06.03 – மடக்கு
2010-05-09
6.3.55) கண்ணிறை - கானமர் - மடக்கு
-------------------------
கண்ணிறை பூவிட்டுக் காலையும் மாலையும்
கண்ணிறை நீர்வழியக் காமனைக்காய் - கண்ணிறை
கானமர் கொன்றையங் கண்ணியான் ஆடற்குக்
கானமர் கோனைக் கருது.
பதம் பிரித்து:
கள் நிறை பூ இட்டுக், காலையும் மாலையும்,
கண் நிறை நீர் வழியக், காமனைக் காய் - கண் இறை,
கான் அமர் கொன்றையங் கண்ணியான், ஆடற்குக்
கான் அமர் கோனைக் கருது.
உரைநடை:
காமனைக்காய் கண்ணிறை, கானமர் கொன்றையங் கண்ணியான், ஆடற்குக் கானமர் கோனைக், கண்ணிறை பூவிட்டுக் காலையும் மாலையும் கண்ணிறை நீர்வழியக் கருது.
கண்ணிறை - 1. கள் நிறை; 2. கண் நிறை; 3. கண் இறை;
காய்தல் - எரித்தல்;
கானமர் - கான் அமர்;
கான் - 1. வாசனை; 2. காடு - இங்கே சுடுகாடு;
அமர்தல் - 1. இருத்தல்; 2. விரும்புதல்;
அம் - அழகிய;
கண்ணி - தலையில் அணியும் மாலை;
தினமும் காலையும் மாலையும் தேன் நிறைந்த பூக்களைத் தூவிக், கண்களில் நிறையும் நீர் வழிய, மன்மதனை எரித்த கண்ணுடைய இறைவனை, வாசனை பொருந்திய அழகிய கொன்றை மாலையை முடிமேல் அணிந்தவனை, ஆடுவதற்குச் சுடுகாட்டை விரும்பும் தலைவனை, மனமே நீ, தியானிப்பாயாக!
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment