2010-03-12
S.115 - சிவன் - மரம் - சிலேடை
------------------
காய்க ணிகழ்வதால் கல்லால் அடியுளதால்
நோய்மருந் தாவதால் நுண்ணறிவோர் - ஆய்வதால்
ஏறும் கொடிமேல் இருப்பதால் நன்மரம்
ஆறு புனைந்த அரன்.
சொற்பொருள்:
காய்கணிகழ்வதால் - 1. காய்கள் நிகழ்வதால்; / 2. காய்-கண் நிகழ்வதால்;
காய்தல் - எரித்தல்;
நிகழ்தல் - 1. சம்பவித்தல்; / 2. விளங்குதல்;
கல்லால் அடி - 1. கற்களால் அடிக்கப்பெறுதல்; / 2. கல்லாலமரத்தின் கீழ்;
ஏறும் கொடிமேல் - 1. படர்கின்ற கொடி மேலே ஏறுதல்; / 2. இடபச்சின்னம் கொடியின்மேல் இருக்கும்;
மரம்:
காய்கள் நிகழ்வதால் - காய்கள் இருக்கும்;
கல்லால் அடி உளதால் - (காய், பழம் இவற்றை விரும்வோர் எறியும்) கற்களால் அடிபடும்;
நோய்மருந்து ஆவதால் - (இலை, கொட்டை, பட்டை, வேர், முதலியன) வியாதிகளுக்கு மருந்தாகவும் பயன்படும்;
நுண்ணறிவோர் ஆய்வதால் - விஞ்ஞானியர் ஆராய்ச்சி செய்வர்;
ஏறும் கொடி மேல் இருப்பதால் - படர்ந்து ஏறுகின்ற கொடிகள் மேலே இருக்கும்.
நன்மரம் - நல்ல மரம்;
சிவன்:
காய்-கண் நிகழ்வதால் - சுட்டெரிக்கும் நெற்றிக்கண் இருக்கும்;
கல்லால் அடி உளதால் - (தட்சிணாமூர்த்தியாகக்) கல்லாலமரத்தின் கீழே வீற்றிருப்பார்; (சாக்கிய நாயனார் கல் எறிந்து வழிபட்டதும் இங்கே பொருந்தும்);
நோய்மருந்து ஆவதால் - பிறவிப்பிணிக்கு மருந்து ஆவார்;
நுண்ணறிவோர் ஆய்வதால் - ஞானியர் சிந்தைசெய்வார்கள்;
ஏறும் கொடிமேல் இருப்பதால் - அவர் கொடியின்மேல் இடபச்சின்னம் இருக்கும்; (உம் - அசை);
ஆறு புனைந்த அரன் - கங்கையை அணிந்த ஹரன்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment