06.01 – சிவன் சிலேடைகள்
2010-08-28
06.01.121 - சிவன் - மின்விசிறி (ceiling fan) - சிலேடை
-----------------------------------------------
தலைமேற் பொறியரவத் தோடுசுழன் றாடும்
நிலையாக நிற்கும் வடிவம் - பலகாட்டும்
நாளுமடி நாடின்மெய் யின்பமே மின்விசிறி
வேளுடலைக் காய்முக்கண் வேந்து.
சொற்பொருள்:
பொறி - 1. கருவி; எந்திரம்; / 2. புள்ளி; (இங்கே, பாம்பின் படத்திலுள்ள புள்ளிகள்);
அரவம் - 1. சத்தம்; / 2. பாம்பு;
அரவத்தோடு - சம்பந்தர் தேவாரம் 1.62.2 - "தோடரவத் தொருகாதன்" - தோடு அரவம் - தோடாக உள்ள பாம்பு;
ஆடுதல் - 1. அசைதல் (To move, swing, shake, vibrate); / 2. கூத்தாடுதல் (To dance);
நிற்றல் - 1. இயங்காது இருத்தல் (stopped or suspended; ஒழிதல்); / 2. இருத்தல் (abide, continue);
அடி - 1. கீழ்; / 2. திருவடி;
மெய் - 1. உடல்; / 2. உண்மை;
வேள் - மன்மதன்;
காய்தல் - எரித்தல்;
வேந்து - அரசன்; (அப்பர் தேவாரம் - 6.32.5 - "வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி");
மின்விசிறி (ceiling fan):
தலைமேல் பொறி - நம் தலையினும் உயரத்தில் மேலே இருக்கும் எந்திரம்;
அரவத்தோடு சுழன்று ஆடும் - சத்தத்தோடு சுற்றி இயங்கும்;
நிலையாக நிற்கும் - அதே இடத்தில் இருக்கும்; (நமக்குத் தேவை இல்லாத சமயத்தில், மின்சாரம் இல்லாத சமயத்தில், "சுற்றாமல் நிற்பதும் உண்டு" என்றும் கொள்ளலாம்);
வடிவம் பல காட்டும் - பல வடிவங்களில் இருக்கும்;
நாளும் அடி நாடின் மெய் இன்பமே - என்றும் அதன் கீழே அடைவோர்க்கு உடலுக்குச் சுகம் கிட்டும்;
சிவன்:
தலைமேல் பொறி அரவத்தோடு சுழன்று ஆடும் - தன் தலைமேல் புள்ளிகள் பொருந்திய பாம்பைத் தாங்கிச் சுழன்று நடம் செய்வான்; ('பொறி = தீப்பொறி' என்று கொண்டு, 'நெற்றிக்கண் இருக்கும்; பாம்பைத் தோடாக அணிந்தவன்; சுழன்று ஆடுவான்' என்றும் பொருள்கொள்ளலாம்);
நிலையாக நிற்கும் - அழியாமல் இருப்பான்;
வடிவம் பல காட்டும் - விரும்பும் வடிவத்தில் காட்சி அளிப்பான்;
நாளும் அடி நாடின் மெய்யின்பமே - என்றும் திருவடியை விரும்பினால், பேரின்பம் கிட்டும்;
வேள்-உடலைக் காய்-முக்கண் வேந்து - மன்மதனது உடம்பைச் சுட்டெரித்த முக்கண்ணுடைய அரசனான சிவபெருமான்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment