06.01 – சிவன் சிலேடைகள்
2010-08-01
06.01.117 - சிவன் - சோப்பு (soap) - சிலேடை
-----------------------------------------------
மெய்யுற வாகிநம் மேலுளம லம்போகச்
செய்யுந் தினமலம்பு வார்கழல் - கைசேர்த்து
நானிலத்தோர் போற்றுவார் நல்ல சவுக்காரம்
கூனிலவைச் சூடிய கோன்.
சொற்பொருள்:
மெய் - 1. உடல்; / 2. உண்மை;
உறுதல் - படுதல் (To touch, come in contact with); பொருந்துதல் (To join, associate with);
உறவு - சுற்றம்; நட்பு;
மலம் - 1. அழுக்கு; / 2. ஆணவம் முதலான மும்மலங்கள்;
அலம்புதல் - 1. கழுவுதல்; 2. ஒலித்தல்;
வார்தல் - நீளுதல்; (வார்கழல் - நீள்கழல்);
கழல் - பாதம் (ஆகுபெயர்);
கழல் கைசேர்த்து - 1. உம்மைத்தொகை - கழலும் கையும் சேர்த்து; / 2. இரண்டாம் வேற்றுமைத் தொகை - கழலைக் கைசேர்த்து;
கூன் - வளைவு;
சோப்பு (soap):
மெய் உற ஆகி நம்மேல் உள மலம் போகச் செய்யும் - உடலில் பட அமைந்து, நம்மேல் இருக்கும் அழுக்குகளைப் போக்கும்;
தினம் அலம்புவார் கழல் கை சேர்த்து நானிலத்தோர் - (அதனைக்கொண்டு) உலகோர் தினமும் கைகால் கழுவுவார்கள்;
போற்றுவார் - (அதன் அவசியத்தை உணர்ந்து) அதனைப் பாராட்டுவர்;
நல்ல சவுக்காரம் - நலம் அளிக்கும் சோப்பு.
சிவன்:
மெய் உறவு ஆகி நம்மேல் உள மலம் போகச் செய்யும் - உண்மையான சுற்றம் ஆகி, நம் உயிரைப் பிணித்துள்ள மும்மலங்களைப் போக்குவார்;
தினம் அலம்பு வார்கழல் கைசேர்த்து நானிலத்தோர் போற்றுவார் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை உலகோர் நாள்தோறும் கைகுவித்து வணங்குவார்கள்;
கூன்-நிலவைச் சூடிய கோன் - வளைந்த பிறைச்சந்திரனை அணிந்த தலைவன்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment