Monday, April 18, 2022

6.3.51 - நம்பிவந்து - பாடில் - மடக்கு

06.03 – மடக்கு


2010-02-26

6.3.51) நம்பிவந்து - பாடில் - மடக்கு

--------------

நம்பிவந்து சேர்வார் நடுங்காமே காத்தருள்வார்

நம்பிவந்து தாள்தொழக்கண் நல்குவார் - நம்பிவந்து

பாடில் வரும்நெஞ்சே பார்வதிகோன் அருளாலே

பாடில் வளவாழ்வே பார்.


நம்பி - 1. நம்பிக்கையோடு; 2. நம்பி ஆரூரர்; 3. விரும்பி;

பாடில் - 1. பாடினால்; 2. துன்பம் இல்லாத (பாடு இல்);

நம்பி - ஆணில் சிறந்தவன்; கடவுள்;

நம்புதல் - 1. விரும்புதல்; 2. நம்பிக்கை வைத்தல் (To believe, have faith in);

பாடு - 1. பாடுதல்; 2. வருத்தம்;

பார்த்தல் - அறிதல்;


நம்பி வந்துசேர்வார் நடுங்காமே காத்தருள்வார் - நம்பிக்கைவைத்து வந்தடைவாரின் பயத்தைப் போக்கிக் காத்து அருள்வார்;

நம்பி வந்து தாள் தொழக் கண் நல்குவார் - சுந்தரர் வந்து திருவடியைப் போற்றவும் அவருக்குக் கண்பார்வையை அளிப்பார்; (சுந்தரர் கண்பார்வையை இழந்து, பின்னர் மீண்டும் பெற்றதைப் பெரியபுராணத்தில் காண்க);

நம்பி வந்து பாடில் வரும், நெஞ்சே, பார்வதிகோன் அருளாலே பாடு இல் வள வாழ்வே பார் - மனமே! நீ விரும்பிவந்து அவன் புகழ் பாடினால், சிவபெருமான் அருளால் துன்பம் இல்லாத சிறந்த வாழ்வே வரும். அறிவாயாக!


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment