Thursday, April 21, 2022

6.5.13 - "பரவை" - மடக்கு

06.05 – பலவகை

2010-04-17

6.5.13) "பரவை" - மடக்கு

----------------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


இம்பரவை கிட்டும் எனவெண்ணி உழலாதே

உம்பரவை வீற்றிருக்கும் உயர்நிலையும் பெற்றிடலாம்

நம்பரவை அரைதனிலோர் நாணாகப் பூணுமிறை

நம்பரவை கணவர்க்கு நற்றோழர் தாள்தொழுதே.


பதம் பிரித்து:

இம்பர் அவை கிட்டும் என எண்ணி உழலாதே;

உம்பர் அவை வீற்றிருக்கும் உயர்நிலையும் பெற்றிடலாம்,

நம்பு; அரவை அரைதனில் ஓர் நாணாகப் பூணும் இறை,

நம் பரவை கணவர்க்கு நல் தோழர் தாள் தொழுதே.


சொற்பொருள்:

இம்பர் - இவ்வுலகு; இவ்விடத்தே;

உம்பர் - வானுலகு; தேவர்கள்;

அவை - 1. அப்பொருள்கள்; 2. சபை;

அரவு - பாம்பு;

அரை - இடை;

பரவை கணவர்க்கு நல் தோழர் - பரவையாரின் கணவரான சுந்தரர்க்குத் தன்னைத் தோழனாகத் தந்தருளிய சிவபெருமான்;


மனமே! இம்மையில் (நீ ஆசைப்படும்) அப்பொருள்களெல்லாம் கிட்டும் என்று எண்ணி மிகவும் முயற்சி செய்தும் அவை கிட்டாமையால் வருந்தி உழலாதே; பாம்பை அரையில் அரைநாணாக அணிந்த இறைவனும், பரவையார் கணவரான சுந்தரருக்கு நல்ல தோழருமான நம் சிவபெருமானார் திருவடியைத் தொழுது, தேவர்கள் சபையில் வீற்றிருக்கும் உயர்நிலையும் பெற்றிடலாம்; ஐயப்படாதே;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

( பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 294 -

பேர்பரவை பெண்மையினில் பெரும்பரவை விரும்பல்குல்

ஆர்பரவை யணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை

சீர்பரவை யாயினாள் திருவுருவின் மென்சாயல்

ஏர்பரவை யிடைப்பட்ட என்னாசை யெழுபரவை.

)

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment