Saturday, April 23, 2022

6.5.15 - பொது - "மனம் போன போக்கில்"

06.05 – பலவகை

2010-07-26

6.5.15) பொது - "மனம் போன போக்கில்"

----------------------------------------

(பலவகை யாப்பு அமைப்புகளில் - அந்தாதி)


1) --- கலிவிருத்தம் -- 'காய் மா மா மா' என்ற வாய்பாடு --

மனம்போன போக்கில் வாழும் பலரும்

இனமான பேரும் இழித்துப் பேசத்

தனம்போன இடத்தைத் தான்கா ணாராய்த்

தினமான சென்று வருந்து வாரே.


இனம் - குலம்; சுற்றம்;

தனம் - பொருள்; பணம்;

ஆன - ஆனவை; 'ஆயின' என்பதன் இடைக்குறையாகவும் கருதலாம்; (சம்பந்தர் தேவாரம் - 2.16.6 - "பண்ணிசை யான பகர்வானை" - ஆன - ஆனவை, வினையாலணையும் பெயர்); (சம்பந்தர் தேவாரம் - 2.48.2 - "பிள்ளையினோடு உள்ளநினைவு ஆயினவே வரம்பெறுவர்" - ஆயின - வினையாலணையும் பெயர்);

தினமான - 'ஆன தினம்' என்று கொண்டு, 'இறந்த நாளில் நரகை அடைந்து துன்புறுவர்' என்றும் கொள்ளலாம்;


2) --- கலிவிருத்தம் -- 'மா மா மா காய்' என்ற வாய்பாடு --

வாரும் தோலும் வழங்கும் அவர்காண

ஊரும் விடையை ஒதுங்கென் றரன்சொன்ன

சீரு டைய திருநா ளைப்போவார்

சேரும் சிற்றம் பலத்தைச் சிந்திநெஞ்சே.


மனமே! கோயில் வாத்தியங்களுக்காக வாரும் தோலும் கொடுக்கும் அடியவரான நந்தனார் தன்னைத் தரிசிப்பதற்காகத் தன் இடபத்தைச் "சற்று விலகு" என்று சிவன் சொன்ன பெருமையுடைய திருநாளைப்போவார் சென்று சிவனோடு கலந்த தில்லைச் சிற்றம்பலத்தை நீ கருதுவாயாக!


3) --- வஞ்சி விருத்தம் -- 'விளம் மா விளம்' என்ற வாய்பாடு --

நெஞ்சமே தினமும் நீமிகு

வஞ்சமே செய்து வாழ்தியால்;

கொஞ்சமேல் என்றன் கூற்றினை;

நஞ்சமார் கண்டன் தாள்தொழாய்.


வாழ்தி - வாழ்கின்றாய்;

ஆல் - அதிசயம் இரக்கம் தேற்றம் இவற்றைக் குறிப்பிக்கும் இடைச்சொல்; ஓர் அசைநிலை;

ஏல்தல்/ஏற்றல் - ஒப்புக்கொள்ளுதல்;

கொஞ்சம் ஏல் என்றன் கூற்றினை - கொஞ்சம் என் சொல்லை ஏற்பாயாக;

நஞ்சம் ஆர் கண்டன் - விஷத்தை உண்ட கண்டத்தை உடையவன் - சிவன்; (ஆர்தல் - உண்ணுதல்; பொருந்துதல்);


மனமே! அந்தோ! நீ நாள்தோறும் மிகவும் வஞ்சனையே செய்கின்றாயே! சற்றேனும் என் சொல்லைக் கேள். நீலகண்டனின் திருவடியைத் தொழுவாயாக!


4) --- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா --

தொழுமோர் நினைப்பின்றித் தோன்றியவா றிருந்துபின்னர்

அழுவார் அவரைப்போல் ஆகாதே; அடிபோற்றி

எழுவார் தமக்கின்னல் இல்லாத நிலைகொடுக்கும்

மழுவார் கரத்தானை மனமேநீ மறவாதே.


மழு ஆர் கரத்தான் - மழுவைக் கரத்தில் ஏந்தும் சிவன்;


5) --- கலிவிருத்தம் -- 'மா மா மா காய்' என்ற வாய்பாடு --

வாது செய்வார் வாழும் நாளெல்லாம்;

தீது செய்வார் செல்வம் பெறவேண்டி;

ஏது செய்யார்? ஈசன் அடிபோற்றப்

போது கொய்யார் புடைநீ போகாதே.


போது - பூ;

கொய்தல் - பறித்தல்;

புடை - பக்கம்; அருகு;


6) --- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா --

காதேகே ளாரையொப்பர் காதிலொரு குழையணிந்த

மாதேவன் புகழ்கேளா மடமாந்தர் நன்னெஞ்சே

காதேவா நால்வேதா என்றென்றே கைதொழுதால்

தீதேவா ராவண்ணம் சிவபெருமான் அருள்வானே.


பதம் பிரித்து:

காதே கேளாரை ஒப்பர், காதில் ஒரு குழை அணிந்த

மாதேவன் புகழ் கேளா மட மாந்தர்; நன்னெஞ்சே;

"கா தேவா! நால்வேதா!" என்று என்றே கைதொழுதால்,

தீதே வாரா வண்ணம் சிவபெருமான் அருள்வானே.


7) --- கட்டளைக் கலிவிருத்தம் -- (திருக்குறுந்தொகை அமைப்பில்) --

வான ளாவு மனைகள் இருக்கிலென்?

சேனை போல்பணி செய்வார் இருக்கிலென்?

ஏனை எல்லாம் கடல்போல் இருக்கிலென்?

மானை ஏந்தரன் மாணடி போற்றார்க்கே.


வான் அளாவு மனைகள் - வானைத் தொடும் மாடமாளிகைகள்;

இருக்கில் என் - இருந்தாலும் என்ன பிரயோஜனம்?

ஏனை - மற்றை (Other, the rest);

மானை ஏந்து அரன் மாண் அடி - மானைக் கையில் ஏந்தும் சிவபெருமானின் மாட்சிமை பொருந்திய திருவடியை;

(அப்பர் தேவாரம் - 5.99.2 - "கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்");


8) --- அறுசீர் விருத்தம் -- 'மா மா காய்' என்ற அரையடி வாய்பாடு --

போற்றத் தக்க பொருப்புதனைப்

.. பொறாத சைத்த இராவணனின்

ஆற்றல் அழித்து வாளொடுநாள்

.. அளித்த முக்கட் பெருமானை,

ஆற்றை முடிமேல் அணிவானை,

.. அளவில் லாத சோதியனை,

ஏற்றை உகந்த உமைகோனை

.. ஏத்தி இன்புற் றிருப்போமே.


பொருப்பு - மலை;

பொறாது அசைத்த - ஆத்திரத்தோடு ஆட்டிப் பெயர்க்க முயன்ற;

வாளொடு நாள் - சந்திரஹாஸம் என்ற வாளையும், நீண்ட ஆயுளையும்;

சோதியன் - தீப்பிழம்பானவன்;

ஏற்றை உகந்த உமைகோனை - இடபவாகனத்தை விரும்பிய உமாபதியை;

ஏத்தி - துதித்து;


9) -- வண்ண விருத்தம் --

(தனதனனந் தான .. தனதான)


இருவினையுந் தீர .. வழியானாய்

.. எமனடையும் போது .. துணையாவாய்

பருகுவிடங் காணு .. மிடறோனே

.. பனிமதியும் பூணு .. முடியானே

உருவிலணங் கோடு .. திகழ்வோனே

.. உனதுபதம் பேண .. அறியாத

கருவமிகுந் தோர்கள் .. அடையானே

.. கருதுமனந் தோறும் .. உறைவோனே.


பதம் பிரித்து:

இருவினையும் தீர .. வழி ஆனாய்;

.. எமன் அடையும் போது .. துணை ஆவாய்;

பருகு விடம் காணும் .. மிடறோனே;

.. பனிமதியும் பூணும் .. முடியானே;

உருவில் அணங்கோடு .. திகழ்வோனே;

.. உனது பதம் பேண .. அறியாத

கருவம் மிகுந்தோர்கள் .. அடையானே;

.. கருது மனந்தோறும் .. உறைவோனே.


விடம் காணும் மிடறோன் - நீலகண்டன்;

பனிமதியும் பூணும் முடியானே - 'மதியும்' என்பதில் 'உம்' எச்சவும்மை (something understood) - முடிமேல் அரவு, கங்கை, மலர்கள், இவற்றோடு திங்களையும் சூடுபவன்;

கருவம் - கர்வம்; செருக்கு;

10) -- வண்ண விருத்தம் --

(தனதான .. தனதான)


உறைபோல .. வினைமூடி

.. உனையோத .. அறியாமல்

இறைபோதும் .. நினையாமல்

.. எமனாரின் .. வரவாலே

உறவோர்கள் .. அழவீழும்

.. உடலாகி .. விடுவேனோ

பிறைசூடு .. பெருமானே

.. பிணிதீர .. அருளாயே.


இறைபோதும் - சிறிது பொழுதேனும்;

உறவோர் - உறவினர்;

பிணி - பிறவிப்பிணி; வினைக்கட்டு;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment