9.6 - "மஞ்சாடும் மலைமங்கை மணாளனை");
அந்திப்-பிறை அணி செம்பொற்சடையின - மாலையில் தோன்றும் பிறையை அணிந்த செம்பொன் போன்ற சடையை உடையவனே;
அங்கைத்-தலமதில் மழுவாளா - கையில் மழுவை ஏந்தியவனே; (அங்கைத்தலம் - கை);
அஞ்சொற்-கிளி பயில் அம்பர்ப்-பதியினில் அன்பர்க்கு அருளிடு பெருமானே - அழகிய சொற்களைப் பேசும் கிளிகள் ஒலிக்கின்ற (சோலை சூழ்ந்த) திரு-அம்பர் என்ற தலத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்புரியும் பெருமானே; (அம் சொல் - அழகிய சொல்); (பயில்தல் - ஒலித்தல்; தங்குதல்); (பதி - தலம்);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment