2014-07-25
M.060 - அம்மை - உடனிற்கும் - மடக்கு
-------------
அம்மை திகழ்கண்டன் அன்பருக் கப்பனாய்
அம்மை எனவானான் இம்மையோ - டம்மை
உடனிற்கும் நற்றுணை ஒண்பொடிசாந் தம்போல்
உடனிற்கும் கோன்புகழ் ஓது.
சொற்பொருள்:
அம்மை - 1. அம் மை (a. அந்தக் கருமை; b. அழகிய கருமை); 2. தாய்; 3. மறுமை;
உடனிற்கும் - 1. உடன் நிற்கும்; 2. உடல் நிற்கும்;
நிற்றல் - தங்குதல்;
பொடி - திருநீறு;
சாந்தம் - சந்தனம்;
கோன் - தலைவன்;
அம்-மை திகழ் கண்டன் - அந்த அழகிய கருமை திகழ்கின்ற கண்டத்தை உடையவன்; (அம் - அழகு); (அ - அந்த - பண்டறிசுட்டு);
அன்பருக்கு அப்பனாய் அம்மை என ஆனான் - பக்தர்களுக்குத் தந்தை ஆகித் தாயும் ஆனவன்; (ஆய் - ஆகி); (அம்மை - அம்மையும் - உம்மைத்தொகை); (அப்பர் தேவாரம் - 6.95.1 - "அப்பன்நீ அம்மைநீ")
இம்மையோடு அம்மை உடன் நிற்கும் நல்-துணை - இம்மையிலும் மறுமையிலும் அடியார்கள் கூடவே இருந்து காக்கும் நல்ல துணை;
ஒண்பொடி சாந்தம்போல் உடல் நிற்கும் கோன் புகழ் ஓது - ஒளியுடைய திருநீறு சந்தனம்போல் திருமேனியில் நிலைபெற்ற தலைவன் புகழைப் பாடு; (அப்பர் தேவாரம் - 4.80.5 - "மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்" - ஞின்ற - நின்ற);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment