06.03 – மடக்கு
2010-01-26
6.3.49) தினமும் - பிழைகளை - மடக்கு
--------------
தினமும் பணிவீர் சிவனையவன் முன்னோர்
தினமும் மதில்செற்றான் தீச்சேர் - தினமும்
பிழைகளை எண்ணுநமன் பேணிப்போ மாறு
பிழைகளை காப்பெம் பிரான்.
பதம் பிரித்து:
தினமும் பணிவீர் சிவனை; அவன் முன் ஓர்
தினம் மும்மதில் செற்றான்; தீச் சேர் தினம், உம்
பிழைகளை எண்ணும் நமன் பேணிப் போமாறு,
பிழை களை காப்பு எம் பிரான்.
தினமும் - 1. தினந்தோறும்; 2. தினம் மும்; 3. தினம் உம்;
பிழைகளை - 1. குற்றங்களை; 2. பிழையைத் தீர்க்கும்;
செறுதல் - அழித்தல்;
களைதல் - நீக்குதல்;
காப்பு - பாதுகாவல்; இரட்சை;
தினமும் பணிவீர் சிவனை - தினந்தோறும் சிவபெருமானைப் பணியுங்கள்;
அவன் முன் ஓர் தினம் மும்மதில் செற்றான் - அவன் முன்னொரு நாள் முப்புரங்களை அழித்தான்;
தீச் சேர் தினம் உம் பிழைகளை எண்ணும் நமன் பேணிப் போமாறு - (உயிர்போய் உடல்) தீயில் சேர்கின்ற நாளில் உங்கள் பாவங்களை எண்ணுகின்ற இயமன் உங்களை வணங்கிச் செல்லும்படி;
பிழை களை காப்பு எம் பிரான் - (உங்கள்) குற்றங்களையெல்லாம் நீக்கிவிடும் காப்பாக எம்பெருமான் இருப்பான்;
(அப்பர் தேவாரம் - 5.92.7 -
படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன்மின் நமது ஈசன் அடியரை
விடைகொள் ஊர்தியினான் அடியார்குழாம்
புடைபுகாது நீர் போற்றியே போமினே.)
(சுந்தரர் தேவாரம் - 7.55.1 -
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத
.. அவனைக் காப்பது காரணமாக
வந்த காலன்றன் ஆருயிரதனை
.. வவ்வினாய்க்கு உன்றன் வன்மைகண்டு அடியேன்
எந்தை நீஎனை நமன்தமர் நலியில்
.. இவன்மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி அடைந்தேன்
.. செழும்பொழில் திருப்புன்கூர் உளானே.)
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment