06.01 – சிவன் சிலேடைகள்
2010-08-04
06.01.118 - சிவன் - அப்பளம் - சிலேடை - 1
-----------------------------------------------
தீக்கண் சுடுவதால் செந்நிறம் சேர்வதால்
பார்க்கிலங் குக்கார்ப் பகுதியும் - ஏற்பதால்
நெய்யினில் ஆடுவதால் தட்டில் நிறைவுறும்
பையரவார் கோனப் பளம்.
பதம் பிரித்து:
தீக்கண் சுடுவதால், செந்நிறம் சேர்வதால்,
பார்க்கில் அங்குக் கார்ப் பகுதியும் ஏற்பதால்,
நெய்யினில் ஆடுவதால், தட்டில் நிறைவு உறும்,
பை-அரவு-ஆர் கோன், அப்பளம்.
சொற்பொருள்:
கண் - 1. ஏழாம் வேற்றுமை உருபு; / 2. நேத்திரம்;
கார் - கருமை;
நெய் - 1. எண்ணெய் (oil); / 2. பசுவெண்ணெயை உருக்கிப் பெறும் நெய் (ghee); தேன்; அன்பு;
ஆடுதல் - 1. குளித்தல்; / 2. அபிஷேகம் செய்யப்பெறுதல்;
தட்டில் நிறைவுறும் - 1. தட்டினில் நிறைவு உறும்; / 2. தட்டு இல் நிறைவு உறும்;
தட்டு - 1. தட்டம் (eating plate) - உண்கலம்; / 2. முட்டுப்பாடு (Scarcity, straits, lack); குற்றம் (Defect, blemish, fault);
உறுதல் - 1. அடைதல்; 2. இருத்தல்;
பை - பாம்பின் படம்;
அரவு - பாம்பு;
ஆர்த்தல் - கட்டுதல்;
அப்பளம்:
தீக்கண் சுடுவதால் - தீயில் சுடப்பெறும்;
செந்நிறம் சேர்வதால் - அதனால் சிவக்கும்;
பார்க்கில் அங்குக் கார்ப் பகுதியும் ஏற்பதால் - ஆங்காங்கே (தீப்பட்டுக்) கருகியும் இருக்கக் காணும்;
நெய்யினில் ஆடுவதால் - (பொரிக்கும்போது) எண்ணெயில் முழுகிக் குளிக்கும்;
தட்டில் நிறைவுறும் - சாப்பாட்டு இலையில் வந்து நிறைவு பெறும்.
சிவன்:
தீக்கண் சுடுவதால் - தீ இருக்கும் நெற்றிக்கண் எரிக்கும்;
செந்நிறம் சேர்வதால் - செம்மேனியன்;
பார்க்கில் அங்குக் கார்ப் பகுதியும் ஏற்பதால் - அர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் உமையாள் இருக்கும் பகுதியில் கருமை திகழும். (கண்டத்தில் கருமை திகழ்வதைச் சுட்டுவதாகவும் கொள்ளலாம்);
நெய்யினில் ஆடுவதால் - நெய்யால் / தேனால் அபிஷேகம் உண்டு;
தட்டு இல் நிறைவு உறும் - குறைவில்லாத பூரணனாக இருப்பவன்; (திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - 8.22.5 - "குறைவிலா நிறைவே");
பை-அரவு-ஆர் கோன் - படம் உடைய பாம்பை அரையில் கட்டிய தலைவனாகிய சிவபெருமான்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment