06.01 – சிவன் சிலேடைகள்
2010-04-10
06.01.116 - சிவன் - ஒலிபெருக்கி (loudspeaker) - சிலேடை
-----------------------------------------------
ஒலியுரு வாகுமுயர் கம்பத் துறையும்
வலிமலியு மாறு மலைக்கும் - கலிமிகக்
கண்டவர் கைகுவிப்பர் உய்ய ஒலிபெருக்கி
அண்டர்கள் ஏத்தும் அரன்.
சொற்பொருள்:
கம்பம் - 1. தூண்; / 2. கச்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில்;
வலி - 1. நோவு; / 2. வலிமை;
மலைத்தல் - வருத்துதல்;
அலைத்தல் - அலைமோதுதல்;
கலி - 1. ஆரவாரம்; பேரொலி; / 2. துன்பம்;
மலிதல் - மிகுதல்;
ஒலிபெருக்கி (loudspeaker):
ஒலி உருவாகும் - அதனில் ஒலி தோன்றும்;
உயர் கம்பத்து உறையும் - உயரமான கம்பத்தில் இருக்கும்;
வலி மலியுமாறு மலைக்கும் - (அதிக ஓசையால் காது) வலி மிகுமாறு வருத்தும்;
கலி மிகக் கண்டவர் கைகுவிப்பர் உய்ய - ஓசை அதிகமாக இருக்கக் கண்டவர், அவ்வோசை எப்போது தீருமோ என்று பிரார்த்தித்திருப்பர்;
ஒலிபெருக்கி - ஒலிபெருக்கி என்ற கருவி.
சிவன்:
ஒலி உரு ஆகும் - நாத ரூபி;
உயர் கம்பத்து உறையும் - மேன்மையான திருவேகம்பத்தில் உறைபவன்;
வலி மலியும் ஆறும் அலைக்கும் - வலிமை மிகுந்தவன்; வலிமை மிக்க (வலிய அலைகள் மிக்க) கங்கையும் (சடையில்) அலைமோதும்;
கலி மிகக் கண்டவர் கைகுவிப்பர் உய்ய ஒலிபெருக்கி - மிகு துன்பத்தில் உள்ளோர் தம் துயர் தீரவேண்டி உரக்க முறையிட்டுக் கைதொழுவர்;
(ஒலிபெருக்கி) அண்டர்கள் ஏத்தும் அரன் - (பெருங்குரலில்) தேவரெல்லாம் துதிக்கும் ஹரன்; (குறிப்பு: "ஒலிபெருக்கி" என்பதை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment