2015-02-01
S.147 - சிவன் - இட்டலி - சிலேடை
-------------
வெண்மா விருப்பதால் மென்மலர்ப்ப தத்தினால்
கண்ணாரக் காணன்பர் வாயூறப் - பண்ணுவலம்
பெற்றதனால் விண்டு பெரிதேத்தும் சீருடைய
ஒற்றியரன் இட்டலி யோ.
சொற்பொருள்:
மாவிருப்பதால் - 1. மாவு இருப்பதால்; / 2a. மா விருப்பதால்; 2b. மா இருப்பதால்;
மா - விலங்கு; யானை;
விருப்பு - விருப்பம்;
இருப்பது - 1. உள்ளது; / 2. வீற்றிருத்தல்;
மென்மலர் - 1. மெல்லுகின்ற மலர் (மெல்+மலர்); / 2. மென்மையான மலர்;
பதம் - 1. பக்குவம்; 2. பாதம்;
வாயூறுதல் - நீர் சுரத்தல்; (திருவெம்பாவை - 8.7.5 - "பாலூறு தேன்வாய்ப் படிறீ");
பண்ணுவலம் - 1. பண்ணு (செய்) + வலம்; 2. பண் நுவல் அம்;
நுவல்தல் - சொல்லுதல்;
அம் - அழகு; நீர்;
பெற்றதனால் - 1. உடையதால்; 2. பெற்று அதனால்; (பெற்று - பெற்றம் - இடபம்);
சீர் - பெருமை; இயல்பு;
விண்டு - 1. விள்ளுதல் - பிளத்தல்; சொல்லுதல்; 2. விஷ்ணு;
ஒற்றி - திருவொற்றியூர்;
ஓ - ஓகாரம் எதிர்மறை, வினா, அசைநிலை என்று பல பொருள்களில் வரும்.
இட்டலி:
வெண்-மாவு இருப்பதால் - வெண்ணிற மாவு உடையதால்;
மெல்-மலர்ப்பதத்தினால் - மென்று உண்ணக்கூடிய, பூப்போன்ற பக்குவம் உடையதால்; (மெல் + மலர் = மென்மலர்; இவ்விடத்தில் புணர்ச்சியால் ல் ஒற்று ம் ஒற்றாகத் திரியும்);
கண்ணாரக் காண் அன்பர் வாயூறப்பண்ணு வலம் பெற்றதனால் - கண்டு மகிழ்கின்றவர்களது வாயில் நீர் ஊறச்செய்யும் ஆற்றல் உடையதால்; (வலம் - வலிமை);
விண்டு பெரிதேத்தும் சீர் உடைய ... இட்டலி - உண்பவர்கள் அதனை விண்டு அதன் புகழை மிகவும் பேசவைக்கும் தன்மையுடைய இட்டலி; (விண்டு - வாய்திறந்து என்றும் பொருள்கொள்ளலாம்);
சிவன்:
வெண்-மா விருப்பதால் (/ இருப்பதால்) - வெண்ணிற இடபத்தை ஊர்தியாக விரும்புவதால்; வெள்ளை எருதின்மேல் வீற்றிருப்பதால்; ("மா = யானை" என்று கொண்டு, "ஐராவணம் என்ற வெள்ளையானையை உடையவன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (சுந்தரர் தேவாரம் - 7.100.5 - "வெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான்"); (அப்பர் தேவாரம் - 5.37.2 - "வெள்ளி மால்வரை போல்வதொர் ஆனையார்");
மென்மலர்ப்-பதத்தினால் - மென்மையான மலர் போன்ற திருவடியால்;
கண்ணாரக் காண் அன்பர் வாயூறப் பண் நுவல் அம் பெற்றதனால் - தரிசிக்கும் பக்தர்கள் வாயில் அன்பு ஊறப் பண்கள் பாடிப் போற்றும் அழகு பெற்றதனால்;
விண்டு பெரிது ஏத்தும் சீருடைய ஒற்றி-அரன் - விஷ்ணு மிகவும் போற்றுகின்ற பெருமையுடைய, திருவொற்றியூரில் உறைகின்ற சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment