Tuesday, March 15, 2022

6.3.48 - மருளார் - தருவாய் - மடக்கு

06.03 – மடக்கு


2010-01-23

6.3.48) மருளார் - தருவாய் - மடக்கு

--------------

மருளார் மனத்தர் வழியறியார் பின்னேன்

மருளார் அடியார்க்கும் உண்டோ - மருளார்

தருவாய் அருளெனினும் சங்கரன் ஓர்வான்

தருவாய் அளிப்பான் தமர்க்கு.


பதம் பிரித்து:

மருள் ஆர் மனத்தர் வழி அறியார்; பின் ஏன்

மருளார்? அடியார்க்கும் உண்டோ - மருள்? ஆர்

"தருவாய் அருள்" எனினும், சங்கரன் ஓர்வான்

தருவாய் அளிப்பான் தமர்க்கு.


மருள் - 1. மயக்கம்; 2. அச்சம்;

மருளுதல் - 1. மயங்குதல்; 2. அஞ்சுதல்;

ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்

ஆர் = யார்;

தரு - கற்பகமரம்;

மருளார் - 1. மயக்கம் மிகுந்த; 2. அஞ்சமாட்டார்; 3. அச்சம்; யார்;

ஓர்வான் - 1. திருவுளம் செய்வான்; 2. ஒப்பற்ற வானுலக;

தரு - மரம்;

வான்தரு - கற்பகமரம்;

தருவாய் - 1. கொடுப்பாய்; 2. கற்பகமரமாக;

தமர் - தொண்டர்;


மருள் ஆர் மனத்தர் வழி அறியார் - அறியாமை மிகுந்த மனம் உடையவர்கள் தக்க நெறியை அறியமாட்டார்கள்;

பின் ஏன் மருளார்? - பிறகு அவர்கள் ஏன் அஞ்சமாட்டார்கள்? (அதனால்தான் அவர்கள் அஞ்சுகின்றார்கள் என்பது குறிப்பு);

அடியார்க்கும் உண்டோ மருள்? - பக்தர்களுக்கும் அச்சம் உண்டோ? (இல்லை என்பது குறிப்பு);

ஆர் "தருவாய் அருள்" எனினும் சங்கரன் ஓர்வான் தருவாய் அளிப்பான் தமர்க்கு - "அருள்புரிவாயாக" என்று யார் தொழுதாலும் சங்கரன் திருவுளம் செய்வான்; (அப்படித் திருவுளம் செய்து) ஒப்பற்ற கற்பக மரத்தைப் போல் தொண்டர்களுக்கு வரம் தருவான்; ("ஓர்வான்" என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாக இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம். "சங்கரன் ஓர்வான்" & " ஓர் வான்தருவாய் அளிப்பான்");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment