2014-04-19
N.027 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2014
--------------
(2 பாடல்கள்)
(வண்ணச்சந்த விருத்தம்;
(தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்)
(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -
सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम् -
ஸத³ஞ்சித முத³ஞ்சித நிகுஞ்சித பத³ம்ʼ ஜ²லஜ²லஞ்சலித மஞ்ஜு கடகம்)
முற்குறிப்பு:
இச்சந்தத்தைப் பெரும்பாலும் ஒத்த - "தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன .. தனதான" - என்ற அமைப்பில், "தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்" என்ற திருப்புகழ் (தலம் - பெருங்குடி) உள்ளது.
1)
அணங்கவ ரிரந்திட இரங்கிய அரன்றரு கொடும்பிணி அகன்றிட அரும்
மணங்கம ழுமின்றமி ழொடும்புய மடிந்தவ ரெலும்பணி பவன்றன பதம்
வணங்கிய வுடன்றுய ரொடுஞ்செடி பவங்கெட வரம்பெறு மருந்தவ ரமண்
கணங்கெட நிலம்பெரு நலம்பெற அரும்பணி புரிந்தவ ரிருங்கழ றொழும்.
பதம் பிரித்து:
அணங்கு அவர் இரந்திட இரங்கிய அரன் தரு கொடும்-பிணி அகன்றிட, அரும்
மணம் கமழும் இன்-தமிழொடும், புய(ம்) மடிந்தவர் எலும்பு அணிபவன்-தன பதம்
வணங்கியவுடன் துயரொடும் செடி பவம் கெட வரம் பெறும் அருந்-தவர்; அமண்
கணம் கெட, நிலம் பெருநலம் பெற, அரும்-பணி புரிந்தவர் இருங்கழல் தொழும்.
அணங்கு அவர் இரந்திட இரங்கிய அரன் தரு கொடும்பிணி அகன்றிட - தம் தம்பி மீண்டும் சைவசமயத்திற்குத் திரும்பிவர வேண்டிய திலகவதியார்க்கு இரங்கித், தருமசேனனாக இருந்த அவர் தம்பிக்குச் சிவபெருமான் தந்த கொடிய சூலைநோய் தீரும் பொருட்டு; (அணங்கு - இங்கே திலகவதியார்);
அரும்-மணம் கமழும் இன்தமிழொடும் - ("அரும் தமிழ், மணம் கமழும் தமிழ், இன் தமிழ்" என்று இயைக்க) - அரிய, என்றும் வாசனை குன்றாத, இனிய தமிழ்ப்பாமாலையால்; (அரும்மணம் - ம் ஒற்று விரித்தல்விகாரம்);
புய(ம்) மடிந்தவர் எலும்பு அணிபவன்-தன பதம் - புஜங்களில் இறந்தவர்களது எலும்பைத் தாங்கும் சிவபெருமானுடைய திருவடியை; (கங்காளன் - Siva who wears garlands of bones); (தன - தன்+அ - தனது; அ - ஆறாம்வேற்றுமை உருபு);
வணங்கியவுடன் துயரொடும் செடி பவம் கெட வரம் பெறும் அருந்-தவர் - வணங்கியதும் சூலைநோயும் கொடிய பிறவிப்பிணியும் தீர வரம் பெற்ற அரிய தவமுடையவர்; (செடி - துன்பம்; தீமை); (பவம் - பிறவி); (தவர் - தவம் உடையவர்);
அமண் கணம் கெட, நிலம் பெருநலம் பெற - சமணர் கூட்டம் அழியவும், மண்ணுலகு பெருநன்மை அடையவும்; (அமண் கணம் - சமணர்கள் கூட்டம்);
அரும்-பணி புரிந்தவர் இருங்-கழல் தொழும் - அரிய தொண்டு செய்த திருநாவுக்கரசரது பெருமைமிக்க திருவடிகளைத் தொழுங்கள்; (இருமை - பெருமை); ("கழல் + தொழும் = கழறொழும் (கழலைத் தொழும்)" என்று புணரும்);
2)
விலங்கலி லமர்ந்தவ னலந்தரு மிருங்கழ னிதந்தொழு தெழுந்திடு முளம்
இலங்கிய வரன்றிய சமண்கல ரிடும்விட மருந்தென உணும்படி வரும்
கலங்கிய வருந்திய பெருங்கரி கரங்கொடு பணிந்தடி வணங்கிவி லகும்
கலுங்கல மெனும்புக ழுறுந்தமி டரும்பெரி யரின்பத நினைந்திடு தினம்.
பதம் பிரித்து:
விலங்கலில் அமர்ந்தவன் நலம் தரும் இருங்-கழல் நிதம் தொழுது எழுந்திடும் உளம்
இலங்கியவர்; அன்றிய சமண் கலர் இடும் விட(ம்) மருந்து என உணும்படி வரும்;
கலங்கி அவர் உந்திய பெருங்-கரி கரங்கொடு பணிந்து அடி வணங்கி விலகும்;
கலும் கலம் எனும் புகழ் உறும் தமிழ் தரும் பெரியரின் பத(ம்) நினைந்திடு தினம்.
விலங்கலில் அமர்ந்தவன் நலம் தரும் இருங்-கழல் நிதம் தொழுது எழுந்திடும் உளம்
இலங்கியவர் - கயிலைமலையானுடைய நன்மையளிக்கும் சிறந்த திருவடிகளைத் தினமும் தொழுதெழும் மனத்தை உடையவர்; (விலங்கல் - மலை; இங்கே கயிலைமலை); (இருமை - பெருமை; மேன்மை); (நிதம் - எப்பொழுதும்; - நித்தம், நித்யம்); (எழுதல் - உறக்கத்தினின்று விழித்தல்; மனம் கிளர்தல்);
அன்றிய சமண் கலர் இடும் விட(ம்) மருந்து என உணும்படி வரும் - அவரைப் பகைத்த கீழோரான சமணர்கள் இட்ட நஞ்சும் அவருக்கு உண்ண அமுதமாகும்; (அன்றுதல் - பகைத்தல்; கோபித்தல்); (கலர் - கீழோர்); (மருந்து - அமுதம்);
கலங்கியவர் உந்திய பெருங்-கரி கரங்கொடு பணிந்து அடி வணங்கி விலகும் - (அதனைக் கண்டு) கலங்கிய அச்சமணர்கள் ஏவிய பெரிய மதயானையும் அவரைத் துதிக்கையால் போற்றித் திருவடியை வணங்கி அகன்று செல்லும்; (கலங்குதல் - மனம்குழம்புதல்; மயங்குதல்; அஞ்சுதல்); (உந்துதல் - அனுப்புதல்; செலுத்துதல்);
கலும் கலம் எனும் புகழ் உறும் தமிழ் தரும் பெரியரின் பத(ம்) நினைந்திடு தினம் - (கல்லோடு கட்டிக் கடலில் எறிந்தபொழுது அந்தக்) கல்லும் படகாகிக் கரையிற் சேர்ப்பிக்கும் புகழ் உடைய, தேவாரம் பாடிய மகான் திருநாவுக்கரசரின் திருப்பாதத்தைத் தினமும் நினை; (கலும் - கல்லும் - இடைக்குறை விகாரம்); (கலம் - மரக்கலம்; படகு); (தமிடரும் - தமிழ் + தரும்); (பெரியர் - பெரியார் - இங்கே திருநாவுக்கரசர்); (* ழ்+த - புணர்ச்சியில் டகரமாகத் திரியும். சில உதாரணங்கள்:
1. கந்தபுராணத்தின் முதற்பாட்டின் முதற்சீரில் - "திகடசக்கர = திகழ் + தசக்கர = திகடசக்கர";
2. சம்பந்தர் தேவாரம் - 3.86.10 - "முகிழ் + தரு = முகிடரு"; "திகழ் + தரு = திகடரு");
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment