Thursday, March 17, 2022

06.01.114 - சிவன் - பௌர்ணமி - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்


2010-01-30

06.01.114 - சிவன் - பௌர்ணமி - சிலேடை

-----------------------------------------------

பிறையணி பூரணமாய்ப் பேரொளி யோடு

பிறங்கியல்லில் ஆடுகின்ற பெற்றி - நிறையும்

பெருங்காதல் கொண்டோர்கள் பேசவரும் சீரார்

கருங்கண்டன் பௌர்ணமி காண்.


சொற்பொருள்:

அணி - அழகு;

அணிதல் - சூடுதல்;

அணி பூரணமாய் - அழகிய முழுமை ஆகி; / அணிகின்ற பூரணன் ஆகி;

பிறங்குதல் - விளங்குதல்;

அல் - இரவு; / இருள்;

ஆடுதல் - சஞ்சரித்தல்; / நாட்டியம் ஆடுதல்;

பெற்றி - தன்மை; பெருமை;

காதல் - அன்பு; / பக்தி;

பேசவரும் - 1. பேச வரும்; / 2. பேச அரும்;

பேசுதல் - சொல்லாடுதல்; / துதித்தல்;

காண் - முன்னிலை அசை;


பௌர்ணமி:

பிறை அணி பூரணமாய்ப் - பிறையாகத் தோன்றி முழுமையடைந்து;

பேரொளியோடு பிறங்கி - மிகுந்த ஒளியோடு திகழ்ந்து;

அல்லில் ஆடுகின்ற பெற்றி நிறையும் - இரவில் இயங்குகின்ற தன்மை நிறைந்தது;

பெரும் காதல் கொண்டோர்கள் பேச வரும் சீர் ஆர் - மிகவும் அன்புடைய ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசுமாறு வருகின்ற பெருமை பொருந்திய

பௌர்ணமி - முழுநிலவு;


சிவன்:

பிறை அணி பூரணமாய்ப் - பிறைச்சந்திரனைச் சூடும் பூரணப்பொருள் ஆகி;

பேரொளியோடு பிறங்கி - தேஜோமயனாகத் திகழ்ந்து;

அல்லில் ஆடுகின்ற பெற்றி நிறையும் - நள்ளிருளில் திருநடம் செய்கின்ற பெருமை உடையவன்;

பெருங்காதல் கொண்டோர்கள் பேச அரும் சீர் ஆர் - பேரன்புடைய பக்தர்கள் துதிக்க அரும் புகழ் மிக்க;

கருங்கண்டன் - நீலகண்டன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment