Saturday, April 23, 2022

06.04.012 – திருஞான சம்பந்தர் துதி - தேனமர் கொன்றை

06.04.012 – திருஞான சம்பந்தர் துதி - தேனமர் கொன்றை


2010-05-29

6.4.12) திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2010-May-29/30

----------------------------------

('எழுசீர் விருத்தம் - "விளம் மா விளம் மா விளம் விளம் மா" என்ற வாய்பாடு)

1)

தேனமர் கொன்றை திகழ்முடி மீது

.. திங்களும் கங்கையும் சூடும்

மானமர் கரத்தன் மைந்நிறக் கண்டன்

.. மான்விழி மங்கையோர் பங்கன்

வானவன் கழலை வாழ்த்திய தமிழால்

.. மறைநெறி நிலைபெறச் செய்த

ஞானசம் பந்தர் நாண்மலர்த் தாளை

.. நான்பணிந் தேத்துகின் றேனே.


மான்விழி - மான் போன்ற பார்வையுடைய; (சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானினேர்விழி மாதராய் வழுதிக்கு மாபெருந்தேவி கேள்" - மானின் நேர்விழி - மருண்டு பார்க்குந்தன்மையால் மாதர்விழிக்கு மானின் விழி உவமை);

நாண்மலர் = நாள்+மலர் = புது மலர்;

2)

வந்திருள் தன்னை ஒளியெனச் சொன்ன

.. மதியிலார் வாதினை வென்று,

சந்திரன் தன்னைச் சடைமிசை அணியும்

.. சங்கரன், நான்மறை போற்றும்

செந்தழல் உருவன், சிவபெரு மான்சீர்

.. செப்பிய ஆளுடைப் பிள்ளை

பந்தனார் கமல பாதமி ரண்டைப்

.. பரவிடப் பரகதி திடமே.


வந்திருள் தன்னை ஒளியெனச் சொன்ன = இங்கே வந்து இருளை ஒளி என்று சொன்ன மதியற்றவர்களை வாதில் முறியடித்து;

ஆளுடைப் பிள்ளை - ஆளுடைய பிள்ளையார்;

பந்தனார் - ஞானசம்பந்தர் என்பதன் ஒருபுடைப் பெயர்;

கமலபாதம் - தாமரைத் திருவடி;

பரவுதல் - புகழ்தல்; துதித்தல்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment