Monday, March 14, 2022

6.3.47 - வானஞ்சு - கண்டம் - மடக்கு

06.03 – மடக்கு


2010-01-10

6.3.47) வானஞ்சு - கண்டம் - மடக்கு

--------------

வானஞ்சு வாயரவால் வாரிகடை நாளிலெழு

வானஞ்சு வாதைசெய வாடியுய் - வானஞ்சு

கண்டந் தவிர்த்தருளாய் கண்ணுதலே என்னவது

கண்டந் தரித்தான்நம் காப்பு.


பதம் பிரித்து:

வான், அஞ்சு வாய் அரவால் வாரி கடை நாளில் எழு

வான்-நஞ்சு வாதை-செய, வாடி உய்வான், "அஞ்சு

கண்டம் தவிர்த்து அருளாய் கண்ணுதலே" என்ன, அது

கண்டம் தரித்தான் நம் காப்பு.


வான் - 1. தேவர்கள்; 2. பெரிய; 3. ஒரு வினையெச்ச விகுதி;

அஞ்சு - 1. ஐந்து; 2. அஞ்சுகின்ற;

நஞ்சு - 1. விடம்; 2. நைந்து என்பதன் போலி; (நைந்து - மனம் குழைந்து);

வானஞ்சு - 1) வான் அஞ்சு (தேவர்கள் ஐந்து); 2) வான் நஞ்சு (பெரிய விடம்); "வல்+நஞ்சு" (கொடிய விடம்) என்பது "வால்+நஞ்சு" என்று நீட்டல் விகாரம் பெற்றதாகவும் கொள்ளல் ஆம்; 3) உய்வான் அஞ்சு / உய்வான் நஞ்சு (நைந்து); (உய்வான் = உய்வதற்காக);

கண்டம் - 1. ஆபத்து; 2. மிடறு; கழுத்து;

வாரி - கடல்;


வான், அஞ்சு வாய் அரவால் வாரி கடை நாளில் எழு - தேவர்கள் ஐந்தலை நாகமான வாசுகியைக் கயிறாகக்கொண்டு கடலைக் கடைந்த சமயத்தில் எழுந்த;

(பெருங்கதை - உஞ்சைக்காண்டம் - "ஐந்தலை உத்தி அரவு நாணாக, மந்தர வில்லின் அந்தணன் விட்ட, தீவாய் அம்பு திரிதரு நகரின்" - உத்தி - படப்பொறி. அரவு - வாசுகி);

வான் நஞ்சு வாதை-செய, வாடி உய்வான் - பெரிய கொடிய ஆலகால விஷம் மிகவும் துன்பம் செய்ய, அதனால் வருந்தி, உய்வதற்காக;

"அஞ்சு கண்டம் தவிர்த்து அருளாய் கண்ணுதலே" என்ன - "யாம் அஞ்சுகின்ற இந்த ஆபத்தைப் போக்கி அருள்வாய் முக்கண்ணனே" என்று வேண்ட;

(உய்வான் நஞ்சு, "கண்டந் தவிர்த்து அருளாய் கண்ணுதலே" என்ன --- என்றும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்; அப்படி எனில், "மனம் நைந்து, உய்யும்பொருட்டு, இந்த ஆபத்தைப் போக்கி அருள்வாய் முக்கண்ணனே என்று வேண்ட");

து கண்டம் தரித்தான் நம் காப்பு - அவ்விஷத்தை உண்டு கண்டத்தில் வைத்த சிவபெருமானே நம் காவல்/துணை;


இலக்கணக் குறிப்பு:

வினையெச்சம், "செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர்" என்னும் ஒன்பது வாய்பாடுகளில் அமையும். "வான், பான், பாக்கு" ஆகிய விகுதிகளைப் பெற்றும் வரும்.

வான் : மழை பெய்வான் மரம் வளர்ப்போம் = மழை பெய்ய மரம் வளர்ப்போம்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment