2010-08-01
S.117 - சிவன் - சோப்பு (soap) - சிலேடை
------------------
மெய்யுற வாகிநம் மேலுளம லம்போகச்
செய்யுந் தினமலம்பு வார்கழல் - கைசேர்த்து
நானிலத்தோர் போற்றுவார் நல்ல சவுக்காரம்
கூனிலவைச் சூடிய கோன்.
சொற்பொருள்:
மெய் - 1. உடல்; / 2. உண்மை;
உறுதல் - படுதல்; பொருந்துதல்;
உறவு - சுற்றம்; நட்பு;
மலம் - 1. அழுக்கு; / 2. ஆணவம் முதலான மும்மலங்கள்;
அலம்புதல் - 1. கழுவுதல்; / 2. ஒலித்தல்;
வார்தல் - நீளுதல்;
கழல் - பாதம் (ஆகுபெயர்);
கழல் கைசேர்த்து - 1. உம்மைத்தொகை - கழலும் கையும் சேர்த்து; / 2. இரண்டாம் வேற்றுமைத்தொகை - கழலைக் கைசேர்த்து;
கூன் - வளைவு;
சோப்பு (soap):
மெய் உற ஆகி, நம்மேல் உள மலம் போகச்-செய்யும் - உடலில் பட அமைந்து, நம்மேல் இருக்கும் அழுக்குகளைப் போக்கும்;
தினம் அலம்புவார் கழல் கை சேர்த்து நானிலத்தோர் - உலகோர் தினமும் (அதுகொண்டு) கைகால் கழுவுவார்கள்;
போற்றுவார் - (அதன் அவசியத்தை உணர்ந்து) அதனைப் பாராட்டுவர்;
நல்ல சவுக்காரம் - நலம் அளிக்கும் சோப்பு.
சிவன்:
மெய் உறவு ஆகி நம்மேல் உள மலம் போகச் செய்யும் - உண்மையான சுற்றம் ஆகி, நம் உயிரைப் பிணித்துள்ள மும்மலங்களைப் போக்குவான்;
தினம் அலம்பு-வார்-கழல் கைசேர்த்து நானிலத்தோர் போற்றுவார் - ஒலிக்கின்ற நீண்ட கழல் அணிந்த திருவடியை உலகோர் நாள்தோறும் கைகுவித்து வணங்குவார்கள்;
கூன்-நிலவைச் சூடிய கோன் - வளைந்த பிறையை அணிந்த தலைவன்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment