2010-07-14
N.013 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2010
-------------
1) ---- (வெண்டளையால் வந்த ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா) ----
அம்மானை சிந்தைய ராய்வணங்கத் தீயாய்நீள்
அம்மானை, ஆலமுண்ட அண்ணலை, ஓர்கையில்
அம்மானை ஏந்தும் அழகனை, வாயார
அம்மானை பாடி அடிபணிந்த வாதவூர்
எம்மானை எம்மொழியால் எப்படி ஏத்துவேன்
அம்மாநை கின்றேன் அவர்பொற்றாள் சிந்தித்தே.
பதம் பிரித்து:
அம் மால் நை சிந்தையராய் வணங்கத் தீயாய் நீள்
அம்மானை, ஆலம் உண்ட அண்ணலை, ஓர் கையில்
அம் மானை ஏந்தும் அழகனை, வாயார
அம்மானை பாடி அடிபணிந்த வாதவூர்
எம்மானை எம்மொழியால் எப்படி ஏத்துவேன்;
அம்மா, நைகின்றேன் அவர் பொற்றாள் சிந்தித்தே.
அம்-மால் நை-சிந்தையராய் வணங்கத் தீயாய் நீள் அம்மானை - அத்-திருமாலும் அடி தேடி வாடிய மனத்தோடு வணங்கும்படி ஜோதியாகி எல்லையின்றி நீண்ட கடவுளை; (மால் - திருமால்); (நைதல் - வாடுதல்; மனம் கசிதல்); (திருவாசகம் - திருச்சதகம் - 8.5.100 - "நின்னையே பாடி நைந்துநைந்து உருகி நெக்குநெக்கு ஆடவேண்டும் நான்"); (அம்மான் - கடவுள்);
ஆலம் உண்ட அண்ணலை - ஆலகாலத்தை உண்ட பெருமானை;
ஓர் கையில் அம் மானை ஏந்தும் அழகனை - ஒரு கையில் அழகிய மானை ஏந்தும் அழகனை; (அம் - அழகு; அந்த);
வாயார அம்மானை பாடி அடிபணிந்த வாதவூர் எம்மானை - "திரு-அம்மானை" பாடிப் போற்றிய மாணிக்கவாசகராகிய எம் தலைவனை; (அம்மானை - ஒரு பாடல்வகை); (வாதவூர் - மாணிக்கவாசகர் அவதரித்த ஊர்); (எம்மான் - எம் சுவாமி);
எம்-மொழியால் எப்படி ஏத்துவேன் - எந்தச் சொற்களால் எப்படிப் போற்றுவேன் என்று எண்ணி;
அம்மா, நைகின்றேன் அவர் பொற்றாள் சிந்தித்தே - அம்மா, அவர் பொன்னடிகளைச் சிந்தித்து நான் மனம் உருகின்றேன்;
2) ---- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ----
வெம்பாவம் சேராவே வெற்புவில்லில் திருமாலை
அம்பாவைத் தன்றுபுரம் அட்டானே வந்தெழுதத்
தம்பாவைச் சொல்மணிவா சகனாரின் விழிப்பூட்டும்
எம்பாவை இருபதையும் இசைபாடும் அடியார்க்கே.
வெம்பாவம் சேராவே - கொடிய தீவினை வந்து அடையமாட்டா (= வினையெல்லாம் அழியும்);
வெற்புவில்லில் திருமாலை அம்பா வைத்து அன்று புரம் அட்டானே வந்து எழுதத் - மேருவில்லில் விஷ்ணுவை அம்பாகக் கோத்து முன்பு முப்புரங்களை அழித்த பெருமானே வந்து எழுதிக்கொள்ள; (வெற்பு - மலை); (அம்பா - அம்பாக); (அடுதல் - அழித்தல்);
தம் பாவைச் சொல்-மணிவாசகனாரின் - தாம் பாடியருளிய பாடல்களான திருவாசகத்தைச் சொன்ன மாணிக்கவாசகரின்;
விழிப்பு-ஊட்டும் எம்பாவை இருபதையும் இசைபாடும் அடியார்க்கே - அறிவின் மயக்கத்தைத் தீர்த்து விழிப்புணர்வைத் தரும் திருவெம்பாவைப் பாடல்கள் இருபதையும் இசையோடு பாடும் அடியார்களுக்கு;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment