06.01 – சிவன் சிலேடைகள்
2010-08-21
06.01.120 - சிவன் - குறுவட்டு (CD - compact disc) - சிலேடை
-----------------------------------------------
ஒளிஒலிஆம் ஓம்ப உறைவிடம் உண்டே
களியாம் கலிபறையும் கையேந் - தளியுள்ள
மக்கட் கணியாகும் சாதனம் மாதொருபால்
வைக்கும் அரன்குறு வட்டு.
சொற்பொருள்:
ஓம்புதல் - பாதுகாத்தல் (To protect, guard, defend, save); பேணுதல் (to keep in mind; to cherish);
உறைத்தல் - சுவையுறைத்தல் (To be pungent, biting, sharp);
உறைவிடம் - 1. இருக்குமிடம் (Dwelling-place, residence); / 2. உறை விடம் - தங்கும் விடம்; உறைக்கும் விடம்;
உண்டே - 1. உண்டு; ஏ - தேற்ற ஏகாரம்; அசை; / 2. உண் தே - உண்ணும் தெய்வம்; (இந்த இடத்தில், புணர்ச்சியால் "ண்+தே" = "ண்டே" என்று திரியும்);
கலி - 1. ஒலி; / 2. துன்பம்;
பறையும் - 1. சொல்லும்; / 2. அழியும்; தீரும்;
கையேந்துதல் - 1. கையில் தாங்குதல்; / 2. யாசித்தல்;
அளி - அன்பு; ஆசை;
அளிதல் - குழைதல்;
அளி உள்ள மக்கள் - 1. விருப்பம் உள்ளவர்; / 2. அளியும் (குழையும்) உள்ளம் கொண்ட பக்தர்;
மக்கட்கு - மக்கள்+கு - மக்களுக்கு;
அணி - சமீபத்தில் (Near); / ஆபரணம்;
சாதனம் - 1. கருவி; / 2. உருத்திராக்கம்;
குறுவட்டு - compact disc (CD) என்ற பொருளில் வழங்கும் ஒரு புதுச்சொல்;
குறுவட்டு (CD compact disc):
ஒளி ஒலி ஆம் - ஒளியால் ஒலி ஆகும் (Music encoded in digital format in a CD is read by the CD player by using a laser beam and then converted to audio); ("ஒலி - Audio CD, ஒளி - DVD" என்றும் கொள்ளலாம்);
ஓம்ப உறைவிடம் உண்டே - பாதுகாக்க உறை உண்டு;
களி ஆம் கலி பறையும், கையேந்து அளியுள்ள மக்கட்கு அணி ஆகும் சாதனம் - மகிழ்வு தரும் ஒலி செய்யும், கையில் தாங்கும் பிரியர்களுக்கு (அவர்கள்) அருகில் இருக்கும் (அதனை இசைக்கும்) கருவி;
குறுவட்டு - compact disc (CD);
சிவன்:
ஒளி ஒலி ஆம் - ஒளி, ஒலி, என எல்லாமாய் இருப்பவன்; (அப்பர் தேவாரம் - 5.97.3 - "சோதியுட் சோதியாய் நின்ற சோதியே"); (அப்பர் தேவாரம் - 6.38.1 - "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே");
ஓம்ப உறைவிடம் உண் தே - உலகங்களைக் காப்பதற்காக, உறைக்கும் விடத்தை உண்ட தெய்வம்; ("ஈசனைப் போற்றத் திருக்கயிலை, கோயில்கள் போன்ற உறைவிடம் உண்டு" - என்றும் பொருள்கொள்ளலாம்);
களி ஆம் கலி பறையும் கையேந்து அளி உள்ள மக்கட்கு - குழையும் மனத்தோடு யாசிக்கும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி ஆகும்; அவர்கள் துன்பம் ஒழியும்;
அணி ஆகும் சாதனம் - (அவர்களுக்கு / சிவனுக்கு) உருத்திராக்கம் ஆபரணம் ஆகும்; (சம்பந்தர் தேவாரம் - 3.120.8 - "கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுதெழு குலச்சிறை");
மாது ஒருபால் வைக்கும் அரன் - திருமேனியில் ஒரு பக்கத்தில் உமையைப் பாகமாக வைத்த சிவபெருமான். (அப்பர் தேவாரம் - 4.30.1 - "நங்கையைப் பாகம் வைத்தார்");
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment