Monday, April 18, 2022

6.3.50 - நம்மால் - அடைகண்டம் - மடக்கு

06.03 – மடக்கு


2010-02-10

6.3.50) நம்மால் - அடைகண்டம் - மடக்கு

--------------

நம்மால் அறிவை நனிமறைக்க ஆவதெலாம்

நம்மால் எனவெண்ணல் நன்காமோ - நம்மால்

அடைகண்டம் காட்டுகின்ற அண்ணல் அடியை

அடைகண்டம் கிட்டா அறி.


பதம் பிரித்து:

நம் மால் அறிவை நனி மறைக்க, "ஆவது எலாம்

நம்மால்" என எண்ணல் நன்கு ஆமோ? - நம், ஆல்

அடை கண்டம் காட்டுகின்ற அண்ணல் அடியை

அடை; கண்டம் கிட்டா அறி.


மால் - 1. அறியாமை; மயக்கம்;

ஆல் - 1. மூன்றாம் வேற்றுமை உருபு; 2. ஆலகால விஷம்;

அடை - 1. அடைத்தல்; (ஒளித்துவைத்தல்); 2. அடைதல் (சரண்புகுதல்);

கண்டம் - 1. கழுத்து; 2. ஆபத்து;

கிட்டுதல் - அணுகுதல்; சமீபமாதல்;


மதியை நம் அறியாமை மிகவும் மறைத்துவிட, "எல்லாம் நம்மால்தான் நடக்கின்றன" என்று எண்ணுவது நன்மை பயக்குமா? விஷத்தைக் கண்டத்தில் அடைத்துவைத்துள்ள நம் நீலகண்டன் திருவடியைச் சரண்புகுவாயாக. நாம் எவ்வித ஆபத்தும் இன்றி மகிழலாம்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment