2015-05-16
T.183 - பாம்பணி - பாதாளீச்சரம் - ஆராத காதலால்
(பாமணி - இத்தலம் மன்னார்குடி அருகே உள்ளது)
--------------
(வண்ணவிருத்தம்;
தானான தான தானான தான
தானான தான .. தனதான)
(மாலாசை கோப மோயாதெ நாளு - திருப்புகழ் - விராலிமலை)
ஆராத காத லால்நாமம் ஓதி
.. .. ஆளாகி வாழ .. அருளாயே
.. ஆனேற தேறு நாதாவ ராவை
.. .. ஆர்நாண தாக .. உடையானே
தாராக நாக(ம்) மாரூரும் வேட
.. .. தாயோடு தாதை .. யுமிலாதாய்
.. தாளாத ஆலம் ஆர்தேவ தேவ
.. .. சாவாத ஈச .. அலைமோதும்
நீராரும் வேணி ஓர்கூறு நாரி
.. .. நேயாநி லாவை .. அணிவோனே
.. நேர்வாரி லாத கோனேப ராவி
.. .. நீர்தூபம் வாச .. மலரோடு
பாரார்க ளோடு வானோர்க ளேத்து
.. .. பாதாவி ராவில் .. நடமாடீ
.. பாணார ஊது காலாறு நாடு
.. .. பாதாளில் மேய .. பெருமானே.
பதம் பிரித்து:
ஆராத காதலால் நாமம் ஓதி
.. .. ஆள் ஆகி வாழ .. அருளாயே;
.. ஆனேறது ஏறு நாதா; அராவை
.. .. ஆர்-நாணதாக .. உடையானே;
தாராக நாக(ம்) மார் ஊரும் வேட;
.. .. தாயோடு தாதையும் இலாதாய்;
.. தாளாத ஆலம் ஆர்-தேவதேவ;
.. .. சாவாத ஈச; .. அலைமோதும்
நீர் ஆரும் வேணி, ஓர் கூறு நாரி,
.. .. நேயா; நிலாவை .. அணிவோனே;
.. நேர்வார் இலாத கோனே; பராவி
.. .. நீர் தூபம் வாசமலரோடு
பாரார்களோடு வானோர்கள் ஏத்து
.. .. பாதா; இராவில் .. நடம் ஆடீ;
.. பாண் ஆர ஊது காலாறு நாடு
.. .. பாதாளில் மேய .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
ஆராத காதலால் நாமம் ஓதி ஆள் ஆகி வாழ அருளாயே - மிகுந்த அன்பால் உன் திருநாமத்தை ஓதித் தொண்டனாகி நான் வாழ அருள்வாயாக; (ஆர்தல் - திருப்தியாதல்); (ஆள் ஆதல் - அடிமை பூணுதல்); (அப்பர் தேவாரம் - 6.67.1 - "ஆளான அடியவர்கட்கு அன்பன்)";
ஆன்-ஏறு-அது ஏறும் நாதா - இடபவாகனம் உடைய தலைவனே; (ஆன் ஏறு - இடபம்);
அராவை ஆர்-நாணதாக உடையானே - பாம்பை நாணாகக் கட்டியவனே; (அரைநாணாகக் கட்டியது; முப்புரம் எரித்தபோது வில்லில் நாணாகப் பாம்பைக் கட்டியது); (அரா - பாம்பு); (ஆர்த்தல் - பிணித்தல்; கட்டுதல்);
தாராக நாகம் மார் ஊரும் வேட - மாலை போலப் பாம்பு மார்பில் ஊர்கின்ற கோலம் உடையவனே; (தார் - மாலை); (மார் - மார்பு); (வேடன் - வேடம் உடையவன்; வேடம் - கோலம்);
தாயோடு தாதையும் இலாதாய் - தாயும் தந்தையும் இல்லாதவனே; (தாதை - தந்தை);
தாளாத ஆலம் ஆர்-தேவதேவ - யாராலும் தாங்க ஒண்ணாத ஆலகாலத்தை உண்டருளிய தேவதேவனே; (தாளுதல் - பொறுத்தல்); (ஆர்தல் - உண்ணுதல்; அணிதல்);
சாவாத ஈச - என்றும் இறப்பு இல்லாத ஈசனே;
அலைமோதும் நீர் ஆரும் வேணி, ஓர் கூறு நாரி நேயா - அலை மோதுகின்ற கங்கை பொருந்திய சடையையுடைய, ஒரு பாகமாக உமையை விரும்பியவனே; (ஆர்தல் - பொருந்துதல்); (வேணி - சடை); (நாரி - பெண்); (நேயன் - அன்பன்);
நிலாவை அணிவோனே - சந்திரனை அணிந்தவனே;
நேர்வார் இலாத கோனே - உன்னை நிகர்ப்பவர் (எவரும்) இல்லாத தலைவனே; (நேர்வார் - நிகராவார்); (கோன் - தலைவன்); (அப்பர் தேவாரம் - 6.55.5 - "நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி");
பராவி நீர் தூபம் வாசமலரோடு பாரார்களோடு வானோர்கள் ஏத்து பாதா - நீர், தூபம், வாசம் கமழும் பூக்கள் இவற்றால் மண்ணுலகினரும் விண்ணுலகினரும் போற்றி வணங்கும் திருப்பாதனே; (பராவுதல் - புகழ்தல்; வணங்குதல்); (பாரார் - உலகத்தவர்);
இராவில் நடம் ஆடீ - நள்ளிருளில் கூத்து ஆடுபவனே; (இரா - இரவு);
பாண் ஆர ஊது காலாறு நாடு பாதாளில் மேய பெருமானே - பண் பொருந்த ஒலிக்கின்ற வண்டுகள் நாடுகின்ற (சோலை சூழ்ந்த) பாம்பணியில் உள்ள பாதாளீச்சரத்தில் உறைகின்ற பெருமானே; (பாண் - பாட்டு; பண் என்பதன் நீட்டல் விகாரம் என்றும் கருதலாம்); (ஊதுதல் - வண்டுகள் ஒலித்தல்); (காலாறு - வண்டு); (பாதாளில் - பாதாளீச்சரத்தில்); (சுந்தரர் தேவாரம் - 7.93.9 - "பாணார் குழலும் முழவும் விழவில் சேணார் நறையூர்ச் சித்தீச்சரமே"); (சம்பந்தர் தேவாரம் - 1.108.1 - "பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே"); (பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 12.37.119 & 120 - "பாம்பணிமா நகர்தன்னில் பாதாளீச் சரமிறைஞ்சி");
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment