Monday, April 18, 2022

06.02.122 – பராய்த்துறை - தெள்ளற்கு வாழ்த்து - (வண்ணம்)

06.02.122 – பராய்த்துறை - தெள்ளற்கு வாழ்த்து - (வண்ணம்)


2010-02-25

6.2.122) தெள்ளற்கு வாழ்த்து - பராய்த்துறை (திருப்பராய்த்துறை)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தய்யத்த தாத்த தய்யத்த தாத்த

தய்யத்த தாத்த .. தனதான)

(கள்ளக்கு வாற்பை - திருப்புகழ் - வள்ளிமலை)


தெள்ளற்கு வாழ்த்து நல்லர்க்கு வாய்த்த

.. .. செல்வத்தை ஆக்கி .. அழியாத

.. செய்குற்ற மாய்க்கு மல்லுற்ற தீர்த்த

.. .. செல்லற்கொ ரேற்றை .. மகிழ்வோனே

கள்ளுற்ற பூக்கள் உள்ளுற்ற காக்கள்

.. .. நள்ளிற்ப ராய்த்து .. றையினானே.

.. கல்லப்பர் நீர்க்கண் உய்விக்க, வேர்த்த

.. .. கையர்க்கு வீழ்ச்சி .. தருவோனே

பள்ளத்தை நோக்கு முள்ளத்தி னோட்டம்

.. .. வெள்ளத்தை ஏய்க்கு .. மதனாலே

.. கள்ளத்தை ஆற்றி எள்ளற்கு ளேற்கு

.. .. முள்ளற்ற வாழ்க்கை .. அருளாயே

தள்ளற்க காக்க வெள்ளத்த நீற்ற

.. .. வள்ளிப்பி ராட்டி .. துணைதாதாய்

.. சைலத்தி னாட்டி மெய்யொட்ட ஏற்ற

.. .. சைவத்த மூத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

தெள்ளற்கு வாழ்த்து நல்லர்க்கு வாய்த்த

.. .. செல்வத்தை ஆக்கி, அழியாத

.. செய்-குற்றம் மாய்க்கும் மல் உற்ற தீர்த்த;

.. .. செல்லற்கு ஒர் ஏற்றை மகிழ்வோனே;

கள் உற்ற பூக்கள் உள் உற்ற காக்கள்

.. .. நள்ளிற் பராய்த்துறையினானே;

.. கல் அப்பர் நீர்க்கண் உய்விக்க, வேர்த்த

.. .. கையர்க்கு வீழ்ச்சி தருவோனே;

பள்ளத்தை நோக்கும் உள்ளத்தின் ஓட்டம்

.. .. வெள்ளத்தை ஏய்க்கும்; மதனாலே (/அதனாலே)

.. கள்ளத்தை ஆற்றி எள்ளற்கு உளேற்கும்

.. .. முள் அற்ற வாழ்க்கை அருளாயே;

தள்ளற்க; காக்க; வெள்ளத்த; நீற்ற;

.. .. வள்ளிப்பிராட்டி துணை தாதாய்;

.. சைலத்தினாட்டி மெய் ஒட்ட ஏற்ற

.. .. சைவத்த; மூத்த பெருமானே.


தெள்ளற்கு வாழ்த்து நல்லர்க்கு வாய்த்த செல்வத்தை ஆக்கி, அழியாத செய்-குற்றம் மாய்க்கும் மல்ற்ற தீர்த்த - தெளிந்த ஞானம் பெறவேண்டி வழிபடும் நல்லவர்களுக்குச் சிறந்த செல்வத்தை வழங்கி, நீக்குவதற்கு அரிய வினையையெல்லாம் அழிக்கும் வலிமை உடைய தூயனே; (தெள்ளல் - தெள்ளுதல் - தெளிதல்); (வாய்த்தல் - நன்கமைதல்; சிறத்தல்); (மல் - வலிமை); (தீர்த்தன் - தூயன்);

செல்லற்கு ஒர் ஏற்றை மகிழ்வோனே - வாகனமாக ஒப்பற்ற எருதை விரும்பியவனே; (செல்லற்கு - செல்வதற்கு); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

கள்ற்ற பூக்கள் உள்ற்ற காக்கள் நள்ளிற் பராய்த்துறையினானே - தேன் நிறைந்த பூக்கள் உள்ளே இருக்கின்ற சோலைகள் நடுவில் இருக்கும் திருப்பராய்த்துறையில் உறைகின்றவனே; (கள் - தேன்); (கா - சோலை); (நள் - நடு); (சந்தக்குறிப்பு: "பராய்த்து..றையினானே" -- "தீப மங்கள ஜோதீ நமோ நம" என்ற திருப்புகழில் வரும் "மாகயி..லையிலேகி" என்ற இடத்தைப் போல, இங்கே 'றையினானே' என்பதில் 'றை'யைக் குறில்போலக் கருதவேண்டும்);

கல்ப்பர் நீர்க்கண் உய்விக்க, வேர்த்த கையர்க்கு வீழ்ச்சி தருவோனே - (கடலில் ஆழ்த்துவதற்காகச் சமணர்கள் பிணித்த) கல்லே திருநாவுக்கரசரைக் கடலில் உய்யச்செய்ய, அஞ்சிய சமணர்களுக்கு வீழ்ச்சியைத் தந்தவனே; (நீர் - கடல்); (வேர்த்தல் - அஞ்சுதல்); (கையர் - கீழோர்; இங்கே சமணர்கள்);

பள்ளத்தை நோக்கும் உள்ளத்தின் ஓட்டம் வெள்ளத்தை ஏய்க்கும் - தாழ்வையே கருதும் என் உள்ளத்தின் ஓட்டம் வெள்ளத்தைப் போன்றது; (பள்ளம் - தாழ்வு); (நோக்குதல் - கருதுதல்; விரும்புதல்); (ஏய்த்தல் - ஒத்தல்);

மதனாலே (/அதனாலே) கள்ளத்தை ஆற்றி எள்ளற்கு ளேற்கும் முள்ற்ற வாழ்க்கை அருளாயே - (அப்படி இருப்பதால்) அறியாமையால் குற்றமே செய்து பிறரால் நகைப்பிற்கு இடமாகும் எனக்கும், முள் (போன்ற இடர்கள்) இல்லாத இனிய வாழ்வை அளிப்பாயாக; (மதன் - செருக்கு; ஆணவம்; அறியாமை); (கள்ளம் - வஞ்சனை; குற்றம்); (எள்ளல் - இகழ்ச்சி); (உளேற்கு - உளேன்+கு - உள்ளேனுக்கு);

தள்ளற்க - கைவிட்டுவிடாதே; (தள்ளுதல் - கைவிடுதல்);

காக்க - காத்தருள்வாயாக;

வெள்ளத்த - கங்காதரனே; (வெள்ளம் - நீர்ப்பெருக்கு; நீர்);

நீற்ற - திருநீற்றைப் பூசியவன்;

வள்ளிப்பிராட்டி துணை தாதாய் - வள்ளிகணவனான முருகனுக்குத் தந்தையே; (துணை - கணவன்);

சைலத்தினாட்டி மெய் ஒட்ட ஏற்ற சைவத்த - மலைமகளைத் திருமேனியில் சேர்ந்து இருக்குமாறு ஒரு பக்கத்தில் ஏற்ற, சிவாகமங்களில் சொல்லப்பெறுபவனே; (சைலம் - மலை); (ஆட்டி - பெண்); (சைவத்தன் - சிவகாமங்களில் சொல்லப்பெறுபவன்); (சைவம் - ஆகமம்; சிவாகமம்); (சுந்தரர் தேவாரம் - 7.82.7 - "சைவத்தசெவ் வுருவன்" - சிவாகமங்களிற் சொல்லப்பட்ட வேடத்தையுடைய சிவந்த திருமேனியை யுடையவன்);

மூத்த பெருமானே - யாவரினும் மூத்த பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment