2010-08-14
N.014 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2010
----------------
1) --- (கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு) ----
கொலையானையின் உரிபோர்த்தொரு குளிர்திங்களை வைத்த
மலையான்மகள் மணவாளனைப் பித்தாவென வாழ்த்தித்
தலம்யாவையும் இசைகூடிய தமிழாற்பணி தொண்டர்
தொலையாப்புகழ் அடைசுந்தரர் துணைச்சேவடி போற்றி.
கொலையானையின் உரி போர்த்து, ஒரு குளிர்திங்களை வைத்த - கொலைசெய்ய வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்து, குளிர்ந்த சந்திரனைச் சடையில் வைத்த; (உரி - தோல்);
மலையான்மகள் மணவாளனைப், "பித்தா" என வாழ்த்தித் - மலைமகள் கணவனைப், "பித்தா" என்று துதித்துப் பாடி;
தலம்யாவையும் இசை கூடிய தமிழால் பணி தொண்டர் - பல தலங்களையும் இசை பொருந்திய தமிழ்ப்பாமாலைகள் பாடி வணங்கிய தொண்டர்;
தொலையாப்-புகழ் அடை-சுந்தரர் துணைச்-சேவடி போற்றி - அழிவற்ற புகழை அடைந்த சுந்தரரது சிவந்த இருதிருவடிகள் போற்றி; (துணை - இரண்டு);
2) --- (கலிவிருத்தம் - மா காய் மா காய் - வாய்பாடு) ---
மூவா முதல்வனுமோர் முதிய உருக்கொண்டு
வாவா அடிமையென்ன, வாது புரிந்துபின்னர்த்,
தேவா எனையாண்ட செல்வா எனப்போற்றும்
தூவாய் உடையார்வன் தொண்டர் பதம்போற்றி.
மூவா முதல்வனும் ஓர் முதிய உருக்கொண்டு, "வா வா அடிமை" என்ன - என்றும் முதுமையின்றி இருக்கும் முதல்வனான சிவபெருமான், ஒரு முதியவர் வடிவில் வந்து, "வா வா, நீ அடிமை" என்று சொல்ல;
வாது புரிந்து, பின்னர்த், "தேவா! எனை ஆண்ட செல்வா" எனப் போற்றும் தூ-வாய் உடையார் - அவரோடு வாதுசெய்து, பிறகு, அவனைத், "தேவனே! என்னை ஆட்கொண்ட செல்வனே" என்று போற்றிய திருவாய் உடையவர்;
வன்தொண்டர் பதம் போற்றி - வன்தொண்டர் என்ற பெயரும் உடைய சுந்தரர் திருவடி போற்றி;
3) --- (கலிவிருத்தம் - மா மா மா மா - வாய்பாடு) ---
முன்னர்ச் சொன்ன வாக்கின் முறையால்
மின்னற் சடையன் வெண்ணெய் நல்லூர்
தன்னில் ஆட்கொள் தகைமை யாளர்
வன்னற் றொண்டர் மலர்த்தாள் போற்றி.
முன்னர்ச் சொன்ன வாக்கின் முறையால் - முன்பு (கயிலையில்) சொன்ன வாக்கின்படி;
மின்னற்-சடையன் வெண்ணெய்நல்லூர்-தன்னில் ஆட்கொள் தகைமையாளர் - மின்னல் போல ஒளிவீசும் சடையுடைய பெருமான் திருவெண்ணெய்நல்லூரில் ஆட்கொண்டருளிய பெருமையுடையவர்; (தகைமை - பெருமை; தகுதி);
வன்-நற்றொண்டர் மலர்த்தாள் போற்றி - வன்தொண்டரும் நல்ல தொண்டருமான சுந்தரரது மலர்ப்பாதம் போற்றி; (வன்னற்றொண்டர் - வன்-நல்-தொண்டர் - வன்தொண்டர் & நல்தொண்டர்);
4) --- (கலிவிருத்தம் - மா மா மா மா - வாய்பாடு) --- (மடக்கு) ---
"படியோ லையதே பறித்தான்; மூலம்
படியீர்" என்று பரமன் காட்டும்
படியோர் வாது செய்தார் பாட்டால்
படியா மனமும் படியுந் தானே.
* படி - இச்சொல் அடிதோறும் வெவ்வேறு பொருளில் வந்தது;
படி - ஒத்த பிரதி (True copy, as of a manuscript);
படித்தல் - வாசித்தல் (To read);
படி - விதம்;
படிதல் - கீழ்ப்படிதல்; வசமாதல்;
"படியோலையதே பறித்தான்; மூலம் படியீர்" என்று பரமன் காட்டும்படி ஓர் வாது செய்தார் பாட்டால் படியா-மனமும் படியுந் தானே - "இவன் முன்பு பிடுங்கி அழித்தது ஒரு பிரதியோலை. மூலஓலை இதோ! படியுங்கள்" என்று பரமன் அவையோர்க்குக் காட்டும்படி ஒரு வாதுசெய்தவரான சுந்தரரது திருப்பாட்டால் (தேவாரத்தால்) அடங்காத மனமும் அடங்கும்.
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment