Saturday, April 23, 2022

V.015 - பொது - மனம் போன போக்கில்

2010-07-26

V.015 - பொது - "மனம் போன போக்கில்"

----------------

(பலவகை யாப்பு-அமைப்புகளில்) (அந்தாதி)


1) --- கலிவிருத்தம் -- (காய் மா மா மா - வாய்பாடு) --

மனம்போன போக்கில் வாழும் பலரும்

இனமான பேரும் இழித்துப் பேசத்

தனம்போன இடத்தைத் தான்கா ணாராய்த்

தினமான சென்று வருந்து வாரே.


மனம் போன போக்கில் வாழும் பலரும் இனமான பேரும் இழித்துப் பேசத் - மனம் போன போக்கில் வாழ்பவர்கள் சுற்றத்தார்களால் இகழப்படும் நிலை அடைந்து; (இனம் - குலம்; சுற்றம்);

தனம் போன இடத்தைத்தான் காணாராய்த் - தங்கள் பொருளை இழந்து; (தனம் - பொருள்; பணம்);

தினமான சென்று வருந்துவாரே - பிற்காலத்தில் வருந்துவார்கள்; (ஆன - ஆனவை; "ஆயின" என்பதன் இடைக்குறையாகவும் கருதலாம்); (சம்பந்தர் தேவாரம் - 2.16.6 - "பண்ணிசை யான பகர்வானை" - ஆன - ஆனவை, வினையாலணையும் பெயர்); (சம்பந்தர் தேவாரம் - 2.48.2 - "பிள்ளையினோடு உள்ளநினைவு ஆயினவே வரம்பெறுவர்" - ஆயின - வினையாலணையும் பெயர்);

(தினமான - "ஆன தினம்" என்று கொண்டு, "இறந்த நாளில் நரகத்தை அடைந்து துன்புறுவர்" என்றும் கொள்ளலாம்);


2) --- கலிவிருத்தம் -- (மா மா மா காய் - வாய்பாடு) --

வாரும் தோலும் வழங்கும் அவர்காண

ஊரும் விடையை ஒதுங்கென் றரன்சொன்ன

சீரும் உடைய திருநா ளைப்போவார்

சேரும் சிற்றம் பலத்தைச் சிந்திநெஞ்சே.


கோயில் வாத்தியங்களுக்காக வாரும் தோலும் கொடுக்கும் அடியவரான நந்தனார் தன்னைத் தரிசிப்பதற்காகத் தன் இடபத்தைச் "சற்று விலகு" என்று சிவபெருமான் சொல்லியருளிய பெருமையும் உடைய திருநாளைப்போவார் சென்று ஈசனோடு கலந்த தில்லைச் சிற்றம்பலத்தை, மனமே, நீ கருதுவாயாக!

(சீரும் - உம் - எச்சவும்மை; அசை என்றும் கொள்ளலாம்);


3) --- வஞ்சி விருத்தம் -- (விளம் மா விளம் - வாய்பாடு) --

நெஞ்சமே தினமும் நீமிகு

வஞ்சமே செய்து வாழ்தியால்;

கொஞ்சமேல் என்றன் கூற்றினை;

நஞ்சமார் கண்டன் தாள்தொழாய்.


நெஞ்சமே, தினமும் நீ மிகு வஞ்சமே செய்து வாழ்தியால் - மனமே! அந்தோ! நீ நாள்தோறும் மிகவும் வஞ்சனையே செய்து வாழ்கின்றாய்; (வாழ்தி - வாழ்கின்றாய்); (ஆல் - அதிசயம் இரக்கம் தேற்றம் இவற்றைக் குறிப்பிக்கும் இடைச்சொல்; ஓர் அசைநிலை);

கொஞ்சம் ஏல் என்றன் கூற்றினை - கொஞ்சம் என் சொல்லை ஏற்பாயாக; (ஏல்தல்/ஏற்றல் - ஒப்புக்கொள்ளுதல்); (கூற்று - வார்த்தை);

நஞ்சம் ஆர் கண்டன் தாள் தொழாய் - விஷத்தை உண்டு அணிந்த கண்டத்தை உடைய ஈசனது திருவடியை வணங்குவாயாக; (ஆர்தல் - உண்ணுதல்; அணிதல்);


4) --- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா --

தொழுமோர் நினைப்பின்றித் தோன்றியவா றிருந்துபின்னர்

அழுவார் அவரைப்போல் ஆகாதே; அடிபோற்றி

எழுவார் தமக்கின்னல் இல்லாத நிலைகொடுக்கும்

மழுவார் கரத்தானை மனமேநீ மறவாதே.


தொழும் ஓர் நினைப்பு இன்றித் தோன்றியவா(று) ருந்து, பின்னர் அழுவார் அவரைப் போல் ஆகாதே - வழிபடும் எண்ணம் இன்றி இஷ்டப்படி காலத்தைக் கழித்துப், பின்னர் வருந்துபவர்களைப் போல ஆகிவிடாதே;

அடிபோற்றி எழுவார்-தமக்கு இன்னல் இல்லாத நிலை கொடுக்கும் - திருவடியைப் போற்றுவார்களுக்குத் துன்பம் இல்லாத நல்வாழ்வைக் கொடுக்கும்;

மழுர் கரத்தானை, மனமே, நீ மறவாதே - கையில் மழு ஏந்திய ஈசனை, மனமே, நீ மறவாதே;


5) --- கலிவிருத்தம் -- (மா மா மா காய் - வாய்பாடு) --

வாது செய்வார் வாழும் நாளெல்லாம்;

தீது செய்வார் செல்வம் பெறவேண்டி;

ஏது செய்யார்? ஈசன் அடிபோற்றப்

போது கொய்யார் புடைநீ போகாதே.


வாது செய்வார் வாழும் நாளெல்லாம் - ஆயுள் முழுதும் வீண்வாதம் செய்து குதர்க்கம் பேசுவார்கள்;

தீது செய்வார் செல்வம் பெறவேண்டி - பணத்துக்காகத் தீமை செய்வார்;

ஏது செய்யார் - அவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள்?

ஈசன் அடிபோற்றப் போது கொய்யார் புடை நீ போகாதே - ஈசன் திருவடியைப் போற்றி வணங்கப் பூக்களைப் பறிக்கமாட்டார்கள்; அவர்கள் அருகே நீ போகாமல் இரு; (போது - பூ); (கொய்தல் - பறித்தல்); (புடை - பக்கம்; அருகு);


6) --- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா --

காதேகே ளாரையொப்பர் காதிலொரு குழையணிந்த

மாதேவன் புகழ்கேளா மடமாந்தர் நன்னெஞ்சே

காதேவா நால்வேதா என்றென்றே கைதொழுதால்

தீதேவா ராவண்ணம் சிவபெருமான் அருள்வானே.


பதம் பிரித்து:

காதே கேளாரை ஒப்பர், காதில் ஒரு குழை அணிந்த

மாதேவன் புகழ் கேளா மட-மாந்தர்; நன்னெஞ்சே;

"கா தேவா! நால்வேதா!" என்று என்றே கைதொழுதால்,

தீதே வாரா வண்ணம் சிவபெருமான் அருள்வானே.


7) --- கட்டளைக் கலிவிருத்தம் -- (திருக்குறுந்தொகை அமைப்பில்) --

வான ளாவு மனைகள் இருக்கிலென்?

சேனை போல்பணி செய்வார் இருக்கிலென்?

ஏனை எல்லாம் கடல்போல் இருக்கிலென்?

மானை ஏந்தினான் மாணடி போற்றார்க்கே.


வானளாவு மனைகள் இருக்கில் என் - வானைத் தொடும் மாடமாளிகைகள் இருந்தாலும் என்ன பிரயோஜனம்?

சேனை போல் பணிசெய்வார் இருக்கில் என் - பெரிய படை போல ஆள்கள் இருந்தாலும் என்ன பிரயோஜனம்?

ஏனை எல்லாம் கடல் போல் இருக்கில் என் - மற்ற பலவிஷயங்களும் கடல் போல இருந்தாலும் என்ன பிரயோஜனம்? (ஏனை - மற்றை - other, the rest);

மானை ஏந்தினான் மாணடி போற்றார்க்கே - மானைக் கையில் ஏந்தும் சிவபெருமானின் மாட்சிமை பொருந்திய திருவடியை வணங்காதவர்களுக்கு; (மாண் - மாட்சிமை);

(* அப்பர் தேவாரம் - 5.99.2 - "கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்" - பாடலின் கருத்தைக் காண்க);


8) --- அறுசீர் விருத்தம் -- (மா மா காய் - அரையடி வாய்பாடு) --

போற்றத் தக்க பொருப்புதனைப்

.. பொறாதி டந்த இராவணனின்

ஆற்றல் அழித்து வாளொடுநாள்

.. அளித்த முக்கட் பெருமானை,

ஆற்றை முடிமேல் அணிந்தானை,

.. அளவில் லாத சோதியனை,

ஏற்றை உகந்த உமைகோனை

.. ஏத்தி இன்புற் றிருப்போமே.


போற்றத் தக்க பொருப்புதனைப் பொறாது இடந்த இராவணனின் ஆற்றல் அழித்து வாளொடு நாள் அளித்த முக்கட் பெருமானை - போற்றவேண்டிய கயிலைமலையை ஆத்திரத்தால் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்துப் பின் அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளையும் நீண்ட ஆயுளையும் வரமருளிய முக்கண்ணுடைய பெருமானை; (பொருப்பு - மலை); (பொறுத்தல் - சாந்தமாயிருத்தல்); (இடத்தல் - பெயர்த்தல்);

ஆற்றை முடிமேல் அணிந்தானை - கங்கையைத் திருமுடிமேல் அணிந்தவனை;

ளவில்லாத சோதியனை - எல்லையற்ற ஜோதியை;

ஏற்றை உகந்த உமைகோனை - இடபவாகனத்தை விரும்பிய உமாபதியை;

ஏத்தி இன்புற்றிருப்போமே - துதித்து இன்புற்று வாழ்வோம்; (- ஈற்றசை);


9) -- வண்ணவிருத்தம் --

(தனதனனந் தான .. தனதான)


இருவினையுந் தீர .. வழியானாய்

.. எமனடையும் போது .. துணையாவாய்

பருகுவிடம் பூணு(ம்) .. மணியாகப்

.. பனிமதியஞ் சூடு(ம்) .. முடியானே

உருவிலணங் கோடு .. திகழ்வோனே

.. உனதுபதம் பேண .. அறியாத

கருவ(ம்)மிகுந் தோர்கள் .. அடையானே

.. கருதுமனந் தோறும் .. உறைவோனே.


பதம் பிரித்து:

இருவினையும் தீர .. வழி ஆனாய்;

.. எமன் அடையும் போது .. துணை ஆவாய்;

பருகு-விடம் பூணு(ம்) .. மணி ஆகப்,

.. பனிமதியம் சூடு(ம்) .. முடியானே;

உருவில் அணங்கோடு .. திகழ்வோனே;

.. உனது பதம் பேண .. அறியாத

கருவம் மிகுந்தோர்கள் .. அடையானே;

.. கருது மனந்தோறும் .. உறைவோனே.


இருவினையும் தீர வழி ஆனாய் - வினையெல்லாம் தீர நன்னெறி ஆனவனே;

எமன் அடையும் போது துணை ஆவாய் - காலன் கொல்லவரும்பொழுது துணை ஆகிக் காப்பவனே;

பருகு-விடம் பூணு(ம்) மணி ஆகப், பனிமதியம் சூடு(ம்) முடியானே - உண்ட விஷம் அணியும் மணி போல ஆகக், குளிர்ந்த திங்களைத் தலையில் சூடியவனே;

உருவில் அணங்கோடு திகழ்வோனே - உமையொருபங்கனே; (அணங்கு - பெண்);

உனது பதம் பேண அறியாத கருவம் மிகுந்தோர்கள் அடையானே - உன் திருவடியை வணங்க அறியாத கர்வம் உடையவர்களால் அடையப்படாதவனே;

கருது மனந்தோறும் உறைவோனே - விரும்பித் தியானிக்கும் அடியார் மனங்களில் குடிகொள்பவனே;

10) -- வண்ணவிருத்தம் --

(தனதான .. தனதான)


உறைபோல .. வினைமூடி

.. உனையோத .. அறியாமல்

இறைபோதும் .. நினையாமல்

.. எமனாரின் .. வரவாலே

உறவோர்கள் .. அழவீழும்

.. உடலாகி .. விடுவேனோ

பிறைசூடு .. பெருமானே

.. பிணிதீர .. அருளாயே.


உறை போல வினை மூடி - உறையைப் போல வினை என்னைச் சூழ்ந்து மூடி;

உனை ஓத அறியாமல், இறை போதும் நினையாமல் - (அதன் விளைவாக) உன்னைப் போற்றி வணங்க அறியாமல், சிறிதுநேரங்கூட உன் நினைவின்றி; (இறைபோதும் - சிறிது பொழுதேனும்);

எமனாரின் வரவாலே உறவோர்கள் அழ வீழும் உடல் ஆகிவிடுவேனோ - (ஆயுள் தீர்ந்து) காலனது வரவால் இறந்து உறவினர் அழும்படி பிணமாகிவிடுவேனோ? சீக்கிரம் அருள்க;

பிறைசூடு பெருமானே - சந்திரனைச் சூடிய பெருமானே;

பிணி தீர அருளாயே - என் பிணிகள் (பிறவிப்பிணி, உடற்பிணி) தீர அருள்க; (பிணி - பிறவிப்பிணி; வினைக்கட்டு);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment