Monday, April 18, 2022

M.052 - அகலா - மகத்தொளியாய் - மடக்கு

2010-02-27

M.052 - அகலா - மகத்தொளியாய் - மடக்கு

--------------

அகலா மதியேனும் அல்லலற என்றும்

அகலா அளியெனு(ம்)நெய் ஆரும் - அகலா

மகத்தொளியாய் நிற்பாய் அயன்மால் அறியா

மகத்தொளியாய் தாராய் வரம்.


பதம் பிரித்து:

அகலா மதியேனும் அல்லல் அற, என்றும்

அகலா அளி எனும் நெய் ஆரும் அகல் ஆம்

அகத்து ஒளியாய் நிற்பாய், அயன் மால் அறியா

மகத்து ஒளியாய், தாராய் வரம்.


சொற்பொருள்:

அகல்தல் - 1. விருத்தியடைதல்; விரிதல்; 2. நீங்குதல்;

அளி - அன்பு;

அகல் - விளக்குத் தகழி;

மகத்து - பெரியது; பெருமையானது;

ஒளி - 1. வெளிச்சம்; 2. மறைத்தல் (ஒளித்தல்);

ஒளியாய் - 1. ஒளித்துக்கொள்ளாதவனே; ஒளி ஆகி; 2. ஒளி உடையவனே;


அகலா மதியேனும் அல்லல் அற - சிறுமதி உடைய அடியேனும் துன்பம் எல்லாம் தீரும்படி;

அகலா அளி எனும் நெய் ஆரும் அகல் ஆம் கத்து ஒளியாய் நிற்பாய் - நீங்காத அன்பு என்ற நெய் நிறைந்த அகல் ஆன நெஞ்சில் உன்னை மறைத்துக்கொள்ளாமல் ஒளி ஆகி நிற்பவனே; (= பக்தர்களது உள்ளம் என்ற அகலில் திகழ்கின்ற ஜோதியே); (* அப்பர் தேவாரம் - 4.75.4 - "உள்ளமே தகளியாக மடம்படும் உணர்நெய் அட்டி");

அயன் மால் அறியா மகத்து-ஒளியாய் - பிரமன் திருமால் இவர்களால் அறிய ஒண்ணாத பெருஞ்சோதியே;

தாராய் வரம் - வரம் தருவாயாக;


பிற்குறிப்பு: * அப்பர் தேவாரம் - 4.75.4 -

உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக

மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனும் திரி மயக்கி

இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே.


வி. சுப்பிரமணியன்

------------- -------------

No comments:

Post a Comment