Thursday, April 21, 2022

M.054 - வானிறந்தான் - கண்ணிலவு - மடக்கு

2010-05-08

M.054 - வானிறந்தான் - கண்ணிலவு - மடக்கு

--------------

வானிறந்தான் ஏறு மணிமிடற்றன் ஊரேறும்

வானிறந்தான் அன்றயன் மால்தேட - வானிறந்தான்

கண்ணிலவு பூமாலை கட்டியன்பாய்க் கைதொழுவோம்

கண்ணிலவு நெற்றியன்நம் காப்பு.


பதம் பிரித்து:

வான் நிறந்தான் ஏறு மணிமிடற்றன் ஊர் ஏறும்

வால் நிறம்; தான் அன்று அயன் மால் தேட - வான் இறந்தான்;

கள் நிலவு பூமாலை கட்டி அன்பாய்க் கைதொழுவோம்;

கண் நிலவு நெற்றியன் நம் காப்பு.


வானிறந்தான் - 1. வான் நிறம்தான்; 2. வால் நிறம்தான்; 3. வான் இறந்தான்;

வான் - 1. மேகம்; 2. விண்;

ஊர்தல் - ஏறுதல் (To mount); ஏறி நடத்துதல் (To ride, as a horse);

வால் - வெண்மை;

தான் - 1. தேற்றச்சொல் / அசைச்சொல்; 2. படர்க்கை ஒருமைப்பெயர் (He, she or it) - அவன்;

இறத்தல் - கடத்தல் (To go beyond, transcend, pass over);

கண்ணிலவு - 1. கள் நிலவு; 2. கண் நிலவு;

கள் - தேன்;

காப்பு - காவல்;


மேகத்தின் நிறம் உடைய மணி திகழும் கண்டத்தை உடையவன் (நீலகண்டன்) வாகனமான எருதும் வெண்ணிறம். அவன் முன்னொரு சமயத்தில் பிரமனும் திருமாலும் தேடுமாறு விண்ணையும் கடந்தவன் (/கடந்தான்). அவனைத் தேன் இருக்கும் மலர்களால் மாலை கட்டி அன்போடு வணங்குவோம். (அந்த) நெற்றிக்கண்ணனே நம் காவல்.


வி. சுப்பிரமணியன்

------------- -------------

No comments:

Post a Comment