Friday, April 22, 2022

06.02.124 – ஆலவாய் (மதுரை) - தேவைக்குக் காசு - (வண்ணம்)

06.02.124 – ஆலவாய் (மதுரை) - தேவைக்குக் காசு - (வண்ணம்)


2010-05-23

6.2.124) தேவைக்குக் காசு - ஆலவாய் (மதுரை)

-------------------------

தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன .. தந்த தான

(வாசித்துக் காணொ ணாதது - திருப்புகழ் - திருச்சிராப்பள்ளி)


தேவைக்குக் காசு சேயிழை .. சேவைக்குப் போது போய்மிகு

.. .. சீலர்க்குத் தூர னாயிழி .. சிந்தையாலே

.. தீதிற்புக் காயுள் ஓடிடும் .. ஈனத்தைத் தீர நீடிய

.. .. சேமத்தைச் சேர நாடொறும் .. அன்பினாலே

நாவிற்குப் பூண தாமுன .. நாமத்தைக் கூறி வாழுயர்

.. .. ஞானத்தைத் தாநி லாமதி .. இண்டைசூடீ

.. நால்வர்க்குக் கேடி லாமறை .. போதித்துத் தார தாவிள

.. .. நாகத்தைப் பூணு மார்பின .. இந்திராதி

தேவர்க்குத் தேவ னேதொழு .. சேடர்க்குத் தாய னாய்வினை

.. .. தேய்வித்துப் பேறு மீபவ .. ஒன்றிலாத

.. தீனர்க்குத் தானம் ஈபவர் .. வாழ்தற்குப் பார லாதொரு

.. .. சேணிற்புத் தேளின் வானைவ .. ழங்குமீசா

பாவைக்குக் கூற தீபவ .. பாணர்க்குப் பாடல் ஈபவ

.. .. பாதத்தைக் காலன் மார்பினில் .. அன்றுவீசிப்

.. பாலற்குக் காவல் ஈபவ .. பாடிப்பொற் பாதம் ஓதினர்

.. .. பாலித்தற் கால வாயமர் .. எம்பிரானே.


பதம் பிரித்து:

தேவைக்குக் காசு சேயிழை .. சேவைக்குப் போது போய், மிகு

.. .. சீலர்க்குத் தூரனாய், இழி சிந்தையாலே

.. தீதிற்புக்கு ஆயுள் ஓடிடும் .. ஈனத்தைத் தீர, நீடிய

.. .. சேமத்தைச் சேர, நாள்தொறும் அன்பினாலே

நாவிற்குப் பூணதாம் உன .. நாமத்தைக் கூறி வாழ் உயர்

.. .. ஞானத்தைத் தா, நிலாமதி இண்டைசூடீ;

.. நால்வர்க்குக் கேடிலா மறை .. போதித்துத், தாரதா இள

.. .. நாகத்தைப் பூணும் மார்பின; .. இந்திராதி

தேவர்க்குத் தேவனே; தொழு .. சேடர்க்குத் தாய் அனாய்; வினை

.. .. தேய்வித்துப் பேறும் ஈபவ; ஒன்றிலாத

.. தீனர்க்குத் தானம் ஈபவர் .. வாழ்தற்குப் பார் அலாது ஒரு,

.. .. சேணிற் புத்தேளின் வானை வழங்கும் ஈசா;

பாவைக்குக் கூறது ஈபவ; .. பாணர்க்குப் பாடல் ஈபவ;

.. .. பாதத்தைக் காலன் மார்பினில் அன்று வீசிப்,

.. பாலற்குக் காவல் ஈபவ; .. பாடிப் பொற்பாதம் ஓதினர்

.. .. பாலித்தற்கு ஆலவாய் அமர் எம்பிரானே.


தேவைக்குக் காசு, சேயிழை சேவைக்குப் போது போய் - சம்பாதித்த பொருளையெல்லாம் உடலை ஓம்புவதற்கும், நேரத்தையெல்லாம் பெண்கள் சேவைக்கும் செலவழித்து; (சேயிழை - அழகிய ஆபரணங்கள் அணிந்தவள் - பெண்);

மிகு சீலர்க்குத் தூரனாய் - சீலம் மிக்கவர்களோடு நட்பின்றி விலகியிருந்து;

ழி சிந்தையாலே தீதில் புக்கு ஆயுள் ஓடிடும் ஈனத்தைத் தீர - இழிந்த மனத்தால் தீயவற்றையே நாடி, வாழ்நாள் கழிகின்ற இந்த இழிவு தீருமாறு;

நீடிய சேமத்தைச் சேர - நிலைத்த க்ஷேமத்தைப் பெற;

நாள்தொறும் அன்பினாலே நாவிற்குப் பூணதாம் உ நாமத்தைக் கூறி வாழ் உயர் ஞானத்தைத் தா, நிலாமதி இண்டைசூடீ - தினமும் அன்போடு நாவிற்கு அணிகலன் ஆகும் உனது திருநாமத்தைச் சொல்லி வாழ்கின்ற உயர்ந்த ஞானத்தை அருள்க, நிலா வீசுகின்ற சந்திரனை இண்டைபோலச் சடையில் அணிந்தவனே; (பூண் - அணி; ஆபரணம்); (உன - உன்+- உன்னுடைய); (நிலா - சந்திரிகை; சந்திரனின் கிரணம்); (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (அப்பர் தேவாரம் - 4.11.2 - "நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே" - நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும்);


நால்வர்க்குக் கேடிலா மறை போதித்துத் - சனகாதியர் நால்வருக்கு அழியாத வேதங்களை உபதேசித்து;

தாரதா நாகத்தைப் பூணும் மார்பின - மாலையாக இளம்பாம்பை மார்பில் அணிந்தவனே; (தாரதா - தார்அது ஆக);

இந்திராதி தேவர்க்குத் தேவனே - இந்திரன் முதலாய தேவர்களுக்கெல்லாம் தேவனே;

தொழு சேடர்க்குத் தாய் அனாய்; வினை தேய்வித்துப் பேறும் ஈபவ - தொழும் சேடர்களுக்கு (பெரியோர்களுக்கு) தாய் ஒத்தவனே; அவர்களது வினையை அழித்துப் பேறு அளிப்பவனே; (சேடன் - ); (அனாய் - அன்னாய் - அன்னவனே); (தேய்வித்தல் - தேயச் செய்தல்; தேய்தல் - அழிதல்); (அப்பர் தேவாரம் - 6.52.7 - "விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித்தான் காண்");

ஒன்றிலாத தீனர்க்குத் தானம் ஈபவர் வாழ்தற்குப் பார் அலாது ஒரு, சேணில் புத்தேளின் வானை வழங்கும் ஈசா - ஒன்றும் இல்லாத வறியோர்க்குத் தானம் செய்பவர்கள் வாழ இம்மண்ணுலகம் அல்லாமல் ஒப்பற்ற, தேவர்களுக்கும் மேலான, சிவலோகத்தை அருளும் ஈசனே; (ஒன்று இலாத - ஒன்றும் இலாத; உம்மைத்தொகை); (தீனன் - வறியவன்); (ஒரு - ஒப்பற்ற); (சேண் - ஆகாயம்); (புத்தேள் - தேவர்); (அப்பர் தேவாரம் - 4.38.10 - "இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்"); (புத்தேளின் வான் = தேவர்களுக்கும் மேலான இடம்; தேவலோகத்தினும் உயர்ந்த இடமான சிவலோகம்); (சம்பந்தர் தேவாரம் - 2.60.11 - "ஊனம் இலராய் உம்பர் வானத்துறைவாரே" - உம்பர் வானத்து - வானோர்க்குயர்ந்த உலகத்தில்); (அப்பர் தேவாரம் - 5.88.10 - "பெருமான்திறம் ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே"); (திருக்குறள் - 346 - "யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்" - வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்துவான்);


பாவைக்குக் கூது ஈபவ - உமைக்குத் திருமேனியில் பாகம் அளித்தவனே;

பாணர்க்குப் பாடல் ஈபவ - பாணபத்திரருக்குப் பாடலை அளித்தவனே; (பாணபத்திரருக்குத் திருமுகப் பாசுர ஓலை கொடுத்தருளிய வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க; திருவிளையாடற் புராணத்திலும் காணலாம்); (பெரியபுராணம் - கழறிற்றறிவார் நாயனார் புராணம் - 12.37.28 - "மதிமலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மைக் கதிரொளி விரிந்த தோட்டுத் திருமுகங் கொடுத்தார் காண");

பாதத்தைக் காலன் மார்பினில் அன்று வீசிப், பாலற்குக் காவல் ஈபவ - திருவடியால் காலனை மார்பில் உதைத்து, மார்க்கண்டேயருக்குக் காவல் அருளியவனே; (பாலற்கு - பாலன்+கு - பாலனுக்கு);

பாடிப் பொற்பாதம் ஓதினர் பாலித்தற்கு ஆலவாய் அமர் எம்பிரானே - பாடிப் பொன்னடியைத் துதித்தவர்களைக் காக்கத் திரு-ஆலவாயில் எழுந்தருளிய எம்பெருமானே; (பாடிப் பொற்பாதம் ஓதினர் - "பொற்பாதம் பாடி ஓதினர்" - பாடுதல் & ஓதுதல் - ஒருபொருட்பன்மொழி - பன்முறை தொடர்ந்து செய்தல் கருதி வந்தது); (பாலித்தல் - காத்தல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment