Saturday, April 23, 2022

N.012 - திருஞான சம்பந்தர் துதி - தேனமர் கொன்றை

2010-05-29

N.012 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2010

----------------

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)


1)

தேனமர் கொன்றை திகழ்முடி மீது

.. திங்களும் கங்கையும் சூடும்

மானமர் கரத்தன் மைந்நிறக் கண்டன்

.. மான்விழி மங்கையோர் பங்கன்

வானவன் கழலை வாழ்த்திய தமிழால்

.. மறைநெறி நிலைபெறச் செய்த

ஞானசம் பந்தர் நாண்மலர்த் தாளை

.. நான்பணிந் தேத்துகின் றேனே.


தேன் அமர் கொன்றை திகழ் முடிமீது திங்களும் கங்கையும் சூடும், மான் அமர் கரத்தன் - தேன் திகழும் கொன்றைமலரை அணிந்த திருமுடிமேல் சந்திரனையும் கங்கையையும் அணிந்த, கையில் மானை ஏந்தியவன்;

மைந்-நிறக் கண்டன் - கரிய கண்டன்; (மை - கருநிறம்; இருள்);

மான்விழி மங்கை ஓர் பங்கன் - மான் போன்ற பார்வையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.4.1 - "வாணுதல் மான்விழி மங்கையோடும்");

வானவன் கழலை வாழ்த்திய தமிழால் மறைநெறி நிலைபெறச் செய்த - அந்தத் தேவனது திருவடியை வாழ்த்திய தமிழ்ப்பாமாலைகளால் வேதநெறியைத் தழைக்கச்செய்தவரான;

ஞானசம்பந்தர் நாண்மலர்த்-தாளை நான் பணிந்து ஏத்துகின்றேனே - திருஞான சம்பந்தரது அன்றலர்ந்த தாமரைமலர் போன்ற பாதத்தை நான் வணங்கித் துதிக்கின்றேன்; (நாண்மலர் - நாள்+மலர் - அன்று பூத்த புதிய பூ);

2)

வந்திருள் தன்னை ஒளியெனச் சொன்ன

.. மதியிலார் வாதினை வென்று,

சந்திரன் தன்னைச் சடைமிசை அணியும்

.. சங்கரன், நான்மறை போற்றும்

செந்தழல் உருவன், சிவபெரு மான்சீர்

.. செப்பிய ஆளுடைப் பிள்ளை

பந்தனார் கமல பாதமி ரண்டைப்

.. பரவிடப் பரகதி திடமே.


வந்து இருள்-தன்னை ஒளியெனச் சொன்ன மதியிலார் வாதினை வென்று - இங்கே வந்து இருளை ஒளி என்று சொன்ன மதியற்றவர்களை வாதில் வென்று;

சந்திரன்-தன்னைச் சடைமிசை அணியும் சங்கரன் - சந்திரனைச் சடைமேல் அணிந்த சங்கரன்;

நான்மறை போற்றும் செந்தழல் உருவன் - நால்வேதங்கள் போற்றும் செந்தீப் போன்ற செம்மேனியன்;

சிவபெருமான் சீர் செப்பிய ஆளுடைப் பிள்ளை - அச்-சிவபெருமான் திருப்புகழைப் பாடிய ஆளுடைய பிள்ளையாரான;

பந்தனார் கமலபாதம் இரண்டைப் பரவிடப் பரகதி திடமே - திருஞான சம்பந்தரது இரு-தாமரைத்திருவடிகளைப் போற்றி வணங்கினால் பரகதி பெறுதல் நிச்சயம்; (பந்தனார் - ஞானசம்பந்தர் என்பதன் ஒருபுடைப் பெயர்); (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment