Saturday, April 23, 2022

06.04.014 – சுந்தரர் துதி - கொலையானையின்

 

06.04.014 – சுந்தரர் துதி கொலையானையின்

2010-08-14

6.4.14) சுந்தரர் துதி

-------------------------

1) --- (கலிவிருத்தம் - "மாங்கனி மாங்கனி மாங்கனி மா" என்ற வாய்பாடு) ----

கொலையானையின் உரிபோர்த்தொரு குளிர்திங்களை வைத்த

மலையான்மகள் மணவாளனைப் பித்தாவென வாழ்த்தித்

தலம்யாவையும் இசைகூடிய தமிழாற்பணி தொண்டர்

தொலையாப்புகழ் அடைசுந்தரர் துணைச்சேவடி போற்றி.


உரி - தோல்;

தொலையாப் புகழ் - அழிவற்ற புகழ்;

துணை - இரட்டை; காப்பு (Protection)

துணைச் சேவடி - இரு சிவந்த திருவடிகள்;


2) --- (கலிவிருத்தம் - "மா காய் மா காய்" என்ற வாய்பாடு) ---

மூவா முதல்வனுமோர் முதிய உருக்கொண்டு

வாவா அடிமையென்ன வாது புரிந்துபின்னர்த்

தேவா எனையாண்ட செல்வா எனப்போற்றும்

தூவாய் உடையார்வன் தொண்டர் பதம்போற்றி.


மூவா - மூப்பு இல்லாத;


3) --- (கலிவிருத்தம் - "மா மா மா மா" என்ற வாய்பாடு) ---

முன்னர்ச் சொன்ன வாக்கின் முறையால்

மின்னற் சடையன் வெண்ணெய் நல்லூர்

தன்னில் ஆட்கொள் தகைமை யாளர்

வன்னற் றொண்டர் மலர்த்தாள் போற்றி.


மின்னற் சடையன் - மின்னல் போல ஒளிரும் சடையை உடைய சிவபெருமான்;

ஆட்கொள்ளுதல் - அடிமைகொள்ளுதல்;

தகைமை - பெருமை; தகுதி;

வன்னற்றொண்டர் - வன் நல் தொண்டர் - வன் தொண்டர், நல் தொண்டர்;


4) --- (கலிவிருத்தம் - "மா மா மா மா" என்ற வாய்பாடு) --- (மடக்கு) ---

"படியோ லையதே பறித்தான்; மூலம்

படியீர்" என்று பரமன் காட்டும்

படியோர் வாது செய்தார் பாட்டால்

படியா மனமும் படியுந் தானே.


* படி - இச்சொல் அடிதோறும் வெவ்வேறு பொருளில் வந்தது;

படி ஓலை - பிரதி ஓலை (True copy, as of a manuscript);

பறித்தல் - வலிதிற் கவர்தல் (To take by force);

படியீர் - படிப்பீராக;

காட்டும்படி - காட்டுமாறு;

வாது செய்தார் பாட்டால் - வாதுபுரிந்த வன்தொண்டரான சுந்தரர் பாடியருளிய திருப்பாட்டால் (தேவாரத்தால்);

படிதல் - கீழ்ப்படிதல்; வசமாதல் (To be subjugated; to be trained, disciplined or tamed);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment