06.03 – மடக்கு
2010-05-08
6.3.54) வானிறந்தான் - கண்ணிலவு - மடக்கு
-------------------------
வானிறந்தான் ஏறு மணிமிடற்றன் ஊரேறும்
வானிறந்தான் அன்றயன் மால்தேட - வானிறந்தான்
கண்ணிலவு பூமாலை கட்டியன்பாய்க் கைதொழுவோம்
கண்ணிலவு நெற்றியனம் காப்பு.
பதம் பிரித்து:
வான் நிறந்தான் ஏறு மணிமிடற்றன் ஊர் ஏறும்
வால் நிறம்; தான் அன்று அயன் மால் தேட - வான் இறந்தான்;
கள் நிலவு பூமாலை கட்டி அன்பாய்க் கைதொழுவோம்;
கண் நிலவு நெற்றியன் நம் காப்பு.
வானிறந்தான் - 1. வான் நிறம் தான்; 2. வால் நிறம் தான்; 3. வான் இறந்தான்;
வான் - 1. மேகம்; 2. விண்;
ஊர்தல் - ஏறுதல் (To mount); ஏறி நடத்துதல் (To ride, as a horse);
வால் - வெண்மை;
தான் - 1. தேற்றச்சொல் / அசைச்சொல்; 2. படர்க்கை ஒருமைப்பெயர் (He, she or it) - அவன்;
இறத்தல் - கடத்தல் (To go beyond, transcend, pass over);
கண்ணிலவு - 1. கள் நிலவு; 2. கண் நிலவு;
கள் - தேன்;
காப்பு - காவல்;
மேகத்தின் நிறம் உடைய மணி திகழும் கண்டத்தை உடையவன் (நீலகண்டன்) வாகனமான எருதும் வெண்ணிறமே. அவன் முன்னொரு சமயத்தில் பிரமனும் திருமாலும் தேடுமாறு விண்ணையும் கடந்தான். அவனைத் தேன் இருக்கும் மலர்களால் மாலை கட்டி அன்போடு வணங்குவோம். நெற்றிக்கண்ணனே நம் காவல்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment