06.01 – சிவன் சிலேடைகள்
2010-08-04
06.01.119 - சிவன் - அப்பளம் - சிலேடை - 2
-----------------------------------------------
தழற்கண்ணா கஞ்சேருந் சந்திரன் ஏயும்
கழறும் கணத்திற்கை சேரும் - பழையபொருள்
தேரிலடி வைக்க நொறுங்குமே அப்பளம்
ஆரிருளில் ஆடும் அரன்.
சொற்பொருள்:
தழற்கண்ணாகஞ்சேரும் - 1. தழற்கண் ஆகம் சேரும்; / 2. தழற்கண், நாகம் சேரும்;
தழல் - நெருப்பு;
கண் - 1. ஏழாம்வேற்றுமை உருபு; / 2. நேத்திரம்;
ஆகம் - உடல்;
ஏய்தல் - பொருந்துதல்; ஒத்தல் (To be similar to);
கழறுதல் - சொல்லுதல்;
கணம் - 1. க்ஷணம்; / 2. பூதகணம்;
ஐ - தலைவன்;
தேர்தல் - சிந்தித்தல்; ஆராய்தல்;
தேர் - இரதம்;
தேரில் - 1. ஆராய்ந்தால்; / 2. இரதத்தில்;
ஆரிருள் - செறிந்த இருள்; (சம்பந்தர் தேவாரம் - 1.77.3 - "ஆரிருள்மாலை ஆடும் எம் அடிகள்");
அப்பளம்:
தழற்கண் ஆகம் சேரும் - நெருப்பில் அதன் உடல் (அப்பளம்) சேரும்;
சந்திரன் ஏயும் - (வட்ட வடிவத்தாலும் வெண் நிறத்தாலும்) சந்திரனை ஒக்கும்;
கழறும் கணத்தில் கைசேரும் - (அப்பளம் என்று) சொன்னவுடன் கைக்கு வந்துசேரும்; (அப்பளத்தைச் சுடுவது சுலபத்தில் செய்யகூடியது);
பழைய பொருள் - நெடுங்காலமாக வழங்கும் பொருள்;
தேரில் அடி வைக்க நொறுங்குமே - ஆராய்ந்தால்/சிந்தித்தால், ஓர் அடி அடித்தவுடன் அப்பளம் நொறுங்கிவிடும்.
சிவன்:
தழற்கண் நாகம் சேரும் - தீ உமிழும் நெற்றிக்கண்ணும் பாம்பும் இருக்கும்;
சந்திரன் ஏயும் - (முடிமேல்) சந்திரன் பொருந்தும்;
கழறும் கணத்திற்கு ஐ - போற்றும் பூதகணங்களுக்குத் தலைவன்;
சேரும் பழைய பொருள் - எல்லாம் முடிவில் சென்று சேரும் பழம்பொருள்; ("எல்லாவற்றோடும் கலந்திருக்கும் பழம்பொருள்" என்றும் பொருள்கொள்ளலாம்);
தேரில் அடி வைக்க நொறுங்குமே - (முப்புரம் எரித்த நாளில், தேவர்கள் செய்த) தேரில் தன் திருவடியை வைத்தவுடன் அத்தேர் நொறுங்கிப்போயிற்று;
ஆரிருளில் ஆடும் அரன் - அடர்ந்த இருளில் கூத்தாடும் சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment