2010-07-04
V.014 - மாலை - மடக்கு
----------------
(இன்னிசை வெண்பா)
மாலை அழித்து மதிதனைத் தந்தருளாய்
மாலை ஒளியாய் மணிகண்டா மார்பிலரா
மாலை அணிவாய் வணங்கித் தமிழ்மணி
மாலை புனையெனக்கு வந்து.
சொற்பொருள்:
மாலை - 1. அறியாமையை; 2. சாயங்காலம்; 3. பூமாலை; வடம்; 4. பாமாலை;
* முதலடியை ஈற்றில் கொண்டு பொருள்கொள்க;
மாலை அழித்து, மதிதனைத் தந்தருளாய் - என் அறியாமையைப் போக்கி அறிவைக் கொடுத்தருள்வாயாக;
மாலை ஒளியாய் - அந்திவண்ணனே; (சாயங்காலத்து வானம் போல ஒளியுடைய செம்மேனியனே);
மணிகண்டா - நீலகண்டனே!
மார்பில் அரா-மாலை அணிவாய் - திருமார்பில் பாம்பை மாலையாக (/பாம்பையும் கொன்றைமாலையையும்) அணிந்தவனே;
வணங்கித் தமிழ்-மணி-மாலை புனை எனக்கு உவந்து - உன்னைப் பணிந்து, தமிழ்ச்சொற்கள் என்ற மணிகளால் ஆன பாமாலை தொடுத்துச் சூட்டும் எனக்கு மகிழ்ந்து; (புனைதல் - 1. தொடுத்தல்; 2. அணிவித்தல்); (எனக்குவந்து - 1. எனக்கு உவந்து; 2. எனக்கு வந்து); (உவத்தல் - மகிழ்தல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment