06.04.013 – மாணிக்க வாசகர் துதி - அம்மானை
2010-07-14
6.4.13) மாணிக்க வாசகர் துதி
----------------------------------------
1) ---- (வெண்டளையால் வந்த ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா) ----
அம்மானை சிந்தைய ராய்வணங்கத் தீயாய்நீள்
அம்மானை, ஆலமுண்ட அண்ணலை, ஓர்கையில்
அம்மானை ஏந்தும் அழகனை, வாயார
அம்மானை பாடி அடிபணிந்த வாதவூர்
எம்மானை எம்மொழியால் எப்படி ஏத்துவேன்
அம்மாநை கின்றேன் அவர்பொற்றாள் சிந்தித்தே.
பதம் பிரித்து:
அம் மால் நை சிந்தையராய் வணங்கத் தீயாய் நீள்
அம்மானை, ஆலம் உண்ட அண்ணலை, ஓர் கையில்
அம் மானை ஏந்தும் அழகனை, வாயார
அம்மானை பாடி அடிபணிந்த வாதவூர்
எம்மானை எம்மொழியால் எப்படி ஏத்துவேன்;
அம்மா; நைகின்றேன் அவர் பொற்றாள் சிந்தித்தே.
சொற்பொருள்:
மால் - திருமால்;
நைதல் - வாடுதல்; மனம் கசிதல்; (திருவாசகம் - திருச்சதகம் - 8.5.100 - "நின்னையே பாடி நைந்துநைந்து உருகி நெக்குநெக்கு ஆடவேண்டும் நான்");
அம்மான் - கடவுள்;
அம் - அழகு; அந்த;
அம்மானை - ஒரு பாடல்வகை;
எம்மான் - எம் சுவாமி;
அம்மா - அதிசயவிரக்கக் குறிப்பு (An exclamation of pity or surprise);
திருமாலும் அடி தேடி வாடிய மனத்தோடு வணங்கும்படி சோதியாக உயர்ந்த கடவுளை, நஞ்சை உண்ட பெருமானை, ஒரு கையில் அழகிய மானை ஏந்தும் அழகனை, 'திரு-அம்மானை' பாடிப் போற்றிய மாணிக்கவாசகராகிய எம் தலைவனை எப்படிப் போற்றுவேன் என்று எண்ணி, அவர் பொன்னடிகளைச் சிந்தித்து நான் மனம் உருகின்றேன்.
2) ---- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ----
வெம்பாவம் சேராவே வெற்புவில்லில் திருமாலை
அம்பாவைத் தன்றுபுரம் அட்டானே வந்தெழுதத்
தம்பாவைச் சொல்மணிவா சகனாரின் விழிப்பூட்டும்
எம்பாவை இருபதையும் இசைபாடும் அடியார்க்கே.
சொற்பொருள்:
வெம் - கொடிய;
வெற்பு - மலை;
அம்பா - அம்பாக;
அடுதல் - அழித்தல்;
மேருமலையே வில்லாக அந்த வில்லில் திருமாலைக் கணையாகச் சேர்த்து, முப்புரங்களையும் எரித்த சிவபெருமானே வந்து எழுதிக்கொள்ள அப்பெருமானுக்குத் தாம் பாடிய திருவாசகத்தைச் சொன்ன மாணிக்கவாசகரின், விழிப்பைத் தரும் திருவெம்பாவைப் பாடல்கள் இருபதையும் இசையோடு பாடும் அடியவர்களைக் கொடிய பாவங்கள் நெருங்கமாட்டா.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment