2010-04-10
S.116 - சிவன் - ஒலிபெருக்கி (loudspeaker) - சிலேடை
------------------
ஒலியுரு வாகுமுயர் கம்பத் துறையும்
வலிமலியு மாறு மலைக்கும் - கலிமிகக்
கண்டவர் கைகுவிப்பர் உய்ய ஒலிபெருக்கி
அண்டர்கள் ஏத்தும் அரன்.
சொற்பொருள்:
கம்பம் - 1. தூண்; / 2. கச்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில்;
வலி - 1. நோவு; / 2. வலிமை;
மலைத்தல் - வருத்துதல்;
அலைத்தல் - அலைமோதுதல்;
கலி - 1. ஆரவாரம்; பேரொலி; / 2. துன்பம்;
மலிதல் - மிகுதல்;
ஒலிபெருக்கி (loudspeaker):
ஒலி உருவாகும் - அதனில் ஒலி தோன்றும்;
உயர்-கம்பத்து உறையும் - உயரமான கம்பத்தில் இருக்கும்;
வலி மலியுமாறு மலைக்கும் - (அதிக ஓசையால் காது) வலி மிகுமாறு வருத்தும்; (மலிதல் - மிகுதல்);
கலி மிகக் கண்டவர் கைகுவிப்பர் உய்ய - ஓசை அதிகமாக இருக்கக் கண்டவர், அவ்வோசை எப்போது தீருமோ என்று பிரார்த்தித்திருப்பர்;
ஒலிபெருக்கி - ஒலிபெருக்கி (loudspeaker) என்ற கருவி.
சிவன்:
ஒலி உரு ஆகும் - நாதரூபி; (உரு - வடிவம்);
உயர்-கம்பத்து உறையும் - மேன்மையான கச்சித் திருவேகம்பத்தில் உறைபவன்;
வலி மலியும் ஆறும் அலைக்கும் - வலிமை மிகுந்தவன்; வலிமை மிக்க (வலிய அலைகள் மிக்க) கங்கையும் (சடையில்) அலைமோதும்;
கலி மிகக் கண்டவர் கைகுவிப்பர் உய்ய ஒலி பெருக்கி - மிகுந்த துன்பத்தில் உள்ளோர் தம் துயர் தீரவேண்டி உரக்க முறையிட்டுக் கைதொழுவர்;
(ஒலி பெருக்கி) அண்டர்கள் ஏத்தும் அரன் - (பெருங்குரலில்) தேவரெல்லாம் துதிக்கும் ஹரன்; ("ஒலிபெருக்கி" என்பதை இடைநிலைத்-தீவகமாகக் கொண்டு இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்);
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment