Thursday, April 21, 2022

06.02.123 – பொது - தேகத்தைப் பேண - (வண்ணம்)

06.02.123 – பொது - தேகத்தைப் பேண - (வண்ணம்)

2010-05-17

6.2.123) தேகத்தைப் பேண - பொது

-------------------------

தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன .. தந்ததான

(வாசித்துக் காணொ ணாதது - திருப்புகழ் - திருச்சிராப்பள்ளி)


தேகத்தைப் பேண மாநிதி

.. .. தேடற்குப் பாவை மாரொடு

.. .. சேரற்குப் பேர வாவெழு .. நெஞ்சினாலே

.. சீர்கெட்டுப் பூமி மேல்மிகு

.. .. தீதுற்றுக் கால னார்தமர்

.. .. சேர்வுற்றுச் சூழ ஆவியும் .. மங்கிடாமுன்

சோகத்துக் கேது வாம்வினை

.. .. தூரத்துப் போக மாமலர்

.. .. தூவிப்பொற் பாத மேதொழும் .. அன்புதாராய்

.. சூரர்க்குக் கால னாகிய

.. .. பாலற்குத் தாதை யேபொடி

.. .. தோளெட்டிற் பூசி னாயனல் .. அங்கையானே

வேகத்திற் கீடி லாவிடை

.. .. மேலுற்றுப் பாரெ லாமுழல்

.. .. மேகத்தைப் போல வேயொளிர் .. கண்டதேவா

.. வேதத்தைப் பாடு நாவின

.. .. வாதிட்டுத் தேடு மாலொடு

.. .. வேதற்குக் காணொ ணாவணம் .. நின்றநாதா

ஆகத்திற் கூறு மாதுமை

.. .. ஆடைக்குத் தோலு மாநடம்

.. .. ஆடற்குக் காடு நாடிய .. பண்பினானே

.. ஆலித்துப் பாயும் ஓர்புனல்

.. .. வேணிப்புக் கார மாசுண

.. .. ஆரத்தைப் பூணும் மார்புடை .. எம்பிரானே.


பதம் பிரித்து:

தேகத்தைப் பேண, மா-நிதி

.. .. தேடற்குப், பாவைமாரொடு

.. .. சேரற்குப், பேரவா எழு நெஞ்சினாலே

.. சீர்கெட்டுப், பூமிமேல் மிகு

.. .. தீது உற்றுக், காலனார் தமர்

.. .. சேர்வுற்றுச் சூழ ஆவியும் மங்கிடாமுன்,

சோகத்துக்கு ஏதுவாம் வினை

.. .. தூரத்துப் போக, மா-மலர்

.. .. தூவிப் பொற்பாதமே தொழும் அன்பு தாராய்;

.. சூரர்க்குக் காலனாகிய

.. .. பாலற்குத் தாதையே; பொடி

.. .. தோள் எட்டிற் பூசினாய்; அனல் அங்கையானே ;

வேகத்திற்கு ஈடு இலா விடை

.. .. மேல் உற்றுப் பாரெலாம் உழல்,

.. .. மேகத்தைப் போலவே ஒளிர் கண்ட; தேவா;

.. வேதத்தைப் பாடு நாவின;

.. .. வாதிட்டுத் தேடு மாலொடு

.. .. வேதற்குக் காணொணா-வணம் நின்ற நாதா;

ஆகத்திற் கூறு மாதுமை,

.. .. ஆடைக்குத் தோலும், மா-நடம்

.. .. ஆடற்குக் காடும் நாடிய பண்பினானே;

.. ஆலித்துப் பாயும் ஓர் புனல்

.. .. வேணிப் புக்கு ஆர, மாசுண

.. .. ஆரத்தைப் பூணும் மார்புடை எம்பிரானே.


தேகத்தைப் பேண, மா-நிதி தேடற்குப், பாவைமாரொடு சேரற்குப், பேரவாழு நெஞ்சினாலே - இந்த உடம்பை வளர்ப்பதற்கும், பெரும் பொருளைச் சம்பாதிப்பதற்கும், பெண்களோடு சேர்வதற்கும் மிகுந்த ஆசை எழும் மனத்தினால்; (பேர் அவா - அதிக ஆசை);

சீர்கெட்டுப், பூமிமேல் மிகு தீதுற்றுக், காலனார் தமர் சேர்வுற்றுச் சூழ ஆவியும் மங்கிடாமுன் - நிலைகெட்டுப், பூமியில் மிகுந்த துன்பம் அடைந்து, யமதூதர்கள் வந்தடைந்து சூழ, உயிர் அழிவதன் முன்னமே; (தீது - தீமை; துன்பம்); (தமர் - பரிசனங்கள்)

சோகத்துக்கு ஏதுவாம் வினை தூரத்துப் போக, மா-மலர் தூவிப் பொற்பாதமே தொழும் அன்பு தாராய் - துக்கத்துக்குக் காரணமான வினையெல்லாம் நீங்கிப்போகும்படி, நல்ல பூக்களைத் தூவிப் பொன்னடியையே வழிபடும் பக்தியை அருள்வாயாக; (சோகம் - துக்கம்); (ஏது - ஹேது - காரணம்);

சூரர்க்குக் காலனாகி பாலற்குத் தாதையே - சூரபதுமனுக்கும் அவன் கூட்டத்தார்க்கும் காலன் ஆன மகனுக்கு (முருகனுக்கு) அப்பனே; (பாலற்கு - பாலன்+கு - பாலனுக்கு); (பாலன் - குழந்தை; மகன்);

பொடி தோள் எட்டில் பூசினாய் - எட்டுப் புஜங்களில் திருநீற்றைப் பூசியவனே;

னல் அங்கையானே - கையில் தீயை ஏந்தியவனே;

வேகத்திற்கு ஈடு இலா விடைமேல் உற்றுப் பாரெலாம் உழல், மேகத்தைப் போலவேளிர் கண்ட - மிகவும் விரைந்து செல்லக்கூடிய இடபவாகனத்தின்மேல் எல்லா உலகங்களிலும் திரிகின்ற, மேகம் போலக் கரிய நிறங்கொண்டு ஒளிவீசுகின்ற கண்டத்தை உடையவனே; (உழல்தல் - திரிதல்); (கண்ட - கண்டனே);

தேவா - தேவனே;

வேதத்தைப் பாடு நாவின - வேதத்தைப் பாடி அருளியவனே;

வாதிட்டுத் தேடு மாலொடு வேதற்குக் காணொணா-வணம் நின்ற நாதா - தம்மில் எவர் பெரியவர் என்று வாது செய்து தேடிய திருமால் பிரமன் இவர்களால் காண ஒண்ணாதபடி அளவின்றி நீண்டு நின்ற சோதி ஆன தலைவனே; (வேதன் - பிரமன்; வேதற்கு - வேதன்+கு - வேதனுக்கு);

ஆகத்தில் கூறு மாதுமை, ஆடைக்குத் தோலும், மா-நடம் ஆடற்குக் காடும் நாடிய பண்பினானே - திருமேனியில் உமைமங்கை பாகமும், ஆடைக்குத் தோலையும், பெருங்கூத்து ஆடச் சுடுகாட்டையும் விரும்பியவனே; (ஆகம் - மேனி); (மாது - பெண்); (நாடுதல் - விரும்புதல்); (அப்பர் தேவாரம் - 6.61.1 - "மாதினையோர் கூறுகந்தாய்" - உகத்தல் - மகிழ்தல்; விரும்புதல்); (அப்பர் தேவாரம் - 5.83.6 - "விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்" - விலங்கல் மெல்லியல் - மலைமகள். பாகம் விருப்பனை - பாகமாக விரும்பியவனை.);

ஆலித்துப் பாயும் ஓர் புனல் வேணிப் புக்கு ஆ, மாசுண ஆரத்தைப் பூணும் மார்புடை எம்பிரானே - ஒலித்துப் பாயும் கங்கை சடையில் புகுந்து தங்கப், பாம்பை மாலையாக அணிந்த மார்பை உடைய எம்பெருமானே; (ஆலித்தல் - ஒலித்தல்); (வேணி - சடை); (ஆர்தல் - பொருந்துதல்; தங்குதல்); (மாசுணம் - பாம்பு); (ஆரம் - மாலை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment