Monday, April 18, 2022

M.051 - நம்பிவந்து - பாடில் - மடக்கு

2010-02-26

M.051 - நம்பிவந்து - பாடில் - மடக்கு

--------------

நம்பிவந்து சேர்வார் நடுக்கம்தீர்ப் பார்ஆரூர்

நம்பிவந்து தாள்தொழக்கண் நல்கினார் - நம்பிவந்து

பாடில் வரும்நெஞ்சே பார்வதி கோன்அருளால்

பாடில் வளவாழ்வே பார்.


சொற்பொருள்:

நம்பி - ஆணில் சிறந்தவன்; கடவுள்;

நம்புதல் - 1. விரும்புதல்; 2. நம்பிக்கை வைத்தல் (To believe, have faith in);

நம்பி - 1. நம்பிக்கையோடு; 2. நம்பி ஆரூரர்; 3. விரும்பி;

பாடு - 1. பாடுதல்; 2. வருத்தம்;

பாடில் - 1. பாடினால்; 2. துன்பம் இல்லாத (பாடு இல்);

பார்த்தல் - அறிதல்;


நம்பி வந்துசேர்வார் நடுக்கம் தீர்ப்பார் - நம்பிக்கைவைத்து வந்தடைந்தவர்களது பயத்தைப் போக்கிக் காத்து அருள்பவர்;

ஆரூர்நம்பி வந்து தாள் தொழக் கண் நல்கினார் - சுந்தரர் வந்து திருவடியைப் போற்றவும் அவருக்குக் கண்பார்வையை அளித்தவர்; (சுந்தரர் தம் கண்களில் பார்வையை இழந்து, பின்னர் மீண்டும் பெற்றதைப் பெரியபுராணத்தில் காண்க); (திருவாலியமுதனார் - திருவிசைப்பா - 9.24.10 - "ஆரூர் நம்பி யவர்கள் இசை பாட");

நம்பி வந்து பாடில் வரும், நெஞ்சே, பார்வதிகோன் அருளால் பாடு-இல் வளவாழ்வே பார் - மனமே! நீ விரும்பிவந்து அப்பெருமானாரது புகழைப் பாடினால், உமாபதி அருளால் துன்பம் இல்லாத சிறந்த வாழ்வே வரும். அறிவாயாக!


வி. சுப்பிரமணியன்

------------- -------------

No comments:

Post a Comment