2010-08-30
S.122 - சிவன் - கண்ணன் - சிலேடை
------------------
கோலமாம் கார்கண்ட வண்ணம் குழலூதும்
சீலமாம் ஆனாயன் சேவிக்கு - மாலமர்
நாகமுடி மேலாடும் நம்பிமத வேள்பயந்த
வேகமலி வெள்ளேற்றன் விண்டு.
சொற்பொருள்:
கோலம் - அழகு;
காணுதல் - பெறுதல்; ஒத்திருத்தல்; பார்த்தல்;
கார் கண்ட வண்ணம் - 1. கருமை பொருந்திய நிறம்; / 2. கழுத்தின் நிறம் கருமை;
ஆனாயன் - 1. மாட்டிடையன்; / 2. ஆனாய நாயனார்;
சேவிக்குமாலமர் - 1. சேவிக்கு(ம்) மால் அமர்; / 2. சேவிக்கும் ஆல் அமர்;
ஆல் - 1. ஆலமரம்; 2. ஆலகாலம்;
அமர்தல் - 1. இருத்தல்; 2. விரும்புதல்;
அமர் - போர்;
நாகமுடிமேல் - 1. நாகத்தின் தலைமேல்; / 2. நாகம் தலைமேல் (நாக(ம்) முடிமேல்);
ஆடுதல் - 1. செய்தல்; கூத்தாடுதல்; / 2. அசைதல்;
நம்பி - ஆணிற் சிறந்தவன்; கடவுள்;
பயத்தல் - 1. பெறுதல் (To beget, generate, give birth to); / 2. அஞ்சுதல்;
விண்டு - விஷ்ணு;
கண்ணன்:
கோலம் ஆம் கார் கண்ட வண்ணம் - கருமை பொருந்திய (மேனி) நிறம் அழகு ஆகும்;
குழல் ஊதும் சீலம் ஆம் - புல்லாங்குழல் வாசிப்பவன்;
ஆனாயன் - ஆன் ஆயன் - மாட்டிடையன்;
சேவிக்கு(ம்) மால் - பக்தர்கள் வணங்கும் திருமால்;
அமர் நாகமுடிமேல் ஆடும் நம்பி - 1. நாம் விரும்புகின்ற காளிங்க-நர்த்தனன்; 2. பாம்பின் தலைமேல் ஆடிப் போர்செய்தவன்; (அமராடுதல் - போர்செய்தல்);
மதவேள் பயந்த - மன்மதனைப் பெற்ற;
விண்டு - விஷ்ணு;
சிவன்:
கோலம் ஆம் கார் கண்ட வண்ணம் - கண்ட வண்ணம் கோலம் ஆம் கார் - கழுத்தின் நிறம் அழகு ஆகும் கருமை;
குழல் ஊதும் சீலம் ஆம் ஆனாயன் சேவிக்கும் - புல்லாங்குழல் ஊதி இசையால் வழிபட்ட ஆனாய நாயனார் வணங்கிய;
ஆல் அமர், நாக(ம்) முடிமேல் ஆடும் நம்பி - கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கின்ற (/ஆலகாலத்தை விரும்பிய), தலைமேல் பாம்பு அசைகின்ற பெருமான்;
மதவேள் பயந்த - மன்மதன் (பாணம் ஏவுவதற்கு) அஞ்சிய;
வேக(ம்) மலி வெள்-ஏற்றன் - விரைந்து செல்லும் வெள்ளை இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான்.
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment