Tuesday, April 26, 2022

06.02.125 – பொது - சொந்தங்களுண்டு - (வண்ணம்)

06.02.125 – பொது - சொந்தங்களுண்டு - (வண்ணம்)


2010-09-13

6.2.125) சொந்தங்களுண்டு - பொது

-------------------------

தந்தந் தனந்த தந்தந் தனந்த

தந்தந் தனந்த .. தனதான

(தந்தந்த தந்த தந்தந்த தந்த

தந்தந்த தந்த .. தனதான -- என்றும் கருதலாமோ?)

(சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த - திருப்புகழ் - பொது)


சொந்தங் களுண்டு பந்தங் களுண்டு

.. .. துன்பந் தொடர்ந்து .. தருமாறே

.. துன்றும் புரிந்த தென்றுங் கனன்று

.. .. தொந்தங் கழன்று .. மகிழ்வேனோ

வந்தண் டுமும்பர் நெஞ்சங் கலங்கு

.. .. வஞ்சஞ் செறிந்த .. விடமேவி

.. மஞ்சென் றிலங்கும் ஒண்கண் டமைந்த

.. .. மண்தின் றுமிழ்ந்த .. அரிகாணா

அந்தங் கடந்த உன்றன் பதங்கள்

.. .. அஞ்சும் புகன்று .. தெளிவேனோ

.. அண்டம் பயந்து நின்றுந் தொழும்பர்

.. .. அங்கங் கிறைஞ்ச .. உறைவோனே

சந்தம் பிறங்கு செஞ்சொல் மிடைந்து

.. .. தங்குங் கவின்கொள் .. இசைபாடு

.. சம்பந் தர்நெஞ்சில் என்றுந் திகழ்ந்த

.. .. சங்கம் புனைந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

சொந்தங்கள் உண்டு, பந்தங்கள் உண்டு,

துன்பம் தொடர்ந்து தருமாறே,

துன்றும் புரிந்தது என்றும் கனன்று;

தொந்தம் கழன்று மகிழ்வேனோ?


வந்து அண்டும் உம்பர் நெஞ்சம் கலங்கு

வஞ்சம் செறிந்த விடம் மேவி,

மஞ்சு என்று இலங்கும் ஒண் கண்ட; மைந்த;

மண் தின்று உமிழ்ந்த அரி காணா,


அந்தம் கடந்த உன்றன் பதங்கள்

அஞ்சும் புகன்று தெளிவேனோ?

அண்டம் பயந்து நின்றும், தொழும்பர்

அங்கு அங்கு இறைஞ்ச உறைவோனே;


சந்தம் பிறங்கு செஞ்சொல் மிடைந்து

தங்கும் கவின்கொள் இசை பாடு

சம்பந்தர் நெஞ்சில் என்றும் திகழ்ந்த,

சங்கம் புனைந்த பெருமானே.


சொந்தங்கள் உண்டு, பந்தங்கள் உண்டு, துன்பம் தொடர்ந்து தருமாறே - ஓயாமல் துன்பம் தருமாறு குடும்ப வாழ்க்கையும் (உறவினரும்) பற்றுகளும் உண்டு; (பந்தம் - பற்று; கட்டு);

(துன்பம் தொடர்ந்து தருமாறே) துன்றும் புரிந்தது என்றும் கனன்று - (துன்பம் தொடர்ந்து தருமாறே) புரிந்தது என்றும் கனன்று துன்றும் - ஓயாமல் துன்பம் தருமாறு முன் புரிந்த பழவினை நெருங்கி எப்பொழுதும் சுட்டெரிக்கும்; (துன்றுதல் - நெருங்குதல்; பொருந்துதல்); (கனல்தல் - எரிதல்; சுடுதல்); ("துன்பம் தொடர்ந்து தருமாறே" என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

தொந்தம் கழன்று மகிழ்வேனோ - (இத்துன்பம் எல்லம் தீருமாறு) நல்வினை தீவினை என்ற இரண்டும் நீங்கி இன்புறுவேனோ? (தொந்தம் - இரட்டை - நல்வினை தீவினை, விருப்பு வெறுப்பு, இத்யாதி); (அப்பர் தேவாரம் - 5.1.4 - "தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்"); (திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - அடி-52 - "அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்");


வந்து அண்டும் உம்பர் நெஞ்சம் கலங்கு வஞ்சம் செறிந்த விடம் மேவி - வந்து சரண்புகுந்த தேவர்கள் மனம் கலங்கும்படி அவர்களை வருத்திய கொடிய ஆலகால விடத்தை விரும்பி உண்டு; (மேவுதல் - விரும்புதல்; உண்ணுதல்);

மஞ்சு என்று இலங்கும் ஒண் கண்ட - மேகம் போல் விளங்கும் ஒளியுடைய கண்டனே; (மஞ்சு - மேகம்); (ஒண்மை - ஒளி);

மைந்த - வீரனே; (மைந்தன் - வீரன்);

மண் தின்றுமிழ்ந்த அரி காணா, அந்தம் கடந்த உன்றன் பதங்கள் அஞ்சும் புகன்று தெளிவேனோ - மண்ணை உண்டு உமிழ்ந்த திருமால் காணாத, முடிவு இல்லாத உன்னுடைய திருவைந்தெழுத்தை ஓதித் தெளிய அருள்வாயாக; (பதம் - சொல்; அஃது ஆகுபெயராய், எழுத்தினை உணர்த்திற்று); (சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி");

அண்டம் பயந்து நின்றும், தொழும்பர் அங்கு அங்கு இறைஞ்ச உறைவோனே - அண்டங்களெல்லாம் படைத்தும், தொண்டர்கள் வணங்குமாறு பல தலங்களில் உறைபவனே; (பயத்தல் - படைத்தல்); (தொழும்பர் - தொண்டர்);


சந்தம் பிறங்கு செஞ்சொல் மிடைந்து தங்கும் கவின்கொள் இசை பாடு - சந்தநயம் (ஒலிநயம்) விளங்கும் சிறந்த தமிழ்ச்சொற்கள் நிறைந்த அழகிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடிய; (சந்தம் - அழகு; செய்யுளின் வண்ணம்); (பிறங்குதல் - விளங்குதல்; சிறத்தல்); (மிடைதல் - செறிதல்; நிறைதல்); (கவின் - அழகு);

சம்பந்தர் நெஞ்சில் என்றும் திகழ்ந்த, சங்கம் புனைந்த பெருமானே - திருஞான சம்பந்தர் மனத்தில் என்றும் நீங்காமல் திகழ்ந்த, வளையலை அணிந்த பெருமானே (அர்தநாரீஸ்வரனே); (சங்கம் - கைவளை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment