2015-05-23
P.283 - புறம்பயம் - (வண்ணவிருத்தம்)
(திருப்புறம்பியம் - கும்பகோணம் அருகே உள்ள தலம்)
------------------
(வண்ணக் கலிவிருத்தம்;
தனந்தனத் தனத்தனந் தனந்தனத் தனத்தன)
முற்குறிப்புகள்:
1. இப்பதிகம் வண்ணவிருத்தம். "தனாதனா தனாதனா தனாதனா தனாதனா" என்ற அமைப்பில் சந்தக்கலிவிருத்தப் பாடல்கள் உள்ளன.
சம்பந்தர் தேவாரம் - 2.98.5 - "துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி";
கணேச பஞ்சரத்னம் - "முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்";
2. சந்தம் கெடாத இடங்களில், படிப்போர் வசதி கருதிப் புணர்ச்சி பிரித்த வடிவம் காட்டப்பெற்றுள்ளது;
1)
கரங்களைக் குவித்திடும் கணந்தனக் குகப்பொடு
வரங்களைக் கொடுப்பவன் சலஞ்சடைக் கரப்பவன்
சிரங்களைத் தரித்தவன் சிலம்புபொற் கழற்சிவன்
புரங்களைக் கொளுத்தினன் புறம்பயத் தொருத்தனே.
கரங்களைக் குவித்திடும் கணம்-தனக்கு உகப்பொடு வரங்களைக் கொடுப்பவன் - கைகூப்பி வணங்கும் பத்தர் கணத்திற்கு (அடியார் கூட்டத்திற்கு) மகிழ்ந்து வரங்களை அருள்பவன்; (கணம் - கூட்டம்; இங்கே, அடியார் கூட்டம்);
சலம் சடைக் கரப்பவன் - கங்கையைச் சடையில் ஒளித்தவன்; (சலம் - ஜலம்); (இலக்கணக் குறிப்பு: ஏழாம் வேற்றுமைத்தொகையில் வலி மிகும்); (அப்பர் தேவாரம் - 6.95.10 - "கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பராகில்");
சிரங்களைத் தரித்தவன் - மண்டையோட்டு-மாலையை அணிந்தவன்;
சிலம்பு- பொற்கழற் சிவன் - ஒலிக்கின்ற பொற்கழலை அணிந்த திருவடியை உடைய சிவன்; (சிலம்புதல் - ஒலித்தல்);
புரங்களைக் கொளுத்தினன் - முப்புரங்களை எரித்தவன்;
புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் உறைகின்ற ஒப்பற்றவன்; (ஒருத்தன் - ஒப்பற்றவன்); (அப்பர் தேவாரம் - 5.40.5 - "கழிப்பாலையுள் மேவிய ஒருத்தனை");
2)
கருங்களத் தனைக்கயம் புகுஞ்சடைக் கருத்தனைத்
தருங்கரத் தனைச்சரண் புகும்துயர்க் கடற்புணை
சுருங்கிடைச் சிவைக்கிடம் தருஞ்சிறப் புடைச்சிவன்
பொருங்களிற் றுரிப்பரன் புறம்பயத் தொருத்தனே.
கரும்-களத்தனைக் - நீலகண்டனை; (களம் - கண்டம்);
கயம் புகும் சடைக் கருத்தனைத் - கங்கையைச் சடையில் தரித்த தலைவனை; (கயம் - நீர்; நீர்நிலை); (கருத்தன் - கர்த்தா - எல்லாவற்றையும் படைத்தவன்; தலைவன்);
தரும் கரத்தனைச் - வரம் கொடுக்கும் கரத்தை உடையவனை;
சரண் புகும் - சரண் புகுங்கள் - சரணடையுங்கள்;
துயர்க்கடற்புணை - (அவன்) நமது துன்பக்கடலைக் கடப்பிக்கும் படகு போன்றவன்; (புணை - மரக்கலம்; தெப்பம்);
சுருங்கு-இடைச் சிவைக்கு இடம் தரும் சிறப்புடைச் சிவன் - சிற்றிடை உடைய உமைக்கு இடப்பாகத்தைத் தரும் சிறப்பினை உடைய சிவன்; (சிவை - பார்வதி);
பொரும் களிற்று-உரிப் பரன் - போர் செய்யும் யானையின் தோலைப் போர்த்த பரமன்; (பொருதல் - போர்செய்தல்);
புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் உறைகின்ற ஒப்பற்றவன்;
3)
அலந்துடைத் தளித்திடும் சிவன்றனைத் தொழப்புகும்
சலந்தரற் செகுத்தவன் புரஞ்சுடச் சிரித்தவன்
மெலிந்தஅப் பிறைக்கருஞ் சுகந்தரத் தரித்தவன்
பொலிந்தபொற் சடைப்பரன் புறம்பயத் தொருத்தனே.
அலம் துடைத்து அளித்திடும் சிவன்றனைத் தொழப் புகும் - துன்பத்தைத் தீர்த்துக் காக்கும் சிவனைத் தொழச் செல்லுங்கள்; (அலம் - துன்பம்); (உம் - ஏவல் பன்மை விகுதி);
சலந்தரற் செகுத்தவன் - சலந்தராசுரனை அழித்தவன்; (செகுத்தல் - கொல்லுதல்); (இரண்டாம் வேற்றுமைத்தொகையில், உயர்திணையில் முதற்சொல்லின் ஈற்று ன் ஒற்று ற் ஒற்றாகத் திரியும்);
புரம் சுடச் சிரித்தவன் - முப்புரங்களை எரிக்கச் சிரித்தவன்;
மெலிந்த அப்பிறைக்கு அரும்-சுகம் தரத் தரித்தவன் - தேய்ந்து வாடிய அந்தப் பிறைச்சந்திரனுக்கு என்றும் அழியாத அரிய இன்பத்தை அளிக்க அதனைத் திருமுடிமேல் சூடியவன்;
பொலிந்த பொற்சடைப் பரன் - விளங்குகின்ற பொன் போன்ற சடையை உடைய பரமன்;
புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் எழுந்தருளிய ஒப்பற்றவன்;
4)
நகுந்தலைக் கலத்தயம் கொளுந்திருக் கரத்தினன்
மிகுந்திரைப் புனற்கிடம் தரும்பிறைச் சடைப்பரன்
சகந்தனிற் றனைத்தினந் தொறும்துதித் தடைக்கலம்
புகுந்தவர்க் களிப்பவன் புறம்பயத் தொருத்தனே.
நகும் தலைக்-கலத்து அயம் கொளும் திருக்கரத்தினன் - நகுகின்ற மண்டையோடு என்ற பாத்திரத்தில் பிச்சைகொள்ளும் கையினன்; (அயம் - ஐயம் - பிச்சை); (அயம் - ஐயம் என்பதன் போலி); (திருத்தொண்டர் திருவந்தாதி - 11.33.86 - "கபாலம் கைக்கொண்டு அயந்தான் புகும் அரன் ஆரூர்ப் புனிதன்");
மிகும் திரைப்-புனற்கு இடம் தரும் பிறைச்-சடைப் பரன் - மிகுந்த அலைகளையுடைய கங்கைக்கு இடம் தருகின்ற, திங்களை அணிந்த சடையை உடைய பரமன்; (திரை - அலை);
சகந்தனில் தனைத் தினந்தொறும் துதித்து அடைக்கலம் புகுந்தவர்க்கு அளிப்பவன் - உலகில் தன்னைத் தினமும் துதித்துச் சரண்புகுந்த பக்தர்களுக்கு அருள்பவன் (/வரங்கள் அளிப்பவன்); (சகம் - உலகு); (தனை - தன்னை); (அளித்தல் - அருள்செய்தல்; கொடுத்தல்);
புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் எழுந்தருளிய ஒப்பற்றவன்;
5)
இகன்றவர்ச் செகுத்திடும் குகன்றனைக் கொடுத்தவன்
பகன்கணைப் பறித்தவன் புரங்களைத் தகித்தவன்
அகந்தனிற் கழற்பதம் பொருந்திடத் திருப்பெயர்
புகன்றவர்க் களிப்பவன் புறம்பயத் தொருத்தனே.
இகன்றவர்ச் செகுத்திடும் குகன்தனைக் கொடுத்தவன் - பகைவர்களை (அசுரர்களை) அழித்திடும் மகனான முருகனைக் கொடுத்தவன்; (இகன்றவர் - பகைவர்); (செகுத்தல் - அழித்தல்); (இரண்டாம் வேற்றுமைத்தொகையில், உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் வல்லொற்று மிகும்);
பகன் கணைப் பறித்தவன் - (தக்கன் வேள்வியை அழித்தபொழுது) பகன் என்ற சூரியனின் கண்ணைப் பறித்தவன்; (பகன் - பன்னிரு சூரியர்களுள் ஒருவன்); (கணை - கண்ணை); (திருவாசகம் - திருவுந்தியார் - 8.14.12 - "உண்ணப் புகுந்த பகன் ஒளித்தோடாமே கண்ணைப் பறித்தவா றுந்தீபற");
புரங்களைத் தகித்தவன் - முப்புரங்களை எரித்தவன்;
அகந்தனில் கழற்பதம் பொருந்திடத் திருப்பெயர் புகன்றவர்க்கு அளிப்பவன் - மனத்தில் கழல் அணிந்த திருவடி பொருந்தத் திருநாமத்தைச் சொல்லும் அன்பர்களுக்கு அருள்பவன்; (புகல்தல் - சொல்தல்);
புறம்பயத்து ஒருத்தனே - புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;
6)
அரந்தையைத் துடைப்பவன் கரந்தனைக் குவித்திடின்
கரந்தையைத் தரிப்பவன் கவின்பொருப் பிருப்பவன்
இரந்திடத் தலைக்கலன் கரந்தனிற் பிடித்தவன்
புரிந்தபொற் சடைப்பரன் புறம்பயத் தொருத்தனே.
அரந்தையைத் துடைப்பவன் கரந்தனைக் குவித்திடின் - கைகளைக் குவித்து வணங்கினால் துன்பத்தை நீக்குபவன்; (அரந்தை - துன்பம்); (துடைத்தல் - அழித்தல்; நீக்குதல்);
கரந்தையைத் தரிப்பவன் - கரந்தைமலரை அணிபவன்;
கவின் பொருப்பு இருப்பவன் - அழகிய கயிலைமலையை இடமாக உடையவன்; (பொருப்பு - மலை);
இரந்திடத் தலைக்கலன் கரந்தனில் பிடித்தவன் - பிச்சையெடுக்கப் பிரமனது மண்டையோட்டைக் கையில் தாங்கியவன்;
புரிந்த பொற்சடைப் பரன் - முறுக்கிய பொன் போன்ற சடையை உடைய பரமன்; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்);
புறம்பயத்து ஒருத்தனே - புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;
7)
சினந்தனைத் தவிர்த்துளங் கனிந்தடித் தலத்தினை
நினைந்துநற் றமிழ்ச்சரம் பகர்ந்தவர்க் கிகத்தினில்
தனந்தனைக் கொடுப்பவன் குனிந்தஅப் பிறைக்கணி
புனைந்தபொற் சடைப்பரன் புறம்பயத் தொருத்தனே.
சினந்தனைத் தவிர்த்து உளம் கனிந்து அடித்தலத்தினை நினைந்து - கோபத்தை விலக்கி, மனம் கனிந்து திருவடியை எண்ணி; (சம்பந்தர் தேவாரம் - 3.78.10 - "வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திருவேதிகுடியே");
நற்றமிழ்ச்சரம் பகர்ந்தவர்க்கு இகத்தினில் தனந்தனைக் கொடுப்பவன் - நல்ல தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் பக்தர்களுக்கு இம்மையில் செல்வத்தைக் கொடுத்து அருள்பவன்; (சரம் - மாலை); (இகம் - இம்மை); (தனம் - செல்வம்);
குனிந்த அப்-பிறைக்கணி புனைந்த பொற்சடைப் பரன் - வளைந்த அந்தப் பிறைக்கண்ணியை அணிந்த செஞ்சடையை உடைய பரமன்; (குனிதல் - வளைதல்); (கணி - கண்ணி - இடைக்குறையாக வந்தது; கண்ணி - தலையில் அணியும் மாலைவகை); (அப்பர் தேவாரம் - 4.3.1 - "மாதர்ப் பிறைக்கண்ணியானை");
புறம்பயத்து ஒருத்தனே - புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;
8)
மயங்கிவெற் பெடுத்தவன் சிரங்கள்பத் தடர்த்தவன்
தயங்கிலைப் படைக்கரன் தடம்புனற் சடைச்சிவன்
அயங்கொளத் தலைக்கலன் கரந்தனிற் றரித்தவன்
புயங்களெட் டுடைப்பரன் புறம்பயத் தொருத்தனே.
மயங்கி வெற்பு எடுத்தவன் சிரங்கள் பத்து அடர்த்தவன் - அறியாமையால் (ஆணவத்தால்) கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கிய இராவணனது பத்துத்தலைகளையும் நசுக்கியவன்; (அடர்த்தல் - நசுக்குதல்);
தயங்கு இலைப்படைக் கரன் - ஒளிவீசும் மூவிலைச்சூலத்தை ஏந்தியவன்; (தயங்குதல் - ஒளிவிடுதல்);
தடம்-புனற் சடைச் சிவன் - பெரிய கங்கைநதி உலவும் சடையை உடைய சிவன்; (தடம் - பெரிய); (புனல் - நதி);
அயம் கொளத் தலைக்கலன் கரம்தனில் தரித்தவன் - பிச்சையேற்க மண்டையோட்டைக் கலனாகக் கையில் ஏந்தியவன்; (அயம் - ஐயம் என்பதன் போலி; ஐயம் - பிச்சை);
புயங்கள் எட்டு-உடைப் பரன் - எண்தோள்கள் உடைய பரமன்; (புயம் - புஜம்);
புறம்பயத்து ஒருத்தனே - புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;
9)
அகந்தையுற் றடித்தலம் சிரம்புலப் படத்தரை
அகழ்ந்தவற் கிறக்கைகொண் டுயர்ந்தவற் கொளித்தவன்
மகிழ்ந்துபொற் றொடிக்கிடம் பகிர்ந்தபொற் புடைத்தவன்
புகழ்ந்தவர்க் குளத்துளன் புறம்பயத் தொருத்தனே.
அகந்தையுற்று அடித்தலம் சிரம் புலப்படத் தரை அகழ்ந்தவற்கு இறக்கைகொண்டு உயர்ந்தவற்கு ஒளித்தவன் - ஆணவத்தால் அடியையும் முடியையும் காண நிலத்தை அகழ்ந்தவனுக்கும் (= பன்றியான திருமாலுக்கும்) இறக்கைகொண்டு உயரப் பறந்தவனுக்கும் (= அன்னமான பிரமனுக்கும்) தன் அடிமுடியைக் காண இயலாதவாறு ஒளித்தவன்; (அகழ்ந்தவற்கு உயர்ந்தவற்கு - உம்மைத்தொகை);
மகிழ்ந்து பொற்றொடிக்கு இடம் பகிர்ந்த பொற்புடைத் தவன் - விரும்பி உமைக்கு இடப்பக்கத்தைப் பகிர்ந்துகொண்ட தன்மையுடைய, தவவடிவினன்; (பொற்றொடி - பொன்+தொடி - பொன் தோள்வளை அணிந்தவள் - பெண்); (பொற்பு - தன்மை); (தவன் - தவவடிவினன்); (சுந்தரர் தேவாரம் - 7.48.1 - "நற்றவா உனை நான் மறக்கினுஞ் சொல்லும் நா நமச்சிவாயவே");
புகழ்ந்தவர்க்கு உளத்து உளன் - புகழ்ந்து வணங்கும் பக்தர்களுக்கு எளியவனாய் அவர்கள் உள்ளத்துள் உறைபவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.1.10 - "தில்லை அம்பலத்து ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே")
புறம்பயத்து ஒருத்தனே - புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;
10)
இழிந்தசொற் களைச்சொலும் பெரும்புரட் டருக்கிலன்
தொழும்பருக் கருத்தியன் சுகங்களைக் கொடுப்பவன்
அழுஞ்சுரர்ப் புரப்பவன் களந்தனிற் கறுத்தவன்
பொழிந்தஅப் படைத்தவன் புறம்பயத் தொருத்தனே.
இழிந்த சொற்களைச் சொலும் பெரும்-புரட்டருக்கு இலன் - தகாத வார்த்தைகளைப் பேசுகின்ற பெரிய வஞ்சகர்களுக்கு அருள் இல்லாதவன்; (புரட்டர் - மாறாட்டக்காரன்; புரட்டு - வஞ்சகம்); (சொலும் - சொல்லும்);
தொழும்பருக்கு அருத்தியன் - அடியவர்களுக்கு அன்பு உடையவன்; (தொழும்பர் - அடியவர்கள்); (அருத்தி - அன்பு; விருப்பம்);
சுகங்களைக் கொடுப்பவன் - அடியவர்களுக்கு இன்பத்தை அளிக்கின்றவன் - சங்கரன்; சம்பு;
அழும் சுரர்ப் புரப்பவன் - அழுது தொழுத தேவர்களைக் காத்தவன்; (புரத்தல் - காத்தல்); (சுரர்ப் புரப்பவன் - சுரரைப் புரப்பவன் - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் வலி மிகும்);
களந்தனில் கறுத்தவன் - நீலகண்டன்; (களம் - கண்டம்);
பொழிந்த அப்பு அடைத்தவன் - வானிலிருந்து பொழிந்த கங்கையைச் சடையில் அடைத்தவன்; (அப்பு - நீர்);
புறம்பயத்து ஒருத்தனே - புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;
11)
அலங்கலைத் தரித்தவன் சிலம்பினைக் குனித்தவன்
மலங்கெடத் துதித்திடும் பெருந்தவத் தினர்க்குளம்
கலங்கிடத் துரத்திடும் சமன்தனைச் செகுத்தவன்
புலன்களைக் கடப்பவன் புறம்பயத் தொருத்தனே.
அலங்கலைத் தரித்தவன் - மலர்மாலைகளை அணிந்தவன்; (அலங்கல் - மாலை);
சிலம்பினைக் குனித்தவன் - மலையை வில்லாக வளைத்தவன்; (சிலம்பு - மலை); (குனித்தல் - வளைத்தல்);
மலம் கெடத் துதித்திடும் பெரும்-தவத்தினர்க்கு உளம் கலங்கிடத் துரத்திடும் சமன்தனைச் செகுத்தவன் - மும்மலமும் அறவேண்டி வழிபடும் பெரிய தவத்தினரான மார்க்கண்டேயர்க்கு உள்ளம் கலங்கும்படி அவரைக் கொல்வதற்குத் துரத்திய காலனை உதைத்து அழித்தவன்; (சமன் - எமன்); (செகுத்தல் - கொல்லுதல்);
புலன்களைக் கடப்பவன் - புலன்களுக்கு அப்பாற்பட்டவன்; புலன்களை வென்றவன் என்றும் பொருள்கொள்ளலாம்; (கடத்தல் - மேற்படுதல்); (அப்பர் தேவாரம் - 6.95.3 - "காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே"); (அப்பர் தேவாரம் - 6.50.3 - "நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றானை");
புறம்பயத்து ஒருத்தனே - புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
இனிய, ஆயின் கடினமான வண்ணச் சந்தக் குழிப்பில் பீடு நடையோடு அமைந்த பாடல் மிக நன்று.
ReplyDeleteThank you.
Delete