Saturday, April 23, 2022

6.5.16 - காவடி - மடக்கு

06.05 – பலவகை

2010-08-08

6.5.16) காவடி - மடக்கு

----------------------------------------

(கலிவிருத்தம் - "விளம் மா மா காய்" என்ற வாய்பாடு)


காவடி யிரண்டும் கருதும் மனத்தோடு

காவடி தோள்மேற் காவி நடமாடிக்

காவடி வேலா என்று தொழுவார்க்குக்

காவடி கொண்டு கந்தன் வருவானே.


பதம் பிரித்து:

கா அடி இரண்டும் கருதும் மனத்தோடு

காவடி தோள்மேல் காவி, நடம் ஆடிக்,

"கா, வடிவேலா" என்று தொழுவார்க்குக்

கா வடி கொண்டு கந்தன் வருவானே.


சொற்பொருள்:

கா - காத்தல்;

காவுதல் - சுமத்தல்;

வடி - கூர்மை; உருவம்; (சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - "கரியது வடிகொடு, தனதடி வழிபடும்அவர் இடர் கடி கணபதி வர அருளினன்");

வடிவேல் - கூரிய வேல்;


காக்கும் பாதம் இரண்டையும் விரும்பும் மனத்தோடு, தங்கள் தோள்மேல் காவடியைச் சுமந்து, ஆடிப் பாடிக், "காத்தருளாய்! கூரிய வேலை உடையவனே" என்று வணங்கும் அடியவர்களுக்குக் காக்கும் வடிவத்தோடு கந்தன் வந்தருள்வான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment