(பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி)
2014-08-29
S.146 - சிவன் - கொழுக்கட்டை - சிலேடை
-------------
வெந்தபொடி மேல்மிளிரும் விண்டால் இனிமைதரும்
சிந்தைமகிழ் பூரணம் தென்படுமே - கந்தனுக்
கண்ணன் கரங்கூடும் அன்பரையஞ் சேலெனும்முக்
கண்ணன் கொழுக்கட்டை காண்.
சொற்பொருள்:
பொடி - 1. மாவு; / 2. திருநீறு;
விள்ளுதல் - 1. பிளத்தல்; / 2. சொல்லுதல்;
பூரணம் - 1. கொழுக்கட்டையினுள் இருக்கும் தேங்காய்ப்பூரணம்; / 2. நிறைவு; முழுமை;
அண்ணன் - தமையன்;
கரம் கூடுதல் - 1. கையில் பொருந்துதல்; / 2. கரங்கள் ஒன்றாக இணைதல் (தொழுதல்);
அஞ்சேல் எனும் - 1. அஞ்சு ஏல் எனும்; / 2. அஞ்சேல் (அஞ்சாதே) எனும்;
ஏல் - 1. ஏற்றுக்கொள்; / 2. எதிர்மறை ஏவல்ஒருமை விகுதி;
கொழுக்கட்டை:
வெந்தபொடி மேல் மிளிரும் - வெளியே வெந்த மாவு இருக்கும்;
விண்டால் இனிமை தரும் சிந்தை மகிழ் பூரணம் தென்படுமே - பிளந்தால் இனிமை தருவதும் மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதுமான பூரணம் புலப்படும்;
கந்தனுக்கு அண்ணன் கரம் கூடும் - விநாயகர் கையில் சேரும்;
அன்பரை அஞ்சு ஏல் எனும் - பிரியர்களை (ஒன்றிரண்டு கொழுக்கட்டையே போதும் என்று எண்ணவிடாமல்) ஐந்து ஏற்றுக்கொள் என்னும்;
சிவன்:
வெந்தபொடி மேல் மிளிரும் - சுட்ட திருநீறு மேனிமேல் திகழும்;
விண்டால் இனிமை தரும் சிந்தை மகிழ் பூரணம் தென்படுமே - (திருநாமத்தையும் திருப்புகழையும்) சொன்னால் இனிமை தருகின்ற, மனம் மகிழ்கின்ற நிறைவு புலப்படும்; ("பூரணம் தென்படுமே" - "பூரணனாகிய சிவபெருமான் காட்சி தருவான்" என்றும் பொருள்படும்);
கந்தனுக்கு அண்ணன் கரம் கூடும் - விநாயகன் தனது கரங்களைச் சேர்த்து வணங்கும் தந்தை;
கரம் கூடும் அன்பரை அஞ்சேல் எனும் முக்கண்ணன் - கைகளைக் கூப்பித் தொழும் பக்தர்களை, "அஞ்சேல்" என்று அபயம் தரும் நெற்றிக்கண்ணன்; ("கரம் கூடும்" என்ற சொற்றொடரை இடைநிலைத்தீவகமாக இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்);
பிற்குறிப்புகள்:
1) ஈசனை "நிறைவு" என்று சுட்டும் பிரயோக உதாரணம்: - திருவாசகம் - 8.22.5 - "குறைவிலா நிறைவே கோதிலா அமுதே";
2) "விண்டால் இனிமைதரும் சிந்தைமகிழ் பூரணம் தென்படுமே" - "பூரணனாகிய சிவபெருமான் காட்சி தருவான்" என்றும் பொருள்படும்; அப்பர் தேவாரம் - 4.112.9 - "சிவனெனும் நாமம் ... இவன் எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே";
3) "ஏல்" என்ற பிரயோக உதாரணம்: - ஔவையார் - நல்வழி - "ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்";
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment