06.03 – மடக்கு
2010-04-17
6.3.53) சிலையுடை - பேரானை - மடக்கு
-------------------------
சிலையுடை என்பவர் தேறார் கயிலைச்
சிலையுடை ஈசனுக்கு வெற்பே - சிலையுடை
பேரானை ஈருரியே உய்திபெற ஆயிரத்தெண்
பேரானை நாவேநீ பேசு.
பதம் பிரித்து:
"சிலை உடை" என்பவர் தேறார்; கயிலைச்
சிலையுடை ஈசனுக்கு வெற்பே - சிலை; உடை
பேர் ஆனை ஈருரியே; உய்தி பெற, ஆயிரத்து எண்
பேரானை நாவே நீ பேசு.
சிலை - 1. விக்கிரகம்; 2. மலை; 3. வில்;
உடை - 1. உடைத்தல்; தகர்த்தல்; 2. உடைமை (The state of possessing, having, owning); 3. ஆடை;
தேறார் - அறியாதார் (Ignorant persons);
பேரானை - 1. பேர் ஆனை - பெரிய யானை; 2. பெயர்கள் உள்ளவனை;
ஈருரி - ஈர் உரி - உரித்த தோல்; (ஈர்த்தல் - உரித்தல்); (உரி - தோல்);
பேசு - துதித்தல்;
"விக்கிரகங்களை உடை" என்பவர்கள் அறிவிலார்; கயிலாய மலையில் இருக்கும் சிவபெருமானுக்கு (முப்புரம் எரித்தபொழுது) மேருமலையே வில்; பெரிய யானையின் உரித்த தோலே போர்த்தும் ஆடை; என் நாவே, நீ உய்வு பெறுவதற்கு, 1008 திருநாமங்கள் உடைய ஈசனைத் துதி.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment