2010-04-17
V.013 - இம்பரவை - மடக்கு
----------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
இம்பரவை கிட்டும் எனவெண்ணி உழலாதே
உம்பரவை வீற்றிருக்கும் உயர்நிலையும் பெற்றிடலாம்
நம்பரவை அரைதனிலோர் நாணாகப் பூணுமிறை
நம்பரவை கணவர்க்கு நற்றோழர் தாள்தொழுதே.
பதம் பிரித்து:
இம்பர் அவை கிட்டும் என எண்ணி உழலாதே;
உம்பர்-அவை வீற்றிருக்கும் உயர்நிலையும் பெற்றிடலாம்,
நம்பு; அரவை அரைதனில் ஓர் நாணாகப் பூணும் இறை,
நம் பரவை-கணவர்க்கு நல்-தோழர் தாள்-தொழுதே.
இம்பர் அவை கிட்டும் என எண்ணி உழலாதே - மனமே! இம்மையில் (நீ ஆசைப்படும்) அப்பொருள்களெல்லாம் கிட்டும் என்று எண்ணி மிகவும் முயற்சி செய்தும் அவை கிட்டாமையால் வருந்தி உழலாதே; (இம்பர் - இவ்வுலகு; இவ்விடத்தே); (அவை - அப்பொருள்கள் - உலகவிஷயங்கள்);
உம்பர்-அவை வீற்றிருக்கும் உயர்நிலையும் பெற்றிடலாம், நம்பு - தேவர்சபையில் வீற்றிருக்கும் உயர்ந்த நிலையையும் நீ அடையலாம்; சந்தேகப்படாதே; அது நிச்சயம்; (உம்பர் - வானுலகு; தேவர்கள்); (அவை - சபை);
அரவை அரைதனில் ஓர் நாணாகப் பூணும் இறை - பாம்பை அரையில் அரைநாணாகக் கட்டிய இறைவர்; (அரவு - பாம்பு); (இறை - இறைவன்);
நம் பரவை-கணவர்க்கு நல்-தோழர் தாள்-தொழுதே - பரவையார்-கணவரான சுந்தரருக்கு நல்ல தோழரான நம் சிவபெருமானார் திருவடியைத் தொழுது;
பிற்குறிப்புகள் :
1. இப்பாடலில் - அவை & நம்பரவை - என்ற சொற்களில், சொற்றொடர்களில் மடக்கு என்ற சொல்லணி.
2. பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 294 -
பேர்பரவை பெண்மையினில் பெரும்பரவை விரும்பல்குல்
ஆர்பரவை யணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை
சீர்பரவை யாயினாள் திருவுருவின் மென்சாயல்
ஏர்பரவை யிடைப்பட்ட என்னாசை யெழுபரவை.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment